ஆசிர்வதிக்கப்பட்ட நாள்

நேற்று என்னுடைய சொந்த ஊரான மல்லாங்கிணறு கிராமத்தில் சாகித்ய அகாதமி விருது பெற்றதற்கான பாராட்டுவிழா நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளில் இதுவே மிகச்சிறந்தது என்று சொல்வேன்.

எங்கள் கிராமமே ஒன்று கூடி ஒரு விழா எடுப்பது இதுவே முதன்முறை. இந்த நிகழ்விற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர்கள் அருமை நண்பரும் , சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தன்னரசு, மற்றும் அவரது சகோதரி கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன். அவர்களுக்கு என் இதயம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊரின் நுழைவாயில் இரண்டு ஆள் உயர வண்ணப் பதாகைகளை வைத்திருந்தார்கள். ஆதிமூலம், அசோக் என்ற அன்பிற்குரிய தம்பிகள் தங்களின் நண்பர்களுடன் இணைந்து என்னை வாழ்த்தி மிகப்பெரிய பதாகைகளை உருவாக்கியிருந்தார்கள்.

விருது அறிவிக்கப்பட்ட அன்றும் இப்படியொரு பதாகையை வைத்துச் சிறப்பித்திருந்தார்கள். நேற்று அவர்கள் தங்கள் நண்பர்களுடன், குடும்பத்துடன் வந்து நிகழ்வைக் கொண்டாடியது நன்றிக்குரியது.

சொந்த ஊரில் ஒரு எழுத்தாளன் கௌரவிக்கப்படுவது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு. எனது தந்தையும் தாயும் கௌரவிக்கப்பட்டார்கள். தந்தைக்குப் பெரிய பொன்னாடை அணிவிக்கப்பட்டது. என்னோடு படித்தவர்கள். நண்பர்கள். ஊர்பெரியவர்கள் ஒன்று திரண்டு வீட்டிற்கு வந்து என்னையும் சகோதரர்களையும் நிகழ்விற்கு அழைத்துப் போனார்கள்.

என்னை உருவாக்கிய ஆசான் எஸ்.ஏ.பெருமாள் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. தோழர் எஸ்.ஏ.பெருமாள் நேற்று அற்புதமாகப் பேசினார். நானும் பாரதி கிருஷ்ணகுமாரும் அவரால் உருவாக்கபட்ட மாணவர்களே.

மல்லாங்கிணர் எளிய விவசாயக் கிராமம். அந்த ஊரின் விவசாயிகள் அத்தனை பேரும் வந்து என்னை வாழ்த்தியது பெரும்பேறு என்றே சொல்வேன். ஊரிலுள்ள பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பெரும் திரளாக வந்து கலந்து கொண்டார்கள்.

எங்கள் ஊருக்குப் பெருமை தேடித்தந்தவர் அமைச்சர் தங்கப் பாண்டியன். அவரது முயற்சியால் தான் ஊரில் கல்வியும் அடிப்படை வசதிகளும் உருவாகின. அவரது பெயரில் தான் எங்கள் ஊர் நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவரது நினைவிடத்தில் ஆண்டு தோறும் பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். ஆசிரியராகப் பணியாற்றத் துவங்கி அமைச்சராக உயர்ந்து பொதுச்சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர் தங்கப்பாண்டியன் அவர்களின் அன்பும் பாசமும் மறக்கமுடியாதது.

அவரது பிள்ளைகள் தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கப்பாண்டியன் அந்தப் பெருமையை, புகழை, அன்பை மேலோங்கச் செய்து வருகிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

தங்கம் தென்னரசு சிறந்த படிப்பாளி. எளிமையானவர். எங்கள் பகுதி மக்களால் சிறந்த தலைவனாகக் கொண்டாடப்படுகிறவர். வரலாற்றின் மீதும் இலக்கியத்தின் மீதும் தீவிர ஈடுபாடு கொண்டவர். கானுயிர் புகைப்படக் கலைஞர். அவர் தமிழகத்தின் கல்வி அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தான் பெருமைக்குரிய அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கபட்டது. இலக்கியத்தின் மீதும் எழுத்துலகம் மீதும் அவர் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடே நேற்றைய நிகழ்வு.



மல்லாங்கிணறு வரலாற்றில் இந்நாள் மறக்கமுடியாதது. எங்கள் குடும்பமும் ஊரும் உங்களை மனம் நிறைய வாழ்த்துகிறோம் .

என்னைப் பாராட்டுவதற்காக நண்பரும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமார் வந்திருந்தார். நான் கல்லூரியில் படிக்கிற நாள் தொட்டு என்னை அறிபவர் பிகே. என் மீதும் என் படைப்புகள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். அவர் நேற்று மிகச்சிறப்பாக பேசினார். நன்றி பிகே. உங்கள் அன்பும் வாஞ்சையும் என்னை நெகிழச் செய்துவிட்டது.

