விரல்களைக் காதலித்தவள்
அவள் முதல் வரிசையில் அமர்ந்திருப்பாள். ஆசிரியர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவள். அவள் இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் போது அவள் வகுப்பில் பாடம் நடத்த எனக்கு தினம் ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்து.
அவள் யாரிடமும் அதிகம் பேசாமாட்டாள். அவளது பெற்றோர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது நான் பணியாற்றிய துறைக்கு வருவார்கள். எங்கள் அனைவருக்கும் நல்ல நண்பர்கள்.
அவள் மூன்றாம் ஆண்டுப்படிப்பை முடிக்கும் முன்பே என்னை வேறு ஊருக்கு மாற்றிவிட்டார்கள்.
பதினைந்து ஆண்டுகள் கழித்து முன்பு பணியாற்றிய ஊருக்கே மாற்றலாகி வந்தேன். இப்போது அதே ஊரில் வேறு கல்லூரியில் பணி. எனது முன்னாள் மாணவர் ஒருவர் நான் முன்பு பணியாற்றிய கல்லூரியில் பணியாற்றி வருபவர். ஒரு நாள் அவர் என்னைச் சந்தித்தபோது, " அய்யா உங்கள் மேனாள் மாணவி ஒருத்தியும் என்னுடன் பணியாற்றுகிறார். நீங்கள் வகுப்பறையில் இடது கையில் புத்தகத்தைப் பிடித்துக்கொண்டு பாடம் நடத்தும்
போது உங்கள் விரல்களை அந்த மாணவி ரசிப்பாராம். " அவரது அழகான கை, அழகான விரல்களை தினமும் ரசித்துப்பார்ப்பேன்" என்று துறையில் பலமுறை கூறினார்.
எனக்கு வியப்பாக இருந்தது. இப்படியும் ஒரு ரசனையா? நான் அந்தப் பெண்ணின் பெயர் என்னவென்று அவரைக் கேட்கவில்லை.
ஒருநாள் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்குப் போனது போது அந்த மாணவர் அதே பணிக்கு வந்த ஒரு ஆசிரியைப் பார்த்து "சிந்து, இங்க வா" என்றார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு முதல் வரிசையில் நான் பார்த்த அந்த மாணவிதான் வந்தவர். "அய்யா இந்த சிந்து தான் அய்யா உங்கள் விரலைக் காதலித்த மாணவி" என்றார். சிந்து என்னைப் பார்த்த மகிழ்ச்சியுடன் வெட்கப்பட்டார். பின்
என் நலன் பற்றி விசாரித்தார்.
அவர் வசதியான குடும்பம் என்றாலும் முதிர் கன்னியாக இன்றும். அழகான பெண். எல்லோரிடமும் கனிவாகப் பழகுபவர். காதல் தோல்வியா அல்லது சாதகம் செய்த பாதகமா என்று தெரியவில்லை.