யானை – ----------------- அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை
அனோஜன் பாலகிருஷ்ணனின் புதிய சிறுகதை. ஐயமில்லாமல் ஈழச்சிறுகதைப் பரப்பில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு என நினைக்கிறேன். ஈழச்சிறுகதை இது வரை சென்றடைந்த தளங்கள் முதன்மையாக நுண்சித்தரிப்பு [அ. முத்துலிங்கம்] பகடி [ஷோபா சக்தி] மற்றும் யதார்த்தச் சித்தரிப்புகள் மட்டுமே. அவை இலக்கியத்தின் வகைமைகள் எனினும் தங்களுக்கான எல்லைகளும் கொண்டவை. நுண்சித்தரிப்புகள் முழுமையை இலக்காக்க இயலாது, அவை வளர்ச்சிபோக்கு அற்றவை. பகடி மிகமிக எல்லைக்குட்பட்ட கலைவடிவம். பகடி ஒருபோதும் அந்த ஆசிரியனின் குரலாக அன்றி, அந்தக் காலகட்டத்தின் ஒரு பகுதியாக அன்றி நிலைகொள்ள முடியாதது. இலக்கியத்தின் உச்ச இலக்கு என்பது கவித்துவமும் தரிசனமும்தான். அது நிகழ்ந்துள்ள அரிய படைப்புகளில் ஒன்று இது.
ஓர் இலக்கியப்படைப்பாக இதற்கு சில அழகியல் போதாமைகளைச் சொல்வேன். மொழியில், யானையை உருவகப்படுத்தியிருப்பதில். ஆனால் கதைமுழுக்க யானை பொருள்மயக்கம் கொள்வது, யானை அகமாகவும் வரலாறு புறமாகவும் அமையும் பின்னல், உடனே யானை வரலாறாக ஆகும் ஜாலம் என ஓர் அழகியல் வெற்றி இக்கதை.
================================================================================================================================
யானை – அனோஜன் பாலகிருஷ்ணன்
1
யானையை அவன் பார்த்ததேயில்லை. முடிந்தவரை தன் கற்பனையைத் தீட்டி மனதினுள்ளே உருவகம் கொடுத்துப் பார்த்தான் சுயந்தன். கருமையான உடலின் வண்ணம் அவனுள்ளே மாறி மாறி வண்ணக் கலவையான யானைகளை உருவாக்கின. தடித்த வயிறும் நீண்ட தும்பிக்கையும், உரித்த பலாப்பழத்தின் சுளைகள் அசைவது போன்ற நீண்ட காதுகளும் விரிந்து உருண்டு குண்டு யானைகளை அவனின் கற்பனைக்கு ஏற்றால் போல் உருவாக்கினான்.
பாடசாலை பயிற்சிப் புத்தகத்திலும் உப்புக்குளம் பிள்ளையார் கோவில் சுவரில் வரைந்திருந்த ஓவியத்திலும், கோயில் கோபுர அடியிலுள்ள சிற்பத்திலும் யானைகளைப் பார்த்திருக்கிறான். தும்பிக்கைகளை வளைந்து சுருட்டி பூக்களை ஏந்தியவாறு இரண்டு பக்கமும் ஒன்றையொன்று பார்த்தவாறு இரண்டு யானைகள். அதன் பருமனும் தடித்த கால்களும் பரவசத்தை உண்டாக்கின. அந்த மிருகத்தை நேரில் உடனே பார்த்திட வேண்டும் என்கிற உவகை அவனுள் உக்கிரமாக எழுந்தது.
ஆனால், அவன் நினைத்தவுடன் யானையைப் பார்க்கக் கூடிய நிலைமையில் யாழ்ப்பாணப் பட்டினத்தின் சூழல் இருக்கவில்லை. யாழ் குடாநாடு கொடிகாம எல்லையுடன் சுருக்கப்பட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டுடன் அரச நிர்வாகத்தில் இருந்தது. எல்லைகளில் போர் உக்கிரமாக இருந்தது. நாவக்குளி பாலத்திலிருந்து நோக்க எறிகணைகள் துள்ளிப் பாய்வதையும் கிபீர் விமானங்கள் இரைந்து செல்வதையும் சனங்கள் தெளிவாகவே கண்டார்கள். எறிகணைகள் வீழ்ந்து நொறுங்குவது அருகில் கேட்டால் “பூநகரிக்கு ஆமி அடிக்குது” என்று அப்பா சொல்வார். அவனும் தமையனும் மெலிதாக அதிரும் கூரையின் நடுக்கத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு பின்னர் மண்ணெண்ணெய் விளக்கொளியில் விட்ட இடத்திலிருந்து படிப்பார்கள். பின்னர் அதுவே பழகியும் போனது. கொஞ்ச நாய்களும், பூனைகளும், மாடுகளும், ஆடுகளும் என்று குடாநாட்டில் மிருகங்களின் எண்ணிக்கையும், வகைகளும் குறைவாகவே எஞ்சியிருந்தன. பெரும்பாலான நாய்கள் இராணுவத்தைக் கண்டால் குரைக்க வேண்டும்; சப்பாத்துச் சத்தம் பலமாகக் கேட்டால் கேற்றுக்குப் பின்னால் வந்து நின்றவாறு குரைக்க வேண்டும். பலமாகத் தள்ளிக்கொண்டு உள்ளே அவர்கள் வந்தால் பின்புற வீட்டு வளவுக்குள் இருக்கும் பூவரசு கத்தியால்களுக்குள் நுழைந்து குரைக்க வேண்டும் என்ற ஒழுங்கு முறையை பலமாய் கடைப்பிடித்தன. மற்றபடி வேறு மிருகங்களுக்கு அங்கே இடமே இருக்கவில்லை. யுத்தத்துக்குள் பிறந்து அதுக்குள்ளே வளர்ந்த சுயந்தனுக்கு இதெல்லாம் சகஜமாகவே இருந்தது. இருந்தும் யானை என்கிற பெரிய மிருகத்தின் மீதான கவர்ச்சி மட்டும் அவனை உக்கிரமாகப் பிசைந்தது.
தினமும் காலையில் அம்மா நல்லெண்ணெய் வைத்து தலையைத் தேய்த்து சீப்பால் கன்னவுச்சி பிரித்து பவுடர் நன்றாக காதுமடல்கள் எல்லாம் அழுத்தித் தேய்த்துப் பூசி அப்பாவுடன் பாடசாலைக்கு அனுப்பி வைப்பார். அப்பாவின் சைக்கிள் பாரில் அமர்த்திருந்தவாறு யானைகளைப் பற்றி கற்பனை செய்துகொண்டு அப்பாவுடன் கதைத்துக் கொண்டு செல்வது அவனது வழமையாக இருந்தது. இந்த மார்கழியோடு இரண்டாமாண்டு வகுப்புக்குச் செல்லப் போகிறான்.
“உண்மையாவே யானை அவ்வளவு பெரிசாக இருக்குமாப்பா?
“ஓமடா”
“அப்பா எப்பத்தான் எனக்கு யானையை காட்டுவீங்கள்?”
“இங்க எங்க யானை இருக்கு? யானையைப் பார்க்கணும் எண்டா தலாதா மாளிகைக்குத் தான் போகணும்”
“ஏன் மிருகக்காட்சி சாலைக்கு போய் பார்க்க ஏலாதா?
“கூண்டுக்குள்ள இருக்கிற மிருகங்கள பார்க்குறது, சிறைச்சாலையில இருக்கிற கைதிகளைப் பார்ப்பது போல இருக்கும். அது வேண்டாம்”
“தலதா மாளிகை, அதுவெங்க இருக்கு?”
