ஓர் முதிர்கன்னியின் இரவு
வறுமைக்கு வாழ்க்கை பட்டதால்
வேறு யாருக்கும் வாழ்க்கை படாமல்
நான்
என் குடும்ப சூழ்நிலை
எனக்கு தெரியும் - ஆனால்
வயதிற்கும் உணர்ச்சிக்கும் ?
நெட்டையாய்
குட்டையாய்
மாநிறமாய்
அட்ட கருப்பாய்
இப்படி மாறி மாறி
வருவார்கள் போவார்கள்
பெண் பார்க்கும் நாடகத்தில்
கதாநாயகர்களாய்
ஒவ்வொரு நாடகத்தின் முடிவிலும்
கண்ணீரில் நானும்
என் அம்மாவும்
என்னோடு படித்தவர்கள்
பழகியவர்கள் என
அனைவரின் திருமணத்திற்கு
சென்று வந்த பின்
என் வீட்டு கண்ணாடியின்
ஏளன பார்வைக்குத்தான்
இன்று வரை புரியவே இல்லை
அர்த்தம்
இது இப்படி என்றால்
இரவுகள் . . . .
ஏன் வருகிறதென்றே தெரியாமல்
வந்து செல்லும் கனவுகள்
முதலிரவை பார்க்காமலேயே
ஆயுள் முடிந்து விடுமோ எனும் பயம்
மேகமும் மேகமும் உரசி கொண்டால்
ஏக்கம் மட்டும் பெருக்கலாகும்
வந்து பார்த்து சென்றவர்களின்
பதிலுக்காய் தொலைந்து போன
உறக்கங்கள்
அடிக்கடி கொன்று போகும்
உணர்ச்சிகள்
இடியாய் கேட்கும்
தூரத்து முத்த சத்தம்
இன்று முதலிரவிற்கு போன
தோழியின் ஏளன பார்வை
என்மேல் மட்டும்
புயலாய் மோதும்
அனைவருக்குமான தென்றல்
கனவில் மட்டுமே
அடிக்கடி நடக்கும் என் திருமணம்
என்னை போலவே
என்னோடு வாழ்க்கை படாமலே
இருக்கும் என் உறக்கம்
தயவு செய்து யாரும்
ஏளனமாய் பார்க்காதீர்கள்
முதிர் கன்னிகளை
முதிர்கன்னியின் இரவும் பகலும்
நரகத்தை விடவும் கொடியது