வாழ்க்கை- ஒரு கோமாளி

நான் போகும் பாதையில்
முட்களை போட்டாய்
காயங்களால் இதயத்தை
கீறினாய்
ஒரு துப்பாக்கி நூறு மனிதர்களை
கட்டுப்படுத்துவது போல
நீ எனக்கு அச்சத்தின் எல்லையை காட்டினாய்.

நடக்கும் போதெல்லாம் தடைக்கற்கள் தான் நீ எனக்கு பரிசளித்தாய்.
உன் பரிசுகளுக்கு ஓர் ஏளனப் பார்வை வீசினேன்.
லாவகமாக தடை தாண்டினேன்.

என்ன ஒரு குரூர புத்தி உனக்கு
மீண்டும் உன் நொண்டிக் கால்களால்
தட்டி விழ வைத்தாய்..
நட்பில் துரோகம் காட்டினாய்.
காதலித்த பாவத்திற்காக பித்துக்குளி ஆக்கிவிட்டாய்.
கைதியாய் வாழ வைத்தாய்
காலமெல்லாம் கைகட்டி கூலியாய் நிற்க வைத்தாய்.
ஒரு வாய் சோற்றுக்கு ஊரெல்லாம்
சுற்ற வைத்தாய்.
யுத்த களத்தில் மீண்டு வந்தேன்
இரத்த களம் காட்டினாய்.
பசியாற வழியின்றி
பட்டினியாய் கிடக்க வைத்தாய் .
புரூட்டஸ் போல்
நலன் என்று நினைத்து
நாசம் செய்தாய்.
நடை தளர்ந்தேன்
நரை தந்தாய்
உற்றார் ச்சீ போ என்றனர்.
ஊரார் பிச்சை போட்டனர்.
வலி தாளாமல் கண்ணீர் கசிந்தது
விம்மி அழுதேன்.
தன்மானம் தடுத்தது
உன் முன்னே அழுவதா?
அது கூடாதே .

நான் ஓடவும்
நீ என்னை விரட்டவும்
நாட்கள் சரியாக இருந்தது.
நீ தந்த கண்ணீர்
அந்த கருப்பு பெட்டிகளை
சலவை செய்தது.
கல்லறை கை காட்டி அழைத்தது.
நானும் அயர்ந்து உறங்கி விட்டேன்.
இனி உன்னால் விரட்ட முடியாது.
ஒரு வீரனை தேடிப்போவாய்
அவனை கோழையாக மாற்ற
இறுதில் நீ தோற்றே போவாய்
சிரித்து கொண்டே
உன்னை அவன் கொன்று விடுவான். செங்கடலில் மூழ்கடிப்பான்.
அமேசன் காட்டின் உயர் மரங்களில்
தூக்கிலிடுவான்.
கர்வம் கொள்ளாதே
எனக்கு சரி நிகர் எதிரி நீ அல்ல.
நீ எப்போதும் எனக்கு கோமாளி.
நான் உன்னை வென்று கொண்டே செல்லும் அறிவாளி.

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (17-Feb-19, 11:12 pm)
சேர்த்தது : பர்வின் ஹமீட்
பார்வை : 144

மேலே