“கண்டில இருக்கு. நாட்டு நிலமை சரியாகட்டும், உன்னைக் கூட்டிட்டுப் போய் யானையைக் காட்டுகிறேன்”
அப்பாவின் வாக்கு அவனை எழுச்சியுறச் செய்தது. எப்போது நாட்டு நிலைமை சரியாகும், சண்டை எப்ப முடியும் என்று தனக்குள் யோசிக்க ஆரம்பித்தான். நித்திரையில் பிரம்மாண்டமான கருப்பு யானைகள் கூட்டமாக நிலம் அதிர அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தன. நடுவில் ஓடிவரும் வளைந்த பெரிய வெள்ளைத் தந்தம் கொண்ட யானை மீது அவனும் அப்பாவும் அமர்ந்திருந்தார்கள். அந்த யானையின் கண்கள் சிவந்திருந்தன. சுயந்தனின் சமிச்சைகளுக்கு ஏற்ப யானை வேக வேகமாகச் சென்றது. நிலம் இன்னும் அதிர இன்னுமொரு யானை அவர்களை முந்திச்செல்ல தலைப்பட்டது. அதன் மேல் சுயந்தனின் தமையனும், அம்மாவும் அமர்ந்திருந்தார்கள்.
“நாங்க முந்தப் போகிறோம்.. முந்தப் போகிறோம்” தமையனின் குரல் காற்றைக் கிழித்துக் கொண்டு குதூகலத்துடன் வந்தது. அம்மாவின் முகத்தில் பூரிப்பு மலர்ந்து செழித்தது. நிலம் இன்னும் இன்னும் அதிர சட்டென்று நித்திரை முழுவதுமாகக் களைய எழுந்து பார்த்தான். தூரத்தில் எறிகணைகள் வீழ்ந்து வெடிப்பதும், அதிர்வில் வீட்டுக் கூரைகள் நடுங்குவதையும் உணர்ந்தான். அருகில் அப்பா நல்ல துயிலில் இருந்தார். “பூநகரிக்கு அடிக்கிறாங்க” என்று சுயந்தன் தனக்குள் அப்பாவின் பாணியில் சொல்லிக் கொண்டு மீண்டும் துயிலில் கரைய ஆரம்பித்தான்.
பாடசாலை முடிந்தபின் சுயந்தன் தமையனுடன் பின்வளவில் கிட்டிபுல் விளையாடிக் கொண்டிருந்தான். பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. தும்பிகள் இறக்கையை அதிரச் செய்தவாறு அவர்களைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தன. தூரத்தில் நாய்களின் குரைப்புச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தன. விட்டு விட்டு நுளம்புகள் கால்களிலும் கைகளிலும் கடித்துக் கொண்டிருந்தன.
“முகம் கைகால் கழுவிக் கொண்டு இரண்டு பேருமா வாங்கோ. அப்பா வரட்டாம்” அம்மா அழைத்தார். அப்பா இப்படிக் கூப்பிட்டால் விசேஷமாக ஏதோவொன்று இருக்கும். சுயந்தனும் அவனின் தமையனும் கிணற்றடிக்கு ஓடிப்போய் துலாக்கிணறில் தண்ணியள்ளி கைகால்களை அடித்துக் கழுவினர். சுயந்தனின் தமையனுக்கு இவனை விட ஏழுவயது அதிகம். பார்ப்பவர்கள் ஒன்பதமாண்டு படிக்கும் பொடியன் என்று சொல்ல மாட்டார்கள். நல்ல வளர்த்தியும் உயரமுமாக அவன் இருந்தான்.
“உடன உடுப்ப மாத்திட்டு வெளிக்கிடுங்கோ; வெசாக் பார்க்க போவோம்” அப்பா நீண்ட கையுள்ள மேற்சட்டையை அணிந்து கொண்டு கையின் இரு புறங்களையும் முழங்கை வரை மடித்துவிட்டவாறு சொன்னார்.
சுயந்தனுக்கும் தமையனுக்கும் மகிழ்ச்சி கிளைவிரித்துப் படர்ந்தது. ஒரு கூர்மையான தன்னுணர்வை அடைய தமையன், “இருட்டினப்புறம் எப்படி போறது? ஒன்பதுமணிக்கு ஊரடங்குச் சட்டம் போட்டு விடுவாங்களே?” என்றான்.
“இன்றைக்கு பதினோரு மணி வரைக்கும் ஊரடங்கு இல்லை. எல்லா இடமும் ஆமிதான் நிக்குது. டவுன் முழுக்க வடிவாய் சோடிச்சு இருக்கு. நிறைய கூடுகள் விதம்விதமாய் கட்டித் தொங்கவிட்டு இருக்கிறார்கள். ஆரியகுள நாக விகாரையைச் சுற்றி ஒரே வெளிச்சமாய்த்தான் கிடக்கு. கெதில வெளிகிடுங்கோ. அதுவுமில்லாம யானை ஒன்றும் வந்திருக்காம்! பார்த்திட்டு ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வருவோம்”
அப்பா சொல்லச் சொல்ல சுயந்தன் நுரைத்து வெடிக்கும் குமிழி போல ஆனான். யானையின் பிரமாண்ட உருவம் கிளர்ந்து பிளறியது. உடல் துள்ளி விதிர்த்து அவனுள் அடங்கியது. துள்ளிக்குதித்து இருவரும் புறப்பட ஆயத்தமானார்கள்.
இரவுகளில் அவர்கள் வீட்டைவிட்டு புறப்பட்டதே இல்லை. இரவின் கருமைக்குள் நுழைந்து அலைவது அவர்களின் வாழ்க்கையில் இதுவரை நடந்ததில்லை. ஆறு மணிக்கு மேல் சன நடமாட்டம் வீதிகளில் இருக்காது. நகரமே கட்டுக்கோப்பில் மிக அமைதியில் இருக்கும். இராணுவத்தின் துப்பாக்கிகள் எந்நேரமும் மிகக் கூர்மையாக இருக்கும். இன்று இரவுக்குள் நுழையப் போகிறார்கள். அதன் கருமையைத் தீண்டி கலந்து எங்கையோ போகலாம்.
பிரதான சாலைக்குச் சென்று சேரும்வரை தான் இருட்டாக இருந்தது. சைக்கிளில் இருந்த டைனமோ விளக்கு வெளிச்சதை கக்கிக் கொண்டிருந்தது. சுயந்தன் அப்பாவின் சைக்கிள் பாரில் அமர்ந்திருந்தான். தமையனின் சிவப்பு லுமாலா சைக்கிளின் பின்கரியரில் அம்மா அமர்ந்திருந்தார். டைனமோ மின்குமிழ் ஒளியைப் பின்தொடர்ந்து நகரத்தை அடைந்தார்கள். ஆரியகுளத்தைச் சுற்றி விதம் விதமான வெளிச்சக் கூடுகள் சுடர்விட்டன. நாக விகாரையைச் சுற்றி இராணுவம் சீருடையில் நின்றது. அருகே கவச வாகனங்கள் ஊத்தைப் பச்சை நிறத்தில் நின்றன.
நிறையவே சனங்கள் வெளிச்சக்கூடுகள் பார்க்க வந்துகொண்டு இருந்தார்கள். நீண்ட நாளைக்குப் பின் ஓர் இரவில் இப்படிக் கூடக் கிடைத்தது சந்தோஷமானதாகவே எல்லோருக்கும் இருந்தது. புத்தரின் பிறந்த தினம் இன்று என்பதைவிட, இருட்டுக்குள் சுதந்திரமாக ஒருமுறை வெளிக்கிடக் கிடைத்ததின் ஆசுவாசமே எல்லோர் முகத்திலும் பிரகாசமாக இருந்தது.
சுயந்தனின் கண்கள் யானையைத் தேடித் தேடி வில்லாக வளைந்தன.
“அப்பா எங்கப்பா யானை?”
