எஸ்ராமகிருஷ்ணன், கலாப்ரியா, நாஞ்சில்நாடன் ஆகியோர் நடுவே என்ன ஒற்றுமை ……

எஸ்.ராமகிருஷ்ணன், கலாப்ரியா, நாஞ்சில்நாடன் ஆகியோர் நடுவே என்ன ஒற்றுமை? கலாப்ரியா எப்போதுமே ஆழமான மனச்சோர்வுடன் இருப்பார். விசேஷ நாட்களில் சோர்வு இன்னும் அதிகமாகும். ஆனால் எஸ்.ராமகிருஷ்ணனை நான் திருவண்னாமலையில் முதலில் பார்த்தபோது குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தார். ”ஏன் சார் அப்டி சிரிக்கிறார்?”என்று ரகசியமாக பவா செல்லத்துரையிடம் விசாரித்தேன். ”அவர் அப்டித்தாங்க சிரிப்பாரு…” என்றார். ”அது சரி…ஆனா எதுக்கு சிரிக்கிறார்?” அவர் ”அதாங்க நானும் சொன்னேன்,அவரு அப்டித்தான் சிரிப்பாரு”.

பிறகு நான் சந்திக்கும்போதெல்லாமே எஸ்.ராமகிருஷ்ணன் குலுங்கிக் குலுங்கித்தான் சிரித்துக் கொண்டிருந்தார். அவரது சரீர அமைப்பே அதற்கு வாகாகத்தான் வடிவம் கொடிருக்கிறது. கண்கள் மூக்கு உதடுகள் எல்லாமே.. அவரது பொழுதுபோக்கே அதுதான் என்றார்கள். சிரிக்கத் தோதாக ஏதுமில்லாதபோது …………….. நினைத்துக் கொள்வாராம். வேண்டாம், புரையேறிவிடும் என்று மனைவி சொல்லி விலக்கினாலும் அதை தவிர்க்க முடிவதில்லை.

நாஞ்சில்நாடனுக்கு என்றால் அறுபதிலும் தலையில் முழுக்க மயிர். அறுபதாம் விழாவில் ஆசீர்வாதம்செய்துபோட்ட அட்சதைகளை பேன்சீப்பு போட்டு சீவி எடுக்கவேண்டும். மாறாக எஸ்.ராமகிருஷ்ணன் கல்லூரியில் படிக்கும்போதே தலையில் முடியில்லாமலிருந்தார் என்று தகவல். அவரது அறுபதாம் கல்யாணத்தின்போது கற்பனைசெய்யவே கஷ்டமாக இருக்கிறது.

மூவருக்கும் இடையே என்ன ஒற்றுமை? ஒன்றே. மூவரும் அந்தக்கால எம்.ஜி.ஆர் ரசிகர்கள். நாஞ்சில்நாடன் வடசேரி தங்கம் திரையரங்குக்கு அதிகாலையிலேயே வந்து காவல்கிடந்து ‘அடிமைப்பெண்’ முதல்நாள் முதல்காட்சி பார்த்திருக்கிறார். நெல்லைவரை ரயிலில் வரும் ‘பொட்டி’யும் அந்நேரம்தான் கிளம்புமாம். ‘பொட்டி வந்தாச்சா?’ என்ற எதிர்பார்ப்பு. ”வள்ளியூர் தாண்டியாச்சுலே” என்று ஒரு குரல். நாஞ்சில்நாடன் அதற்கே விசில் அடித்து எம்பிக்குதிப்பாராம். பெட்டி நாகரம்மன் கோயில் போயிருக்கிறது என்ற அடுத்த செய்தி.”நாகரம்மோ எல்லாம் நல்லபடியா நடக்கணும்!” என்று நெக்குருகிப் பிரார்த்தனை. பெட்டி நுழைகையில் தலைவரையே நேரில் பார்த்த பரவசம்.

கலாப்ரியா எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற செயல்பாடுகளில் இருந்திருக்கிறார். கூழ் காய்ச்சுதல், இரவெல்லாம் தெருவில் அலைந்து போஸ்டர் ஒட்டுதல்.போன்ற தீவிர மன்றப்பணிகள்.

எஸ்.ராமகிருஷ்ணனின் ஆர்வம் தலைவர்மீதா நாயகிகள்மீதா என்று அவர் சென்னை அம்பிகா எம்பயர் ஓட்டலில் என் அறையில் இரவெல்லாம் பரவசமடைந்து கொண்டிருந்த போது என்னால் ஊகிக்க முடியவில்லை. ஒருவேளை தலைவர் தன் தலைவியரை கையாளும் ‘விதம்’ மீதான பற்றாக இருக்கலாம். அம்மை அப்பன் என்றுதானே உலகு தொழுகிறது?




(ஜெயமோகன் கட்டுரையிலிருந்து)

எழுதியவர் : (19-Mar-19, 7:28 pm)
பார்வை : 42

சிறந்த கட்டுரைகள்

மேலே