மனித சாத்தானால் உருவான இரத்த ஆறு
அன்பில்லா மனம் உயிரில்லா பிணமாய்,
பூமிக்கு பாரமானதை மறந்து உலகமே நயவஞ்சகமாய்,
என்னை பிறர் ஏமாற்றியதாய் வீண் கற்பனையில் கடும் கோபம் கொண்டே அழிக்கும் ஆயுதமாக என்னை நானே அழிப்பதற்குத் துணிந்தேன் வீரனைப் போல்.
கறிக்கும் உதவாத என் விரக்தியை புரிந்து என் வீட்டில் வாழும் என் உடன்பிறப்புகளை அழிக்கவே கச்சிதமாய் அந்த மனித சாத்தானும் வேதம் ஓதினான்.
அவன் ஓதிய வேதத்தினாலே வெறி என்னுள் ஏறிட சாதகமாய் என் தேவைகளை எல்லாம் தீர்த்தான் அவன்.
என் தேவைகள் தீர சாத்தானை முழுமையாக நம்பியே என் இரத்தத்தின் இரத்தங்களை விரோதிகளாக எண்ணி அழிக்கவே துடித்தேன்.
இது தான் சமயம் என்று வாளைக் கையில் கொடுத்து எதிர்படுவோரையெல்லாம் வெட்டி வீழ்த்திடு என்றான்.
வீராவேஷத்தோடு எதிர்படுவோரையெல்லாம் வெட்டி வீழ்த்தினேன்.
என்னைப் போல் பலரும் அந்த சாத்தான் பிடியில் சிக்கி வெறியேற்றப்பட்டிருந்ததால் வீட்டு கால்வாயெல்லாம் இரத்தம் வெறியேற,
ஆறு, குளங்களில் ஏற்பட்டது இரத்தப் பெருக்கு.
வெட்டி வீழ்த்தி தாகமெடுக்க ஓடிச் சென்று இரு கைகளாலும் தண்ணீரை அள்ளிப் பருக எத்தனிக்கையில் உணர்ந்தேன் கையெல்லாம் என் உடன்பிறப்புகளின் இரத்தம்.
கோபத்தோடு சாத்தானை தேட காணவில்லை.
( நாம் யார் என்பதையும், நாம் கடமை என்ன என்பதையும் நாமே தீர்மானிக்க வேண்டும்.
சாத்தானின் வேதம் அழிக்கக்கூடியது. )