“விகாரைகுள்ள நிக்கும்”
அவனின் தமையனும் அம்மாவும் வெளிச்சக்கூடுகள் பார்ப்பதிலே ஆர்வமாக இருந்தார்கள். விகாரைக்குள் செல்வதில் கிஞ்சித்தும் நாட்டம் இருக்கவில்லை. வீதிகள் சனங்களால் நிறைந்திருந்தன. பலர் சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டு குடும்பம் குடும்பமாக நகர்ந்தவாறிருந்தார்கள்.
“அப்பா விகாரைகுள்ள போவோம்… விகாரைகுள்ள போவோம்” சுயந்தன் அப்பாவின் விரல்களைப் பிடித்தவாறு துள்ளித் துள்ளிக் கேட்க ஆரம்பித்தான். விருட்சம் கொண்ட பிடிவாத மரமாக அவனின் சொற்கள் வளர்ந்தன.
அவர்கள் விகாரைக்குள் நுழைந்தார்கள். இனிய நறுமணம். காலணிகளற்ற கால்களுடன் இராணுவத்தினர் சீருடையில் உடலைத் தளர்த்தி நின்றிருந்தார்கள். தாமரை இதழ்களின் சிதறல் வளாகம் எங்கும் சிதறியிருந்தது. சிந்திய இதழ்களையும் சருகுகளையும் ஓர் இராணுவச் சிப்பாய் ஒலி எழுப்பாமல் ஈர்க்குக் கட்டையால் கூட்டிச் சுத்தம் செய்தவாரிருந்தார். அரச மரத்தின் கீழ் புத்தர் பாதி இமைகள் தாழ தியானத்தில் இருந்தார். எண்ணெய் விளக்குகள் துடிப்புடன் எரிந்து கொண்டிருந்தன.
சுயந்தனின் கவனம் அவற்றில் கூர்மை கொள்ளவில்லை. யானை எங்கே என்றே விழிகள் தவித்தன. அப்பாவின் கைவிரல்களை இழுத்தபடி நகர முற்பட்டான். அம்மாவும் தமையனும் அவர்கள் பின்னே தயக்கத்துடன் அடியெடுத்து வந்தனர். அங்கு யானை நிற்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. முழுமையாக சுற்றி வந்தாகி விட்டது. அப்பா ஓர் இராணுவ சிப்பாயிடம் சென்று ஏதோ கேட்டு வந்தார்.
“அடேய் யானை வெள்ளன வந்துட்டு போயிட்டாம்”
அப்பா அதனைச் சொல்லி முடிக்க, அணைந்து செல்லும் தீபந்தம் என அவன் முகம் பிரகாசம் குன்றி இருளில் வீழ்ந்தது. கண்கலிருந்து நீர்த்துளிகள் உருண்டு வீழ்ந்து சிதற ஆரம்பிக்க, பெரும் அழுகையாக மாறியது. சுயந்தன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். சுற்றியுள்ள இராணுவத்தினர் அவர்களைத் திரும்பிப் பார்த்தனர்.
“தம்பி ஏன் அழுறது?”
குரல் வந்த திக்கை திரும்பிப் பார்த்தான். காவியுடையுடன் ரோமம் அற்ற தலையுடன் வயதான பெளத்தப் பிக்கு ஒருவர் நின்றிருந்தார்.
யானை பார்க்க வந்த விடையத்தைச் சொன்னான். அவர் அவனின் சுட்டுவிரலைப் பிடித்து கூட்டிச் சென்றார். அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர் தயக்கம் படர விழிகளால் நோக்கிவிட்டு அடியெடுத்து அவரைத் தொடர்ந்தார்கள். அழைத்துச் சென்ற இடத்தில், சுவர் முழுவதும் புத்தரின் பிறப்பிலிருந்து முக்தியடைந்தது வரையான நிகழ்வுகள் விரிவான ஓவியங்களாக வரையப்பட்டு இருந்தன. வெண்மையும் மஞ்சளும் கலந்த வண்ணத்தில் ஓவியங்கள் பிரகாசித்தன. அவற்றில் சிரத்தை கொள்ளாமல், அருகில் வரையப்பட்டு இருந்த யானையின் ஓவியங்களைக் காட்டினார். தீபந்தங்கள், பாகர்கள் சூழ அரசனொருவன் யானையின் மீது பவனி வரும் பிரமாண்டமான ஓவியம் அது.
“இது ஆம்பிளை யானையா?” என்றான் சுயந்தன் அவரிடம். அவர் திரும்பிப் பார்த்துவிட்டு, “ஒரு யானை குட்டி போட இருபத்தியிரண்டு மாதங்கள் ஆகும். அதனால நிறைய பொம்பளை யானைகளையும் ஒரு ஆம்பிளை யானையை மட்டும்தான் விகாரைகளில் வளர்ப்பது வழமை”
“ஏன் அப்படி?”
“ஒரு ஆம்பிளை யானை போதும் மிச்சத்தை குட்டிபோடச் செய்ய”
சுயந்தனுக்கு ஏதோ புரிந்தது போல இருந்தது. வெறுமே தலையை ஆட்டிவைத்தான். அவர் மேலும் “ஒரு ஆம்பிளை யானை இருந்தால் போதும், அந்த இனத்தையே வளர்க்கலாம்”
“ஆம்பிளை யானை கிடைக்காட்டி”
அவர் ஒன்றும் சொல்லாமல் அவனைத் திரும்பிப் பார்த்தார்.
அந்த பெளத்தப் பிக்கு புத்தரின் முன்னே பாலி மொழியில் ஓதி வெண்ணிற பிரித்நூலை அவன் கைகளில் கட்டிவிட்டார். அப்போது தான் சுயந்தன் அதைக் கவனித்தான்; அவரது வலது கையின் ஆக்காட்டி விரல் துண்டிக்கப்பட்டு இருந்தது. அதை அவன் கவனிப்பதை உணர்ந்து “ நான் பதினாலு வருடம் இராணுவத்திலிருந்தேன்” என்றார்.
2
அதற்கு அடுத்த வருடம் கொழும்புக்குச் செல்ல வேண்டிய வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டியது. கொழும்பில் வசித்துவரும் சுயந்தனின் அம்மாவின் மூத்த சகோதரியின் மகளுக்குத் திருமணம். சுயந்தனின் தமையன் மாப்பிள்ளைத் தோழனாக செல்ல வேண்டியிருந்தது. பலாலி விமான ஓடு தளத்திலிருந்து சிறியரக விமானங்கள் கொழும்புக்கு ஓடிக்கொண்டு இருந்தன. சரக்குப் பொதிகளை ஏற்றிச் செல்லும் விமானத்தினுள் இருபக்கம் தட்டுக்கள் இணைக்கப்பட்டு இருக்கையாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். ‘தட்டி வேன்’ என்று அந்த விமானத்தை யாழ்மக்கள் அடைமொழியுடன் சொல்வார்கள். ஆனால், அந்த விமானத்தில் பறப்பது அத்தனை இலகுவானதல்ல. யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றால் கிராம அதிகாரியிடம் கடிதம்பெற்று, யாழ் கட்டளை தளத்துக்கு அனுப்பி வைக்க, அவர்கள் ஒருநாள் அருகிலுள்ள இராணுவ மக்கள் தொடர்பாடல் அலுவகத்திற்கு கூப்பிட்டு நேர்காணல் செய்து, புகைப்படம் எடுத்து அனுமதி கொடுக்க விரும்பினால் கொடுப்பார்கள். முக்கியமாக யாழ்ப்பாணத்தை விட்டுச் செல்வதற்கு தகுந்த காரணம் இருக்க வேண்டும். இவையெல்லாம் சீராக இருந்ததால் அவர்களுக்கு அனுமதி கிடைத்தது.
