தொட்டபின்பு

நீ தொட்டபின்பு
என்னுள் தான்
எத்தனை
மழைத்துளிகள்

கன்னம்
தடவியதும்
கஜா புயலின்
மெல்லிய உரசல்
என்னுள்

என்னைச் சுற்றிச் சுற்றி
வந்து தீண்டுவாய்
கதை பேசிகொண்டே
தலை கோதுவாய்
போர்த்தி விட்டு
அகம்புறம் அளப்பாய்
என் தேவை கேட்பாய்
அதைத் தீர்த்தும் வைப்பாய்

எத்தனை முறை
என்னைத் தீண்டி
சாய்த்திருப்பாய்
இருப்பினும்
எல்லாமே
புதுப்புதுஅனுபவம்

முன்னே அமர்ந்து
உன்விரல்சுமந்த
அந்த கணமே
நிகழ்காலம் வழுக்கி
நெடுந்தூரம் பறக்கிறேன்
நீண்ட இறக்கைகளுடன்

யார்முன்னும்
இப்படிநான் மதிமயங்கி
கிடந்ததே இல்லை
உன் விரல்மொழித்
திணிப்பை
எப்போதும் நான்
எதிர்ப்பதே இல்லை

உன் விரலுக்குதான்
எத்தனை விசமங்கள்
எனக்கு முன்னால் சாய்ந்தவருக்கு
தனி பாணியிலான தீண்டல்
எனக்கு ஒரு பாணி
பின்னால் வருபவருக்கு ஒரு பாணி
கஸ்டமர் தேவைகளுக்கேற்ப
மயக்கும் சேவைதான்
உன் தொழில் ரகசியமோ?

தார்ச்சாலையா இருந்த
என் மேனியை
பூஞ்சோலையாக்கியது
'நீ தெளித்த நீர்த்துளிகள்'

"போதுமா இன்னும்
குறைக்கட்டுமா ?"
நீ சொன்ன உடன்
புவியீர்ப்புவிசை
பூமிக்கு இழுத்தது

வழவழப்பான முகவெட்டுக்கும்
வகிடெடுத்த முடிவெட்டுக்கும்
உன்னைத்தவிர
வேறுயாரை நானறிவேன்
பராபரமே !

-பாரதிநேசன்
07✂02✂2019

எழுதியவர் : பாரதிநேசன் (16-Feb-19, 4:56 pm)
சேர்த்தது : பாரதிநேசன்
பார்வை : 79

மேலே