என் உலகில் நான்
மடியாத பகல்
விடியாத இரவு
துரத்தி வரும் தென்றல் காற்று-அதில்
தென்னங்கன்றின் தெம்மாங்குப் பாட்டு,
வண்ண வண்ண வயல்வெளி நாற்று-அது
வாடி வதங்கும் ஏழைகளின் ஊற்று,
தூரத்தில் ரயிலின் ஓசை-அதை
துரத்திச் செல்லும் குழந்தையின் பாஷை.
கல்லுடைத்து பிழைத்தாலும்
கல் மனம் இருந்ததில்லை
பஞ்சம் இருந்தாலும்
விருந்தோம்பல் குறையவில்லை.
வக்கற்றவன் வீதியை நோக்கினான்
வசதி வந்தோன் வானத்தை நோக்கினான்.
வக்கற்றவன் நோக்கியதோ
வாழ்வின் அருமையை
வசதி வந்தோன் நோக்கியதோ
வாழ்வின் வெறுமையை.
இங்கு ஏழைகளின் கூரைக்கு மட்டுமே சொந்தம்
பௌர்ணமி நிலவும்
பரவிக்கிடக்கும் நட்சத்திரங்களும்,
துளைகளின் வழியே
துள்ளி விளையாடுவதால்.
நினைவுகளை நினைப்பதை விட
நிஜங்களை நினை
வரலாறும் கூட
வாழ்வின் முடிவில் தான் தொடங்குகின்றது.
இமைகள் அடிக்கும் ஓசை கேள்
மூளை சிலநேரம் முரண்டு பிடிக்கலாம்
முடியும் வரை முயற்சிசெய்.
இதயம் இயங்கும்வரை
இடைவேளை தேவையில்லை.
தடுமாறுபவன் எல்லாம்
தவறி விழுந்துவிடுவதில்லை.
தகர்த்து விடு உன் தடுமாற்றத்தை
இமயம் கூட சிலநாட்கள் புதைந்துதான் கிடந்தது.
விழுவது தவறில்லை
விழுந்தே இருப்பதுதான் தவறு.
இருட்டில் உள்ளவன் மட்டுமே அறிவான்
வெளுச்சத்தின் அருமையை,
தோற்பவன் மட்டுமே உணர்வான்
வெற்றிக்கு முன் கண்ட வேதனையை.
கண்ணில் காண்பவனுக்கு
வாழ்க்கை ஒரு கனவு,
களத்தில் நிற்பவனுக்கு
வாழ்க்கை ஒரு போராட்டம்,
கவிஞனுக்கு
வாழ்க்கை ஒரு கவிதை,
கலைஞனுக்கு
வாழ்க்கை ஒரு மேடை,
இரசிக்கத் தெரிந்தவனுக்கு
வாழ்க்கை ஒரு ஓவியம்,
இரசனை அற்றவனுக்கு
வாழ்க்கை ஒரு புரியாத நாடகம்,
மொத்தத்தில் வாழ்க்கை
நீ கற்றுக்கொள்ள மறுத்தாலும்
உனக்கு கற்பித்துக் கொண்டே இருக்கும்
ஆயிரம் காவியம்!!!!!!