நன்றி சொல்வோம்

பொலிவுடன் பெருமை மிக்க
***புண்ணிய பூமி தன்னில்
நலமுடன் வூன மின்றி
***நல்லதோர் பிறவி தந்த
உலகினைப் படைத்துக் காக்கும்
***ஒப்பிலா இறையைப் போற்றி
மலரடி தொழுது நாமும்
***மகிழ்வுடன் நன்றி சொல்வோம் !

கருவிலே திங்கள் பத்துக்
***கனிவுடன் சுமந்து பெற்றுப்
பெருந்துணை யாயி ருந்து
***பிள்ளையைப் பேணி காக்கும்
திருமகள் வடிவாம் தாயின்
***திருவடி பணிந்து என்றும்
அருவியாய் அன்பைக் கொட்டி
***அகம்நிறை நன்றி சொல்வோம் !

பிறந்தது முதலாய் நெஞ்சில்
***பிரியமாய்ச் சுமக்கும் தந்தை
அறநெறி புகட்டி வாழ்வில்
***அறிவொளி கூட்டும் ஆசான்
பொறுப்புடன் சுமைக ளேற்கும்
***பொறுமையிற் சிறந்த இல்லாள்
உறவுக ளோடு நட்புக்(கு)
***உரிமையாய் நன்றி சொல்வோம் !

.பொழுதொடு கழனி சென்று
***பொறுப்புடன் நாற்று நட்டு
முழுமனத் தோடு ழைத்தும்
***முழுப்பயன் என்றும் கிட்டாப்
பழுதிலா மண்ணின் மைந்தர்
***பசித்தவர்க் குணவு நல்கும்
உழுபவர் தமக்கு நாளும்
***உண்மையாய் நன்றி சொல்வோம் !

அல்லல்கள் சூழ்ந்த போதும்
***அல்லிலும் கண்வி ழித்துத்
தொல்லைகள் நமையண் டாமல்
***துணிவுடன் நிமிர்ந்து நின்று
எல்லையில் காவல் காக்கும்
***இராணுவ வீரர் கட்குச்
சொல்லுவோம் இருகை கூப்பிச்
***சுந்தரத் தமிழில் நன்றி !

தமக்கென எதுவும் சேர்க்காத்
***தலைமையை மனத்தால் வாழ்த்தி
சுமையென எண்ணி டாமல்
***சோர்வினை விரட்டி என்றும்
நமக்கென உழைக்கும் நல்லோர்
***நலம்பெற வேண்டு மென்றே
உமையவள் தாள் வணங்கி
***உளமாற நன்றி சொல்வோம் !

மழைதரும் வனங்க ளோடு
***மலைகளும் கடலும் வானும்
அழகுடன் நிலத்தில் பாயும்
***ஆறுகள் வளமை கூட்டச்
செழிப்பொடு விளங்கும் செய்யும்(செய்- வயல்)
***சீரொடு சிறப்பும் சேர்க்க
தொழுதுநாம் இயற்கை பேணி
***தொடருவோம் நன்றி சொல்லி !

வளமையாய் வற்றா வூற்றாய்
***வலம்வரும் தென்றல் காற்றாய்
ஒளிர்ந்திடும் உலக மெங்கும்
***ஒலிக்கையில் அழகு கொஞ்சும்
இளமையாய் இன்பத் தேனாய்
***இணையிலாச் செந்தமி ழாளைக்
களிப்புடன் கூடி வாழ்த்திக்
***கனிவுடன் நன்றி சொல்வோம் !

சேவையாய் முகநூல் தன்னில்
***செவ்வனே மரபை மீட்கக்
காவலாய்த் தானி ருந்து
***கடமையை வகையாய்ச் செய்யும்
பாவலர் கற்பிக் கின்ற
***பைந்தமிழ்ச் சோலைக் கென்றும்
ஆவலாய் நன்றி சொல்லி
***அனைவரும் வாழ்த்து வோமே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Feb-19, 12:47 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
Tanglish : nandri solvom
பார்வை : 58

மேலே