விமானம் ஓடுதளத்தில் ஏறி காற்றில் மிதக்கத் தொடங்கியது. கண்ணை மூடி அமர்ந்தான். யானைகள் ஓடிக்கொண்டே இருந்தன. திருமண வைபவம் முடிய நான்காம் நாள் அவர்கள் கொழும்பிலிருந்து கண்டிக்கு புகையிரதத்தில் புறப்பட்டார்கள்.
“கண்டிக்குப் போகிற வழியில தான் பின்னவளை யானைகளின் சரணாலயம் இருக்கு” என்றான் தமையன்.
“நாங்க அந்த வழியால் செல்லவில்லை, வரும்போது நேரம் இருந்தால் போவோம்” என்றார் அப்பா.
சுயந்தன் முதன் முதலாக புகையிரதத்தில் செல்கிறான். அந்தப் பரவசத்தில் பின்நோக்கிச் செல்லும் தென்னை மரங்களை, யன்னல் கண்ணாடிக்கால் வெளியே எட்டி வேடிக்கை பார்த்தவாறு ‘தடக் தடக்’ சத்தத்துடன் லயித்திருந்தான்.
அவர்கள் தங்க ஒழுங்கு செய்திருந்த விடுதியறையிலிருந்து நடைதூரத்திலே தலதா மாளிகை அமைந்திருந்தது. எனினும் வீதிக்கு வீதி வீதித்தடைகளும் சோதனைச் சாவடிகளும் இருந்தன. காக்கி நிறத்தில் போலீசாரும், பச்சை உடையில் இராணுவ சிப்பாய்களும் நிமிர்ந்து நின்றார்கள். அவர்களைப் பொருட்படுத்தாது பிக்குகள் காவியுடையில் கடந்து சென்றாவாறிருந்தார்கள்.
ஒவ்வொன்றையும் தாண்டி உள்ளே சென்றார்கள். வெள்ளுடையில் தாமரைப்பூவுடனும், தட்டுகளுடனும் பெருவாரியான சிங்கள மக்கள் சென்றவாறிருந்தார்கள். தாமரை இதழின் வாசம் எங்கும் நிரம்பிக் கசிந்தவாறிருந்தது.
தேசிய அடையாள அட்டையின் இலக்கம் நான்கு என்றவுடன் சோதனைச் சாவடியிலுள்ள போலீசார் புருவம் உயர்த்தி அவர்களைப் பார்த்தனர். பின்னர் எங்கே தங்கியிருப்பது, எப்போது புறப்படுவது, இங்கே என்ன பார்க்க வந்தது என்று கேட்டுவிட்டு பின் செல்ல அனுமதித்தார்கள்.
பாதணிகளைக் கழற்றி வைக்கும் இடத்தைத் தாண்டி உள்ளே அவர்களை அப்பா அழைத்துச் சென்றார். யானைகள் பின்பக்கம் தான் நிக்கும் என்று அங்கு நகரத் தொடங்கினார்கள்.
அங்கே இரண்டு யானைகள் நின்றன. சுயந்தன் கண்கள் விரிவுகொள்ள உளம் கிளர முன்னம் நின்ற யானையைப் பார்த்தான். மிகப்பெரிய யானை. இருளின் கருமையைச் சுரண்டி எடுத்து உருட்டி செய்த பிரமாண்ட உருவமாக யானை கருமையில் நின்றது. அருகிலிருந்த சாரம் கட்டிய பாகன் பெரிய சோற்றுப் பருக்கைகளை உண்ணக் கொடுத்துக் கொண்டிருந்தான். வால் சிறு அசைவுகொள்ள தும்பிக்கையை வளைத்துத் தூக்கி வாங்கி உண்டது. அவனுக்குள் மெல்ல ஒரு பயமும் உவகையும் ஒருசேர பிறக்க, முன்னம் ஒரு அடியெடுத்து வைத்து தயங்கி நின்றான்.
அப்போதுதான் பாரிய வெடிப்புச் சத்தத்தை நினைவுகள் ததும்பி வழியக் கேட்டான். ஏதோ எடையிழந்து செல்வது போல உணர்வுகள் கொப்பளித்தன. தரையில் வீழ்ந்து கிடக்கும் உணர்வை அதோடு அடைய, சனங்களின் அலறல் சத்தமும் மெல்ல மெல்ல கேட்டு அடங்கிக்கொண்டிருந்தன, அவன் தரையில் மயங்கிச் சரிந்தான். அவனுக்கு முன்னமிருந்த யானையின் இருண்ட உடல் அவன் கண்களில் கருமையுடன் எஞ்சியது.
3
சுயந்தன் கண்விழித்தபோது அப்பா அருகிலிருந்தார். ஆஸ்பத்திரி வாசம் அவன் தேகம் எங்கும் உள்நுழைந்து எரித்தது. அதிலிருந்து விடுபட்டு இறுதியில் என்ன நடந்தது என்று யோசிக்க முயன்றான். யானை தும்பிக்கையை தூக்க பின் மண்டையில் ஏதோ அடித்தது போல இருந்தது. முதுகு முழுவதும் தீ பட்டது போல எரிந்ததை நினைவுகூர்ந்தான். மீண்டும் அந்த இடங்கள் எரிவதுபோல தோன்ற எழ முயன்றான். அப்பா அவனின் கைகளைத் தடவி படுக்கச் சொன்னார்.
“தலதா மாளிகையில் குண்டு வெடிச்சுட்டு. நல்ல வேளை உனக்கு பெரிய காயம் இல்லை” அப்பா ஆசுவாசமாக அதைச் சொன்னாலும் கண்கள் இருண்டு அடைத்தே இருந்தன. அவர் கைகளிலும் பாண்டேஜ் கட்டுகள் இருந்தன.
மருந்தின் வாசனையாலும் நினைவின் சரிவாலும் சுயந்தன் மயங்கி மயங்கி சரிந்து கொண்டிருந்தான். நிறைய யானைகள் அவன் கனவில் துளிர்த்தன. அவற்றை அவன் தள்ளிநின்று வேடிக்கை பார்த்தவாறு இருந்தான். கொஞ்சம் நாழிகை செல்ல அவன் கைகால்கள் தடித்து நீண்டன. மூக்கு நீண்டு பெரிய தும்பிகையாக வளைந்து எழுந்தது. இருட்டிலிருந்து கருமை ஒரு சுழலாக படர்ந்து அவன் தேகம் எங்கும் மூடிக்கவிய, அவன் கண்ணை மூடிக் கொண்டான். அவன் ஒரு யானையாக மாறிப்போனான். அப்போது ஒன்றைக் கவனித்தான் அவனது தமையனும் தந்தையும் அவனைப் போலவே யானைகளாக மாறியிருந்தார்கள். எல்லோரும் கூட்டாக அரியகுளம் விகாரைக்குச் சென்றார்கள். அங்கே நிறைய வெளிச்சக் கூடுகள் ஒளிவிட்டுக் கொண்டிருந்தன. வேகமாகத் தெருக்களை கடந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்களின் முன் காவியுடை காற்றில் மேல் எழுந்து தீ நாக்காக அசைய ஒரு பெளத்தத் துறவி கையில் ஈட்டியுடன் வீதியின் முன்னே தோன்றினார். விண்ணிலிருந்து விடுபட்டு வந்த மின்னல் கீற்று என அவர் கண்கள் சீறின. கையை நீட்ட, தடுமாறும் தன் வேகத்தை திடுக்கிடலுடன் உணர்ந்தான். அப்போது அவர் கையிலிருந்தது ஈட்டி அல்ல, யானைகளை வழிநடத்த பாகன் வைத்திருக்கும் குத்தூசி என்று புரிந்து கொண்டான். அவரிடம் அவர் கைகளின் விரல்கள் சிதைந்திருப்பதைக் கண்டான். அவற்றை எல்லாம் தாண்டிச் செல்ல அவனுக்கு அம்மாவின் நினைவு வந்தது எங்கே அம்மா? அவனின் அத்தனை கனவுகளும் இடற அவன் விழித்துக் கொண்டான். அவனுக்கு மூச்சு வாங்கியது. உடல் விதிர்த்து தேகம் வலிப்புக் கொண்டது. “அம்மா அம்மா” என்று அரற்றலானான். தாதியொருவர் அவனை நோக்கி ஓடிவந்தார். சிங்களத்தில் அவனுக்குப் புரியாத ஏதோ சொன்னார். அவன் தேகம் வேகம் வேகமாக உதறியது. பிற்பாடு எல்லாம் வேக வேகமாக நடந்தன. மருத்துவர் வந்து அவனுக்கு மயக்கவூசி போட்டார்.
