விதியே விடு---சந்தக் கலிவிருத்தம்---

ஒரு கதையாய்ச் சொல்ல முயன்றுள்ளேன்...

#சந்தக்_கலிவிருத்தம் :
(தனதானன தனதானன தனதானன தனனா)

இறைவாசலை விலகாதுள இளமாதுளை மலரே
சிறைவாசலை விலகாதுபொ(ன்) திருநீங்குத லேனோ?...
பிறையோவிய நுதலாளுள(ம்) பிரியாவலி ஏற்றல்
முறையேயிலை இவையேனதை மொழிவாயிள மானே...

அலைமீதொரு படகாடிட அதைநோக்கிடு மனையாய்
மலைமோலொரு மயிலாடிட மனமேற்றிடு தொழிலாய்த்
தலையேறிய நரையேற்றுட(ன்) தடியூன்றிடு முறவாய்க்
கலைவாணியி(ன்) தாத்தாவரு கதைகேட்டிடு விதியே...

விரிதாமரை முகனாயிரு விழியோ?..யிள மதியாய்
அரிமாவுரு புறமேந்திட அகமோ?...விட மொழுகும்
நரியேயென நலிவேதரு நமனேயென அறிய
அரிதாகிடு மெழிலோடவ னழிவேதர வந்தான்...

தவமேதரு வரமோ?...யிலை தணலோ?...இவ னென்றே
சிவனாலய மங்கேயெரி திரியாயுள முருக
அவனேபதி எனவந்தது மன்பாலெனை வென்றான்
அவனேசில தினமோடிட அம்பாயெனு(ள்) நின்றான்...

பதியேயொரு விசமேதினி பனிமேனியை விற்றான்
நதியோடிலை எனவாழ்வது நரகாகிட நகர
அதிலேவரு மனவேதனை அணையாதெனு ளெரியும் விதியேவிடு வலியோடுள விலைமாதுட லனலே...

பகலோ?...கடு மிருளாயெழு(ம்) பலியாக்கிட ஆண்கள்
நகமோ?...புலி என்றேதொடு(ம்) நகையோ?...இத ழகல
துகிலோ?...உட லொன்றாநொடி துயராலுயி ரெரியும்
அகலூற்றிய நெய்யாகிடு மதையேதின மேற்றேன்...

மணமேடையி லொருநாளவ(ன்) மறுமாதொடு கண்டேன்
பிணமேடையை ஈந்தேனத(ன்) பின்னேசிறை வந்தேன்
அணலேறிய மணநூலினை அன்றேயன லெறிய
அணலேறிட இங்கேவரு மதுபோலொரு கயிறே...

புதிதாயொரு வழியேயிலை புவியேயெனை இனிமேல்
பதியோடிலை பலபோரொடு முறவாடிட அலையும்
சதியேயிவ ளெதிரேவரு சனியேயென ஏசும்
உதிராமல ருளதோ?...விலை உயிரே?...யினி வேண்டா...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Mar-19, 8:00 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 321

மேலே