குளக் கரையில்

குளக் கரையில்


குளித்து முடித்து
படித்துறையில் நின்று
ஒரு பக்கம் தலை சாய்த்து
கூந்தலைத் துடைத்துக்
கொண்டிருந்த நீ


வேளி மலை மேலிருந்து
விழுந்தக் கதிரொளியில்
ஒரு பொன்னிற தேவதையாய்
ஒளிர்ந்தாய் ..


நான் குளித்து முடிக்கும் வரை
கூந்தலைத் துடைத்தபடி
நேரம் கடத்துவது
நன்றாகவேப் புரிந்தது..


உடை மாற்றி நான்
தயாரான போது
துவைத்த துணிகளைத்
தோளில் போட்டு, எனை நோக்கி
சிறு ஜாடை காட்டி
நடக்கத் துவங்கினாய்..


நான் பின்னால்
உன் நடையை ரசித்தபடி
வந்து கொண்டிருந்தேன்


ஆளரவமற்ற இடத்தில்,
என்னிடம் நீ ,
"எதுக்கு இவளவு முடி ..
பின்னால் தொங்கும்
கூந்தலை வெட்டு,” என்றாய்..


நான் எதுவும் சொல்லாமல்
லேசாகத் தலையசைத்தேன்


உன் வீடு வந்ததும்
படியேறும் போது
ஒரு வசீகரப் புன்னகையின்
வீரிய விதையொன்றை
எனை நோக்கி வீசிச் சென்றாய்..


என் வீட்டுள் வந்ததும்
அவ்விதை முளைவிட்டு
உன் புன்னகை
விருட்சமாய் வளரத் துவங்கியது


மறுநாள்,' மிலிட்டரி கட்டுடன்'
வந்த என்னிடம்,
" சகிக்கல.. இப்படியா
வெட்டச் சொன்னேன்,” என்றாய்


" வெட்டுவது வெட்டிவிடலாம்..
வளர்ப்பது கஷ்டம்,” என்றேன்


மீண்டும் புன்னகைத்தபடியே
"முடிதானே வளந்திரும்",
என்றுசொல்லி புன்னகைத்து
நீ நடந்து கொண்டிருந்தாய்.


நான் என் பின்னந்தலையை
தடவிக் கொண்டேன்..
முட்களாய் குத்தியது
ஒட்ட வெட்டிய முடி...

எழுதியவர் : பத்மநாபபுரம் அரவிந்தன் (2-Mar-19, 10:07 am)
பார்வை : 50

மேலே