அவனுக்கு விழிப்புத் தட்டியபோது இரவாகியிருந்தது. கண்களைத் திறக்க அவன் அருகே அப்பாவும் அம்மாவும் கலங்கிய விழிகளுடன் உடல் சோர்ந்து அமர்ந்திருந்தார்கள். அம்மாவைக் கண்டவுடன் உடல் இளகி நிம்மதி அவனின் நரம்புகளுக்குள் ஊடுருவியது.
அடுத்த நாள் மாலை அவனை அவசர பிரிவிலிருந்து சாதாரண பிரிவுக்கு மாத்தினார்கள். அவனைப் போலவே காயம் பட்ட பலர் அங்கிருந்தார்கள். பலருக்கு முகத்தைச் சுற்றி மருந்துக் கட்டுகள் போடப்பட்டிருந்தன. போலீசார் அங்கிருப்பவர்களுடன் கதைத்துக் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அம்மாவினதும் அப்பாவினதும் முகங்கள் வௌவால்கள் பறக்கும் இருண்ட நிச்சலமான வான் என இருந்தது.
“அண்ணாவை விசாரணைக்கு கூட்டிட்டு போனாங்கள்; இன்னும் விடல” இதை அம்மா அவனுக்குச் சொன்ன போது, அவனுக்கு முழுவதுமாக விளங்கவில்லை.
ஒருவாரம் கழித்தே அவனுக்கு அதன் விபரீதம் புரியத் தொடங்கியது. தலதா மாளிகையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பாதுகாப்புக் கடமையிலிருந்த போலீசார், இராணுவத்தினர், பெளத்தப் பிக்குகள் உற்பட பலர் கொல்லப்பட்டு இருந்தார்கள். விகாரையின் முன்னும் பின்னுமாக மூன்று குண்டுகள் ஒரே நேரத்தில் வெடிக்கப்பட்டிருந்தன. வெடிஹிட்டி மாளிகைக்கும், பத்திரிப்புவ முகப்புக்கும் பலத்த சேதம் ஏற்பட்டு இருந்தது. நாட்டின் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அறிவித்திருந்தார். மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் கடுமையான கண்டனத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்தன. கண்டி மாநகரம் முழுவதும் விசேச அதிரடிப் படையினரின் தேடுதலுக்கு உள்ளாகியது. நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் அவசரகால தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்கள். அவர்களின் பெரும்பாலானோர் மலையகத் தமிழர்களாக இருந்தார்கள்.
சிறிய காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சுயந்தனின் தமையனும் விசாரணைக்காக அன்றே அழைத்துச் செல்லப்பட்டான். அம்மாவும் அப்பாவும் அதிகாரிகளுடன் உடல் தளர மன்றாடி இறைஞ்சிய போதும் அவர்கள் விடவில்லை. ‘சிறிய விசாரணை தான். வாக்குமூலம் வேண்டிவிட்டு விட்டுவிடுவோம்’ என்றார்கள். நடுங்கும் விழிகளுடன் மூத்த மகன் சென்றதை, உணர்வுகள் ஒடுங்கிக்கொள்ள அம்மா பார்த்தவாறிருந்தார். இரண்டு வாரம் ஆகியது. இன்னும் விடவில்லை. மீண்டும் மீண்டும் கண்டி காவல் நிலையத்திற்கு அப்பா சென்றுவ ந்தார். விசாரணை முடிந்தவுடன் “புத்தாவை விடுவோம்” என்பதை திரும்பத் திரும்ப தடித்த உதடுகளால் ஒப்பேற்றிக் கொண்டிருந்தார்கள்.
“மாத்தையா மகனையாவது பார்க்க விடுங்க” என்று கேட்ட போதும் செவிசாய்க்காமல் மறுத்தார்கள்.
அடுத்த வாரம், இராணுவம் கைதிகளை பொறுப்பெடுத்துக் கொண்டது. தேடிச்சென்ற பெற்றோரை அவிசாவளையிலுள்ள படைமுகாமுக்கு போகச் சொன்னார்கள். தவித்துப் போனவர்கள் அங்கேயும் ஓடிப்போனார்கள். போய் பார்த்தபின் விதிர்த்து உறைந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பிள்ளைகளைப் பார்க்க விழிகள் நனைய கூடியிருந்தார்கள். இராணுவம் அவர்களின் பிள்ளைகளின் பெயர் விபரங்களை வாங்கிவிட்டு பின்னர் தாங்கள் சொல்லி அனுப்புவதாகக் கூறி அனுப்பினார்கள். பிடிவாதம் பிடித்த பெற்றோர்கள் வலுக்கட்டாயமாக மிரட்டி அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
“என்னுடைய மோனுக்கு எதுவுமே தெரியாது. பிரம்புக் கடையில கூலிவேலைக்கு போய் வாறவன். சும்மா பிடிச்சு அடைச்சு வைச்சிருக்கார்களே” அவர்கள் அருகிலிருந்த தாயொருவர் பெருத்த குரலில் ஒப்பாரியாகச் சொல்லிக் கொண்டிருந்தார். விழிநீர் கண்களிலிருந்து வெளியேறி அவரின் ரவிக்கையை நனைத்தமை அந்தச் சூடான வெயிலில் வெளீர் நிறக் கோடுகளாத் தெரிந்தன.
மூன்று வாரங்களுக்கு மேல் கொழும்பிலிருந்து பலருடன் அப்பா பேசிப்பார்த்தார். யார்யாரோ பேசினார்கள். ஆனால், தமையனைப் பார்க்கக்கூட முடியவில்லை. சுருங்கிய முகத்துடன் அவர்கள் இருந்தார்கள்.
அன்றைய மாத இறுதியில் அவர்களுக்கு கிடைத்த செய்திதான் பேரிடியாக உளத்தை தகைத்தது. “உங்கள் மகன் நமது பொறுப்பில் இல்லை; நீங்கள் காவல்துறையிடம் தான் கேட்க வேண்டும்” இதை அந்த இராணுவ அதிகாரி படைமுகாமில் நான்காவது தடவையாக அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
இன்னும் இரண்டு வாரத்தில் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் விடுப்புகள் முடிவடைந்து விட்டனவென்றும் தந்தியில் அப்பாவுக்கு அறிவுறுத்தல் வந்தது.
4
மூன்று மாதத்தின் பின் ‘உங்கள் மகனை நாங்கள் அப்பவே விட்டுவிட்டோம்’ என்றார்கள். பின்னர் கைது செய்யவில்லை என்றார்கள். முன்பின்னான தரவுகளைச் சொல்லிக் கொண்டிருந்த இராணுவமும் போலீசாரும் இறுதியில் தமக்கு ஏதும் சம்பந்தமில்லாதது போல நடந்துகொள்ளத் தொடங்கினர்.