நாடறிந்த பேச்சாளர், தமிழ்ப் பற்றாளர், பேராசிரியர் பர்வின் சுல்தானா சஞ்சாரம் பற்றி மிகச்சிறப்பாகப் பேசினார். யாமம் நாவலைப்பற்றிய அவரது மனப்பதிவுகள் வியப்பளித்தன. அவருக்கும் என் மனம் நிரம்பிய நன்றி

எனது மூத்த சகோதரர் போல் கருதும் சி.சந்திரசேகர் ஐபிஎஸ், IG அவர்கள் வந்து வாழ்த்தியது மிகுந்த நன்றிக்குரியது

எங்கள் பெருமைக்குரிய கவிஞர் தமிழச்சி தங்கப் பாண்டியன் . மல்லாங்கிணறை தனது எழுத்தில் உயிரோட்டமாகப் பதிவு செய்து வருபவர். சிறந்த பேச்சாளர். பண்பானவர். எங்கள் குடும்பத்தை, குறிப்பாக எனது தந்தையோடு அவரது தந்தைக்குமான உறவை பற்றிப் பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. நெஞ்சம் நிரம்பிய நன்றி தமிழச்சி.

அருமை நண்பரும் சிறந்த நடிகருமான இளவரசு அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியது மிகுந்த நன்றிக்குரியது

என் அண்ணன் டாக்டர் வெங்கடாசலம் எங்கள் குடும்பத்தின் பின்புலம் பற்றியும் சமூகப் பொறுப்பு கொண்டவர்களாக வீடு எங்களை உருவாக்கியதைப் பற்றியும் சிறப்பாகப் பேசி அனைவருக்கும் நன்றி சொன்னார். அவருக்கும் என் அன்பும் நன்றியும்.

ஊடகவியலாளர் சுஜிதா நிகழ்வினை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார். அவருக்கு என் அன்பும் நன்றியும்

நூறு பேர்களுக்கும் அதிகமாக எனக்குப் பொன்னாடை அணிவித்துக் கௌரவித்தார்கள். கிறிஸ்துவத் தேவாலயத்தில் இருந்து வந்து கலந்து கொண்டு முத்து மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தார்கள். பள்ளி ஆசிரியர்கள். தபால் அலுவலகர்கள். நூலகர், மில் தொழிலாளர்கள். ஊர் பிரமுகர்கள் இலக்கிய அமைப்பினைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் பொன்னாடை அணிவித்தார்கள்.

நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விருதுநகர், மதுரை, திருமங்கலம். சாத்தூர், சிவகாசி. ராஜபாளையம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திண்டுக்கல், கோவை ராமநாதபுரம், எனப் பல இடங்களில் இருந்தும் எழுத்தாளர்கள். வாசகர்கள். இலக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள். குறிப்பாக எழுத்தாளர் ஷாஜகான். மதுரை கணேசன், பேராசிரியர் பாரதி, கோவை பிரேம். சேது, விவேக், வெற்றிவேல் மதுரை, டாக்டர் பரமசிவம், சர்வோதயா புத்தக நிலைய உரிமையாளர் எனப் பலரும் வந்து கலந்து கொண்டது நன்றிக்குரியது.

ஊர் என்பது நிலமல்ல. வீடும் வீதியுமில்லை. அது அழியாத நினைவு. என் பேச்சில், எழுத்தில், உணவில், உடலில் ஊர் எப்போதும் ஒட்டிக் கொண்டேயிருக்கிறது. உடலில் உள்ள மச்சம் போல அழிவற்றது என் ஊர். நினைவுகளே என்னை வழிநடத்துகின்றன. பூமியைப் போல மௌனமானது வேறு எதுவுமில்லை. நான் மண்ணின் கதையை எழுதுகிறேன். மக்களின் கதையை எழுதுகிறேன். எளிய மனிதர்களின் எழுத்தாளனாகவே எப்போதும் இருப்பேன். அதுவே எனது அடையாளம் என்று பேசினேன். நிகழ்வில் என்னோடு என் மனைவி சந்திரபிரபாவும் கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்விற்கு பிறகு ஆயிரம் பேருக்கு கறி விருந்து படைக்கப்பட்டது. ஊரே கூடி ஒன்றாக மதிய உணவு உண்டது காணக்கிடைக்காத காட்சி. விருந்துக்குப் பிறகு வெற்றிலை பாக்கு, பழம் குளிர்பானங்கள் எனத் தீராத உபசாரம் செய்து அன்பின் உச்சத்தை உருவாக்கி விட்டார்கள்.

மாலையில் மதுரை விமானநிலையம் நோக்கிப் புறப்பட்ட போது அன்பின் மிகுதியால் கண்ணீர் பெருகியது. பேசமுடியாதபடி உணர்ச்சிவசப்பட்டிருந்தேன்.

முப்பது ஆண்டுகள் எழுதிய எனது எழுத்து வாழ்க்கைக்கு நேற்றைய ஒரு நாள் போதும். நன்றி நண்பர்களே.

மல்லாங்கிணறு மக்களுக்கும், அன்பு தங்கம் தன்னரசு, தமிழச்சி இருவருக்கும், என்னையும் எழுத்தையும் நேசிக்கும் அனைவருக்கும் தீராத நன்றிகள். இந்நாள் என்னை மிகுந்த ஊக்கத்துடன் உற்சாகத்துடன் தொடர்ந்து எழுத வைக்கும்.

நன்றி தோழமைகளே. வணக்கம்

••

21.02.2019

S. ராமகிருஷ்ணன் .

எழுதியவர் : (18-Mar-19, 5:00 am)
பார்வை : 59

மேலே