வண்ணப் பாடல் - காதல்

சந்தக் குழிப்பு
******************
தந்தன தானா தந்தன தானா
தந்தன தானா . . . . தனதானா

என்கன வேவா மஞ்சுள மேவா
என்துணை நீயே . . . . உணராயோ ?
இன்றுனை நேராய் நெஞ்சொடு சேயாய்
இன்புடன் கையா . . . . லணைவேனோ ?

தென்றலி னூடே சென்றிடு வாயோ
செங்கதிர் மேலே . . . . வருவேளை !
தெங்கிள நீராய் வண்டமி ழைநான்
சிந்திட வேநீ . . . . இளகாயோ ??

அன்பொடு தாராய் பஞ்சணை மேலே
அஞ்சிட லாமோ . . . . அழகேசொல் !
அந்தமி ழாலே பொங்கிடும் பாவாய்
அங்கயல் மீனாம் . . . . விழியாளே !

கண்டத னாலே கொஞ்சிட லாமா
கண்குளிர் வாயோ . . . . கனிவோடே !
கம்பனின் தோழா என்றெனை நீயே
கந்தளம் போலே . . . . ஒளிர்வேனே ...!!

(கந்தளம் - பொன் )

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Feb-19, 12:44 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 89

மேலே