மகனைப்பற்றி எந்தவிடயமும் தெரியாத அம்மா மயங்கி மயங்கி சரியலானார். அவரின் கண்ணீரும் மௌனமும் நித்தமும் அவர்களது வீட்டில் சிதறியது. உறவினர்கள் அவர்கள் அம்மாவின் மென்மையான கைகளைப் பிடித்தவாறு நம்பிக்கை துளிர்க்கும் விதமாகப் பேசிச்செல்வதும் நடந்தேறியது. பின்னர் அவர்களின் வருகையும் குறைந்து ஒருசேர நின்று போனது.
சமையலறையில் சமைத்த வண்ணம் அமர்ந்திருந்த அம்மா எரியும் தீயை இமையசையாது பார்த்தவாறே அப்படியே உறைந்து அமரத் தொடங்கினார். கருகிய வாசம் எழும்போதும் சுயநினைவுக்குத் திரும்பாமல் சிலையாகியிருந்தமை அப்பாவை பலமுறை அச்சுறுத்தத் தொடங்கியது.
சுயந்தன் மறுநாள் பாடசாலையிலிருந்து வரும்போது முதுகில் சுமக்கும் புத்தகப் பையில்லாமல் வந்தான். ஏனென்று அப்பா கேட்டபோது, “உங்களை நாளை வரட்டாம்” என்றுவிட்டு தரையைப் பார்த்தவாறு நின்றான்.
அப்பா அவனோடு பாடசாலைக்குச் சென்று தலைமையாசிரியரைச் சந்தித்தார். மூக்குக் கண்ணாடியை கழற்றி மேசையில் வைத்தவாறு தலைமையாசிரியர் “புத்தகப்பையை வேண்டி வைச்சுட்டு பிள்ளையை வீட்டே அனுப்பினதற்கு மன்னிக்கணும். பெற்றோரை இரண்டு தடவை வரச்சொல்லி மகனுட்ட சொல்லியிருந்தோம். அடுத்த நாள் வந்து மறந்துட்டேன் மறந்துட்டேன் என்கிறான். அதான் நினைவுல நிக்கச்செய்ய அப்படி செய்தோம்” என்றார்.
மேசையிலிருந்து இரண்டு தடினமான புத்தகங்களை விரித்தார். நீண்ட அடிமட்டத்தை எடுத்து குறுக்கா வைத்து பெறுபேறுகளைச் சொல்லத் தொடங்கினார். எல்லாம் ஐந்துக்கும் குறைவான புள்ளிகளையே கொண்டிருந்தன.
“என்ன பிரச்சினை ஏன் படிப்பு இப்படி பாதளத்துக்குள்ள போகுது?”
அப்பா இறுகிய முகத்துடன் மௌனமாக அமர்ந்திருந்தார். அவரின் மௌனம் தலைமையாசிரியருக்கு விநோதமாகப் பட்டிருக்கவேண்டும். புருவம் உயராமல் கண்களை விழித்துப் பார்த்தார். சுயந்தனின் அப்பாவின் கண்கள் மெல்ல மெல்ல சிவந்து கொண்டிருந்தன. அருகிலிருந்த சுயாந்தன் அசைவற்ற உடலாக இறுகி நின்றான். இருவரை மாறி மாறி பார்த்துவிட்டு தலைமையாசிரியர் மேலும் பேசலானார்.
“இதைக்கூட விட்டுவிடலாம்; ஓவியப்பாடத்தில் இவன் செய்த கூத்துதான் எங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கு” என்றார். அப்பா அதுவென்ன என்பதுபோல் பார்த்தார். நீண்ட வெள்ளைத்தாளை மேசை லாட்சிக்குள்ளிருந்து வெளியே எடுத்துவைத்தார். அதில் வண்ணங்கள் தாறுமாறாகப் பூசப்பட்டு இருந்தன.
“ஓவிய பாட ஆசிரியை யானை படம் ஒன்றை வரையச் சொல்லியிருந்தார். வகுப்பிலுள்ள எல்லாரும் வரைய இவன் மட்டும் வரையவில்லை. கேட்டதுக்கு இப்படி வரைந்து காட்டியிருக்கான். யானையை வரையச் சொல்ல, வரைய மாட்டன் என்று இருக்கிறான். அதட்டிக் கேட்ட ஆசிரியையை அடிக்கப் போயிருக்கான்” என்று விட்டு மறுபடியும் சுயந்தனை அவர் பார்த்தார்.
அப்பா மேசையிலிருந்த அடிமட்டத்தை எடுத்து சுயந்தனை அங்கேயே சரமாரியாக விளாசத் தொடங்கினார். அவனது வெளிர் நிறத் தோளில் சிவந்த கோடுகளை அவை வரைந்தன. தலைமையாசிரியர் திடுக்கிட்டு அப்பாவை மறிக்க மறிக்க அவர் இன்னும் மூர்க்கம் கொண்டு அடிக்கலானார். “உன்னால் தானே இவ்வளவு பிரச்சினை. எல்லாத்தையும் சிதைச்சுட்டியே பாவி” என்று வார்த்தைகளை வீசிவிட்டு இன்னும் வேகம் வேகமாக அவனது உடலெங்கும் அடித்தார். அவன் ஒரு கற்சிலையாக அசையாமல் நிலத்தில் பொருத்தியது போல நின்றான். சிறிது நேரத்தில் உடல் சோர்வடைய அடிமட்டத்தை வீசிவிட்டு மகனை கட்டிப் பிடித்துக்கொண்டு பெருங்குரல் எடுத்து அழலானார். அக்கம் பக்கத்து வகுப்பாசிரியர்கள் பதற்றத்துடன் வேடிக்கை பார்க்க உள்ளே கூடினார்கள். அவன் அசையாமலே இருந்தான்.
5
ஏறக்குறைய எண்பது பேர் கச்சேரிக்கு முன்பே கூடியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாகவே இருந்தார்கள். அவர்கள் கைகளில் பதாகைகள் காணப்பட்டன. “காணாமல் ஆக்கப்பட்டவர்களை உடனே விடுதலை செய்”, “எங்கள் பிள்ளைகள் எங்கே?” போன்ற வாசகங்கள் அவற்றில் தடித்த மையினால் எழுதப்பட்டு இருந்தன. சுயந்தனின் அம்மாவும் அவர்களில் ஒருவராக பதாகையை பிடித்தவாறு இருந்தார். அவர் கைகளில் ஏந்தியுள்ள பதாகையில் மகனின் புகைப்படம் பெரிதாக அச்சிடப்பட்டு இருந்தது. உதயன் பத்திரிகையிலிருந்து வந்திருந்த நிருபர் ஒரு தாயாரிடம் கதைத்துக் கொண்டிருந்தார். சுயந்தன் அதனை வெறுமே நோக்கிக்கொண்டிருந்தான்.
“உங்கட மகனை எப்ப பிடிச்சவங்கள்?”
“அவனுக்கு பதினேழு வயசு இருக்கும் போது”
“என்னத்துக்கு பிடிச்சவங்கள்?”
“அவன் ஒன்னுமே பண்ணல தம்பி, டியூஷன் முடிஞ்சு வீட்டுக்கு வந்திற்று இருக்கக்க ஆமிக்காம்புக்கு கிரனைட் வீசிட்டு பொடியள் ஓடிட்டாங்கள்; ரெண்டு ஆமி செத்தது. அப்பக்க ரோட்டில இவன் நின்றதால பிடிச்சவங்க. இன்னும் விடல”
“இப்ப அவருக்கு எத்தனை வயசு?”
“இருபத்தியாறு ஆகுது தம்பி” அதைச் சொல்லும்போது அவர் கண்களிலிருந்து கண்ணீர் வரவேயில்லை. இறுக்கமான முகத்தில் ஒரு தளர்வு சுரந்து கொண்டிருந்ததை சுயந்தன் கண்ணுற்றான். அவன் திரும்பி வானத்தைப் பார்த்தான். மகோகனி மரங்களின் இலைகளைக் கடந்து சூரிய ஒளி அவன் கண்களைக் குத்திற்று. திரும்பி வீதியைப் பார்த்தான். தேர்தல் சுவரொட்டிகள் மதில்களில் ஒட்டப்பட்டு இருந்தன. “இலக்கம் மூன்று ரணில் விக்கிரமசிங்க. ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களியுங்கள்.” கீழே பச்சை நிறத்தில் யானையின் சின்னம்.
