விதியை வெல்வோம் வா---கலித்துறை---

கலித்துறை :

(மா விளம் மா விளம் காய்)


ஆதி சிவனவன் ஆழி துயில்பவன் நான்மறைகள்
ஓதி நிறைந்தவன் ஓங்கு புகழ்அறத் தேவியர்கள்
தீதின் கொடுந்துயர் தீர்ப்பார் எனவினி வலியவர்முன்
ஏதும் செய்திடா ஏழை நிகர்மனம் வைத்திராதே...

தாவி வரும்பிணி தாகம் போற்றரும் சிறுவலியால்
ஆவி விலக்கிட ஆகம் துடித்திடற் பெரும்பிழையே
கோவி லெழுஞ்சிலை கோடி உளியடி சுமந்திடற்காண்
வாவி வற்றிட வாடும் மரையெனத் தரைதொடாதே...

காதல் உடைந்ததும் காயம் வருத்திடல் யார்விதித்தார்
வேதப் பிரிவினில் வீடு முடங்குதல் யார்விதித்தார்
பாதம் நெருங்கிடும் பாவ வினைகளை நீமிதித்தால்
பாதை அமைந்திடும் பாரும் மதித்திடும் நாள்அதுவே...

ஏசு நரனிடை ஏற்றம் அடைந்தவர் வியந்துநோக்க
வீசு புயற்றினில் வீதி வசித்திடல் மாற்றஞான்றும்
தூசு மறைத்திருட் தோய்ந்த ஓவியம் அன்னவாழ்வில்
தேசு நிறைந்திட தேனீ எருதுபோல் உழைப்பதென்றோ?...

விதிகள் மாயமாய் விரிக்கும் வலைதனை எதிர்த்திழுக்க
முதியோர் யாக்கையாய் முடங்கா(து) உளத்தினைத் துடிப்புடன்வை
ஒதியின் கிளைநட திங்கள் கடந்திடின் துளிர்ப்பதுபோல்
புதிதாய்ப் பிறந்துவா புயலாய் எழுந்துவா புன்னகைத்தே...

விதியோ?... வலியது விளைவோ?... கொடிதெனும் வீண்ணினைப்பால்
மதியோ?... மழுங்கிடும் வழும் வாஞ்சையோ?... மண்புதையும்
கதிராற் கரையிருட் கடுப்ப கரைத்தெழு கண்ணொளியால்
விதியே விடுதலை வேண்டி நின்னடி வீழ்ந்திடுமே...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Mar-19, 8:41 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 538

மேலே