எல்லாம் தெரிந்ததாய் எண்ணிச் செருக்குவார் புல்லறிவோர் - போலி நிலை, தருமதீபிகை 129

நேரிசை வெண்பா

ஏட்டுப் படிப்பை இதந்தெரிந்து கல்லாமல்
கேட்டுப் படிப்பே கெழீஇநின்று - நீட்டிமேல்
எல்லாம் தெரிந்ததாய் எண்ணிச் செருக்குவார்
புல்லறிவோர் எங்கும் புகுந்து. 129

- போலி நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நல்ல நூல்களை நன்குணர்ந்து படியாமல் பொல்லா நெறியில் பொருந்தி நின்று எல்லாம் தெரிந்ததாகப் புல்லறிவாளர் செருக்கித் திரிவர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் போலிக் கல்வியின் புலைநிலை கூறுகின்றது.

இதம் தெரிந்து கற்றலாவது அறிவு நலம் கனிந்த இனிய நூல்களைத் தனியுணர்ந்து நல்ல குருவிடம் நன்கு தெளிதல்.

தாமாக உரிமையுடன் ஊன்றிப் படியாமல் கற்றவர் வாய்மொழியை ஒட்டிக் கேட்டு உருப்போட்டுக் கொள்ளல் கேட்டுப் படிப்பு என்றது. பட்டித்தனமான இது ஒருவகையிலும் உருப்படாது; கேட்டுப் படிப்பாய்க் கெடுநிலையில் இழியும்.

கெழுமல் - பொருந்தல். அளபெடை விழைவின் விளைவை விளக்க வந்தது.

உள்ளம் பதிந்து உண்மையாகக் கற்ற கல்வி உயிர்க்கு உறுதியாய்த் திண்மை புரிந்தருளும்; அங்ஙனம் கல்லாதது புன்மையாய்ப் புலைப்படுத்திப் போகும்.

கண் ஊன்றி எண்ணிக் கற்றவர் கல்வியின் எல்லையை உணர்ந்து கருத்து அடங்கி நிற்பர்; அல்லாதார் எல்லாம் தெரிந்ததாய்ப் பொல்லாச் செருக்குடன் பொங்கித் திரிவர்.

’எங்கும் புகுந்து புல்லறிவோர் செருக்குவார்’ என்றது அவரது புன்மையும் போக்கும் புலன் தெரிய வந்தது.

’அச்சமும் நாணமும் அறிவு இலோர்க்கு இல்லை’ – நறுந்தொகை;

ஆதலால் நல்ல அறிவாளிகள் எதிரேயும் புல்லர் அஞ்சாது பேச நேர்கின்றார். அவர் போலித்தனம் காலித்தனமாய்க் களிப்பு மீதூர்ந்துள்ளது. அக்களிகளின் இளிவு பழி நிலையில் எழுகின்றது.

மலைச்சாரலில் உதிர்ந்து கிடக்கின்ற சிங்கப் பற்களை வாயில் ஒட்ட வைத்துக் கொண்டு சில நாய்கள் புலிமுன் குரைப்பது போல், கலைச்சாரலில் சிதறியுள்ள சிலவுரைகளை வாய்ப்பாடம் செய்து கொண்டு மேதைகள் முன் பேசிப் பேதைகள் பிழைபடுகின்றனர்.

நேரிசை வெண்பா

வெற்றியுறு கோளரிப்பல் வீழ்ந்தசில கொண்டுநாய்
கொற்றப் புலிமுன் குரைப்பொக்கும் - குற்றமறக்
கற்றவர்முன் முன்னூல் உரைசில கற்றார்போல்
மற்றவர் கேட்டுரைக்கும் மாண்பு. 120,

- கல்வி, இன்னிசை யிருநூறு, சோழவந்தானூர் அரசஞ் சண்முகனார்

இப்பாட்டு இங்கே சிந்திக்கத்தக்கது. தானும் நன்கு கற்று, மேலும் நல்லவர் வாய்மொழிகளைப் பெற்று ஞானம் படிந்திருத்தல் ஒருவனுக்கு நலமாம்: அவ்வண்ணம் உணர்ந்து படியாமல் உள்ளம் தருக்கி ஊனம் புரிதல் ஈனம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Mar-19, 3:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

சிறந்த கட்டுரைகள்

மேலே