சுயந்தன் உயர்தர வகுப்புக்குச் செல்ல ஆரம்பிக்கும்போது யுத்தம் முழுமையாக முடிவுக்கு வந்தது. டியூட்டரிக்குச் சென்றுவிட்டு, சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்த சுயந்தன் தொலைக்காட்சியை உற்றுப்பார்த்தான். நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தொலைக்காட்சியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். சிங்களத்தில் உரையாற்றும் அவரது உரைக்கு தமிழில் பின்னணிக் குரல் வழங்கப்பட்டவாறிருந்தது. “பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை எமது இராணுவ வீரர்கள் மீட்டுத் தந்திருக்கிறார்கள். எமது தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை போர் வீரர்களாக அனுப்பிவைத்தார்கள். இது அவர்களுக்கு கிடைத்த வெற்றி!” அப்பா மௌனமாக தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். அவனுக்கு எரிச்சல் மேலிட்டது.
“ஏன் இதை வேலைவெட்டி இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறியல்?”
ரிமோட்டை பற்றி எடுத்து சனலை மாற்றினான். நஷனல் ஜீயோகிராப்பியில் யானைகள் கூட்டமாக ஓர் ஆற்றுச்சரிவில் இறங்கிக் கொண்டிருந்தன. கடைசியாக இறங்கிக் கொண்டிருந்த குட்டியானையை அதன் தாய் யானை கருணை மிளிர பார்தவாறிருந்தது. சுயந்தனின் கைவிரல்கள் தன்னிச்சையாக தொலைக்காட்சியை அணைத்தன.
6
கன்னத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டு சுயந்தன் உப்புக்குளம் நீர் தேக்கத்தின் அருகிலிருக்கும் மைதானத்தின் எல்லையில் நின்றான். நீர்த் தேக்கத்தில் எல்லா விம்பங்களும் தெளிவாகத் தெரிந்தன. முளைவிட்ட மீசையில் வியர்வைகள் குமிழ்களாகப் படிந்தன. சூரியன் சுட்டெரிக்கும் கதிர்களை நீள் அம்புகளாக ஏவிக்கொண்டிருந்தது. இன்னும் மூன்று பந்துகள் மட்டுமே மீதம் இருந்தன, கடைசி ஓவருக்கு. அதன் பின் சுயந்தன் பந்து வீச வேண்டும். காலையிலிருந்து தொடங்கிய கிரிக்கெட் ஆட்டம் ஊர் பொடியளுடன் மீண்டும் மீண்டும்.
“அடேய் சுயந்தன்..” என்ற ஒலி சீண்டியபோது திரும்பிப் பார்த்தான். செல்வரத்தினம் மாமா சைக்கிளில் நின்று அவனை கைகாட்டி அழைத்தார். இவர் ஏன் இங்கு என்று யோசித்தவாறு என்னவென்று சைகையால் கேட்டான்.
“ஆஸ்பத்திரிக்குப் போகணும் உடனே வா” பதிலுக்கு மாமா கத்தினார்.
“ஏன் என்னாச்சு?”
“உன் அம்மாவுக்கு ஏலாமக்கிடக்கு”
மைதானத்திலிருந்து சீறிவிலகி அவரை நோக்கி எழுந்து சென்றான். அவன் கால்களை முட்கள் கிழித்தன.
“சைக்கிளில் ஏறு” மாமா அவசரப்படுத்தினார்.
அவன் பாதணிகளைக் கூட அணியாது அவர் சைக்கிளில் தாவி ஏறினான். உப்புக்குளம் நீர்த்தேக்கத்தில் அவர்களின் விம்பம் தெளிவாகத் தெரிந்தது. காற்று அடிக்க நீர் அசைய வான்மேகத்தின் விம்பங்களின் ஊடாக அவர்களின் விம்பம் அலையாக நெளிந்து தெரிந்தது. ஒரு பெரிய தொடர் மாறுதல் கணம்தோறும் மாறுவது போல அவர்களின் விம்பம் மாறிக்கொண்டிருந்தது. நீரோட்டத்தில் பிரதிபலிக்கும் வான்மேகத்தின் பிம்பமே உலகக் காட்சி. நீரின் அசைவு ஒரு பெரிய தொடர்மாறுதல்.
அவன் ஆஸ்பத்திரி போய்ச் சேர்ந்தபோது அம்மா இறந்திருந்தார். அவனுக்கு அழுகை வரவில்லை. அமைதியாக நின்றான். முகத்தில் தத்தளிப்பின் ரேகைகள் சலனமிட்டு கோடாக வரைந்தன. வீட்டுக்குப் பிரேதம் வந்தபோது அக்கம்பக்கத்து பெண்கள் ஆர்ப்பரித்து அழுதார்கள். அவர்களோடு சேர்ந்து அப்பாவும் அழுதார். அதைப் பார்க்க அவனுக்கு எரிச்சல் மிளிர்ந்தது. ஏதோவொரு அமைதியைத் தேடினான். உடனே கிணற்றில் குதித்து மூழ்க வேண்டும் என்ற தவிப்பு ஏற்பட்டது. அப்பாவின் கண்களைப் பார்த்தான். வெறுப்பு கசிந்து கொண்டிருந்தது.
அம்மாவுக்கு அவன்தான் கொள்ளிவைத்தான். அப்பா வெள்ளை வேட்டி கட்டி மேலுடம்பில் ஆடையின்றி காற்றுத் தீண்ட செம்மணி மயானத்தில் நின்றார். அவர் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருப்பது போலவும் அவனுக்குப்பட்டது. உறவினர்கள் தமக்குள் கதைத்தவாறு நின்றார்கள். எரிந்து கொண்டிருந்த உடலிலிருந்து கரும்புகை காற்றின் திசைக்கு ஒருசேரப் பறந்தது. யானையின் துதிக்கையென எழுந்து செல்லும் புகையில் அம்மாவின் சரீரம் கரைந்து கொண்டிருந்ததை விம்மலுடன் கண்ணுற்றான். உடனே வெடித்து அழ வேண்டும் போல உணர்வுகள் எழுந்தன. எவ்வளவு கட்டுப்படுத்திப் பார்த்தும் முடியாமல் அவன் அழத் தொடங்கினான். “ஐயோ அம்மா.. உன்னையும் அண்ணாவையும் கொன்றது நான்தானே…” அவன் குரல் மயானத்தை நிறைத்தது. உறவினர்கள் திகைத்து அவனை நோக்கி ஓடிவந்தனர். அவன் மயங்கிச் சரிந்தபோது காலில் வேட்டி இடறியது
7
மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் ஆளுநர் வளாகம் முன்னே நடந்து கொண்டிருந்தது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற வசனத்தை வலியுறுத்தி பல்வேறு பதாகைகள். விறைத்த முகத்தில் நம்பிக்கையை ஒளித்துவைத்த தாய்மாரின் முகங்கள் வெயிலின் வேதனையால் தொப்பலாக நனைந்திருந்தன. சுயந்தனுக்கு போராட்டத்தில் கலந்துகொள்ளும் பலரையும் தனிப்படத் தெரிந்திருந்தது. அவர்கள் எல்லோரும் தங்களுக்குள் அணுக்கமானவர்களாக ஆகியிருந்தார்கள். ஊடகங்கள் “உங்கள் பிள்ளை இன்னும் உயிருடன் இருப்பதை நம்புகிறீர்களா?” என்ற கேள்வியைக் கேட்டு தாய்மார்களைச் சீண்டி அழவைத்து ஒளிப்படம் பிடிக்கும் தந்திரத்தை அவன் அடியோடு வெறுத்தான். இன்றும் சில ஊடகங்கள் அதே தாய்மார்களிடம் “அரசாங்கம் உங்கள் பிள்ளைகள் பற்றித் தங்களுக்கு தெரியாது என்றும் மரணச் சான்றிதழ் தர ஒத்துக்கொண்டு இருக்கிறார்களே..” என்று கேட்டுவிட்டு அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்று ஆவலுடன் விரல் நுனிப் பதற்றத்துடன் காத்திருந்தார்கள். ஒரு தாயின் வெடித்த அழுகை பிசைந்து கொண்டு கூட்டத்தில் எழுந்தது. அந்த அழுகையை கேட்க சுயந்தனுக்கு வெறுப்பும் எழுந்தது. போராட்ட இடத்திலிருந்து வெளியேறி சைக்கிள் நிறுத்தத்துக்கு வந்தான். மஹிந்த ராஜபக்சவின் புகைப்படம் இரும்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டு ‘நீடுழி வாழ்க’ என்ற தமிழ் எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டு நாட்டப்பட்ட பதாகையை கண்ணுற்றான்.
