அப்துல் கலாம் ஐயா

அப்துல் கலாம் ஐயா!



பாம்பன் தீவில்

பசியின் பிடியில்

வறுமையின் சிறையில்

1931ஆம் ஆண்டு

அக்டோபர் 15 ஆம் நாள்

ஜைனுலாப்தீனுக்கும்

ஆசியம்மாவுக்கும்

மகனாக அவதரித்தவரே

நம் கலாம் ஐயா!

வறுமைக்கோட்டையைத்

தகர்த்தெறிந்து

கடின உழைப்பினால்

களம் பல கண்ட

ஏவுகணை நாயகனே

நம் கலாம் ஐயா!

அற்புதமான பேச்சாற்றலால்

மாணவர் நெஞ்சம் கவர்ந்த

நல்லாசானே நம் கலாம் ஐயா!

இளைஞருக்கெல்லாம்

இளைஞராய் நின்று

என்றென்றும் இலக்கணமானவரே

நம் கலாம் ஐயா!

துணைக்கோளாம் ரோகினி ஒன்றை

விண்ணில் அனுப்பி

தாயகத்தின் புகழை

தரணி போற்றச் செய்தவரே

நம் கலாம் ஐயா!

பூமி அழிவுப்பாதையில்

அல்லல்படும் போதெல்லாம்

ஆண்டவனே பூமியில்

அவதரிப்பது வழக்கம்

அன்று பாரதப்போரில்

கணைகொண்டு

கயவர் நெஞ்சத்தை

நடுநடுங்கச் செய்தவரே

வில்லாளன் அர்ச்சுனன்!

இன்று பாரதபூமியில்

கணை கொண்டு

ஏவுகணை கொண்டு

நாசாவை விரட்டியடித்த

விஞ்ஞானியே

நம் கலாம் ஐயா!

அப்துல் கலாம் ஐயா!

குண்டுதான்

அணுகுண்டு தான்

பொக்ரானில்

முகிலைக் கிழித்து

ஆர்ப்பரித்துச் சென்றது கண்டு

அளவற்ற பயத்தால்

அமைதி இழந்தது

ஆணவம் கொண்ட அமெரிக்கா

தேகத்திற்கு மூப்புண்டு

தேகம்கொண்ட ஆன்மாவிற்கு

மூப்பில்லையென்பதை

பாருக்குப் பறைசாற்றியவரே

கனவைக் காணச்சொன்னீர்

நனவாய் நீர் இல்லாததால்

கனவை மட்டுமே காண்கின்றோம்..

இப்பூவுலகில் உமது பூதவுடல்

சேவை செய்திட்டது

போதுமென எண்ணித்தான்

சொர்க்கத்தின் வாயிலில்

சரணம் அடைந்தாயோ!

ஐயகோ! என் செய்வோம் ஐயனே!

கண்ணீர்ச் சுமைதன்னை சுமக்க

எமது விழிகளுக்கும் சக்தியில்லை

இது புராணகாலமாய் மட்டும்

இருந்திருந்தால்,

மார்கண்டேயனைப்போல

தவமிருந்து

தலைவனாம் உம்மைக் காக்க

ஓராயிரம் வரம் வேண்டியிருப்போம்..

அது மட்டுமா ஐயனே!

சாவித்திரி தேவியைப் போல்

எமனிடம் போராடி

உமது இன்னுயிரையும்

மீட்டுத் தந்திருப்போம்!

இராமேசுவர மண்ணில்

அவதரித்த நீர்

சாதி மத பேதமின்றி

எம்மதமும் சம்மதமென்று

தசரத இராமனைப்போல்

வாழ்ந்திட்டாய் ஐயனே!

இந்திய இதயமெல்லாம்

இரத்தக்கண்ணீர் வடிக்குதய்யா

உம் பிரிவு கண்டு…

நாங்கள் வடித்த

கண்ணீரால் தான்

இராமேசுவரக் கடல் நீரே

உப்பாய் மாறியதோ

என்றெண்ணம் தோன்றுதய்யா!

நாவும் பிறழ்கின்றது

வார்த்தைகளும் வெளிவர மறுக்கின்றது

உம் பிரிவென்னு,ம் மீளாத்துயரில்

தொண்டைக்குழியும் வார்த்தைகளையடைத்து

விம்முகின்றதய்யா!

என் செய்வோம் ஐயா!

கலாம் ஐயா!

நீரின்றி விஞ்ஞானமும்

வேரற்ற மரமாய் ஆனது

நீர் ஈந்தளித்த சிறகுகளாம்

அக்கினிச் சிறகுகள் கொண்டே

நிச்சயம் ஒரு நாள் வல்லரசாவோம்

அந்நிகழ்வும் வெகு தொலைவில் இல்லை

வாழ்க! பாரதம்!

வளர்க! பாரதம்!

வாழ்க! கலாம் ஐயாவின் புகழ்!

வெல்க! கலாம் ஐயாவின் கனவு!



பாரியூர் தமிழ்க்கிளவி

எழுதியவர் : பாரியூர் தமிழ்க்கிளவி (24-Feb-19, 4:02 pm)
சேர்த்தது : PULAVARSUMATHI
Tanglish : apthul kalaam aiyaa
பார்வை : 41

சிறந்த கவிதைகள்

மேலே