தவமாய்

தவங்கிடந்த பெருங்கனவொன்றின்
வாயிலில் நிற்கிறேன்,
தட்டினால் இழுக்கவும்
உடைத்தால் தள்ளிடவும் யாரோ நிற்க குழம்பிக் கடக்கிறது என் குளம்புகள்.....

பெண்மையின் பருவமதை நான் கடக்க
மிச்சமாய் ஒன்று மட்டும் தான் இருக்க,
ஆடிய தொட்டிலில் அடைந்த அத்தனையும்
ஆட்டிய தொட்டிலில் மாண்டு போனது....

அத்தனைக்குமானதொரு ஒற்றைப் புள்ளியாய்
அடுக்களைக்குள் இன்றைய பொழுதும்,
அவசரங்களில் புலர்கிறது நாள்...

" கூரிய செவ்வேலும்
கீறிய அவ்வாளும்......... "
அடுத்த வார்த்தைக்கான முனைப்பினில்
அடுக்களையில் நின்றவளை,
'இன்னும் என்ன பன்ற' என்ற குரலில்
உடைந்து விழுந்திருந்தது
செவ்வேலும், அவ்வாளும்..........
----சக்தி...

எழுதியவர் : சக்தி (16-Mar-19, 9:55 pm)
சேர்த்தது : Shakthi
பார்வை : 100

மேலே