சைக்கிளை எடுத்துக்கொண்டு நேர் வீதியில் செல்லத் தொடங்கினான்.
அவன் சுண்டுக்குளி அங்கிலிகன் தேவாலயத்தை அடைந்தபோது மகோகனி மரங்களின் குளிர்மையே முதலில் அவனை வரவேற்றது. அருகே பரியோவாணன் கல்லூரியின் மாலை நான்கு மணிக்கான மணிச்சத்தம் சீரான அலைவரிசையில் ஒலித்து ஓய்ந்தது.
தேவாலயத்தில் யாருமே இருக்கவில்லை. இனிமையான நறுமணம் ஒன்று பரவுவது போல அவன் உணர்ந்து இருந்தாலும் அது என்ன வாசம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. கடைசியில் அமர்ந்து தேவாலயத்தை வேடிக்கை பார்த்தான். மாலை பிரார்த்தனைக்காக மெல்ல மெல்ல சிலர் வரத் தொடங்கினார்கள். மெல்லத் தலையை அசைத்து தங்களுக்குள் இரண்டொரு வார்த்தையை ஆங்கிலத்தில் பேசினார்கள். தேக்கு மரத்தில் செய்த யன்னல்களும் வளைவான ஒரே மாதிரியான சுவர் அலங்காரங்களும் பிரிட்டிஷ் எச்சத்தை பிரதிபலித்தன.
“இது போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்டபோது பயன்படுத்திய கொடி, இலட்சினை; இது ஆங்கிலேயர் இலங்கையை ஆண்டபோது பயன்படுத்திய கொடி..” சமூகவியல் ஆசிரியர் தரம் எட்டு படிக்கும்போது பெரிய வெள்ளைப் பேப்பரில் அச்சடித்துக் காட்டிய தேசியக் கொடிகள், இலச்சினைகள் அவன் நினைவில் வந்தன. அநேகமானவற்றில் யானையும், விகாரையும் தவறாமல் இருந்தன.
பிரார்த்தனை கீதங்கள் அவன் செவிகளில் விழுந்தன. திரும்பத்திரும்ப மன்றாடல்கள்தான். இறைவா என்னை காத்துக் கொள். என் குழந்தைகளை, என் குடும்பத்தை காத்துக்கொள். எவ்வளவு வேண்டுதல்கள்! பரீட்சை ஜெயிப்பதற்காக, வியாபாரம் செழிப்பதற்காக, நோய் குணமாவதற்காக என்று சீராக அவை ஒலித்தன. திடீரென்று ஒன்றை கவனித்தான். அனைத்து பிரார்த்தனைகளும் வந்த பிரச்சினைகளுக்காக அல்ல. வரக்கூடும் என அஞ்சப்படும் பிரச்சினைகளுக்காகவே. அவனுக்குள் விரக்தி குமிழ் விட்டது. வெளியே எழுந்து ஓடினான். சைக்கிளில் தாவி ஏறி வேகம் வேகமாக மிதித்தான். ஆஸ்பத்திரி வீதியைக் கடந்து ஆரியகுளம் சந்தியை அடைந்தான்.
நாகவிகாரை அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. என்ன விசேஷம் என்று யோசித்தான். நாளை மறுநாள் வெசாக் தினம் என்பதை அப்போதுதான் உணர்ந்தான். கால்கள் தன்னிச்சையாக விகாரைக்குள் செல்லத் தலைப்பட்டன. உள்ளே நுழைந்தான். ஓர் அமைதி அவனைக் கவ்விக்கொண்டது. புத்தரைப் பார்த்தான். ஊதுபர்த்தி புகை மெல்ல மெல்ல அசைந்து காற்றில் கரைந்தது. அவன் இளகத் தொடங்கினான்.
தாமரை இதழ்களை பொறுக்கியவாறு வயதான பெளத்தத் துறவி சற்று தள்ளி நின்றார். அவன் இதயம் பலமடங்கு வேகவேகமாக அடித்துக்கொள்ளத் தொடங்கியது. கண்களில் கண்ணீர் கசிந்து நெகிழ்ந்து வடிந்தது. அவர் கண்கள் இவன் கண்களை தீண்டின. அவர் பின்னே அவன் சென்றான். பாலி மொழியில் ஓதிக்கொண்டு பிரித் நூலை எடுத்தார். அவன் கைகள் தன்னிச்சையாக அவரிடம் நீண்டன. அவரின் ஆக்காட்டி விரல் சிதைந்திருந்தது. எந்தப் பதற்றமும் இல்லாமல், இந்தப் பாலி மொழியில் ஓதியதன் அர்த்தம் என்னவென்று கேட்டான். அவர் கொச்சைத் தமிழில் சொல்லத் தொடங்கினார். அவனின் அக மொழி தனக்குள் கோர்த்து சீராக அதனை அடுக்கிக் கொண்டது. பின்னர் தனக்குள்ளே ஒழுங்கமைத்தது.
கடந்த காலத்தில் நாம் இருந்தோம். இப்போது அதில் இல்லை. எதிர்காலத்தில் நாம் இருக்கலாம். ஆனால் இந்தக் கணத்தில் அதிலும் இல்லை. நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கிறோம்; இறந்தகாலமும் எதிர்காலமும் இல்லை. அதோடு நிகழ்காலமும் இல்லை. நிகழ்காலம் என்பது நாம் உணர்ந்து கொள்ளும் ஒரு தருணம் மட்டுமே- அடுத்த கணமே அது இறந்து போன ஒரு கணம். எதிர்காலம் நம்முன்னால் தேய்ந்து செல்வதை உணரும் ஒரு வெளிப்பாட்டுத் தருணமே நிகழ்காலம். அதை ஒரு நிலையின்மையாக மட்டுமே உணரலாம். அடுத்தடுத்த இருகணங்களிலும் மனிதன் ஒருவனாக இருக்க முடிவதில்லை.
அவன் செவிகள் நடுக்கத்துடன் குளிர்ந்து கொண்டிருந்தன.
பாரிய வாகனம் அவன் முன்னே வந்து நின்றது. பின்னால் கம்பிக் கூண்டுகள். உள்ளே பார்த்தான் இரண்டு யானைகள் நின்றன. ஒன்று தாயாக இருக்கலாம். மற்றையது அதன் குட்டியாக இருக்கலாம். அவன் பொருட்படுத்தாது விலகி நடந்தான். பின்னால் குட்டி யானையின் பிஞ்சு பிளிறலை ஒரு கணம் உணர்ந்தான். பின்னர் உணரவேயில்லை.