நிலவே வாராயோ

கஞ்ச முகத்தழகும் கன்னக் குழியழகும்
***கன்னல் மொழியழகும் கற்றைக் குழலழகும்
கொஞ்சும் குரலழகும் கொவ்வை இதழழகும்
***கொண்டை மலரழகும் கொய்யாக் கனியழகும்
இஞ்சி இடுப்பழகும் இன்பக் கவியழகும்
***இல்லா இடையழகும் எஃகு மனத்தழகும்
வஞ்சி வடிவழகும் வண்ண நகத்தழகும்
***வட்ட பொட்டழகும் வண்டு விழியழகும்

வெண்டை விரலழகும் வெட்கப் படுமழகும்
***வெல்லப் பேச்சழகும் வெற்றித் திமிரழகும்
தண்டை ஒலியழகும் சங்கு கழுத்தழகும்
***தங்க வளையழகும் தந்த நிறத்தழகும்
பெண்மை மிகுவழகும் பின்னல் சடையழகும்
***பிச்சி மணத்தழகும் பெய்யும் இசையழகும்
வண்ண வுடையழகும் வங்கி வளைவழகும்
***மங்கை மடியழகும் மங்கா முகத்தழகும்

முல்லைச் சிரிப்பழகும் முத்துப் பல்லழகும்
***முத்தச் சுவையழகும் மொத்த வுருவழகும்
அல்லி யடியழகும் அள்ளி யணையழகும்
***அன்ன நடையழகும் அன்றில் உறவழகும்
நல்ல குணத்தழகும் நங்கை நாவழகும்
***நண்டுப் பிடியழகும் நன்றி சொலுமழகும்
சொல்லின் பொருளழகும் சொல்லும் விதமழகும்
***சுட்டித் தனமழகும் சொத்தாய்க் கற்பழகும்

என்னை மயக்குதடி இதயம் தவிக்குதடி
***இளமை கொதிக்குதடி ஏக்கம் பிறக்குதடி
அன்பி லுருகுதடி அச்சம் விலகுதடி
***அன்ன முன்நினைவில் அகிலம் மறக்குதடி
தென்றல் வருத்துதடி திங்கள் எரிக்குதடி
***செந்தேன் புளிக்குதடி சித்தம் கலங்குதடி
நின்றன் நினைவுகளில் நித்தம் துடிக்கின்றேன்
***நெஞ்சம் குளிர்விக்க நிலவே வாராயோ ??

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Feb-19, 12:25 am)
பார்வை : 64

மேலே