நல் நோக்குச் சிந்தனையில்
நல் நோக்குச் சிந்தனையில்
*****************************************************
எழுத்துத் தளத் தோழர்களே தோழியரே அனைவர்க்கும் வணக்கம் . நம்மில் தோழருக்கோ
அல்லது தோழியர்க்கோ குழந்தைப் பேறு தாமதமாகலாம் அல்லது ஏதாவது குறை இருக்கலாம்
அல்லது தோழர் தோழியர் வாரிசுகளுக்கு அந்த குறை இருக்கலாம் . அவ்வாறு இருப்பின்
அவர்கள் பயனுற அதற்கான முயற்சிகளோடு பின்வரும் செய்யுட்களை அனுதினம் பாராயணம்
செய்து வர பயன் பெறலாம் . அந்த நோக்கில் இப் புனைவு பதிவு செய்யாப்படுகிறது .அனைவரும்
பயன் பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகிறேன் ..
தாயே துர்காம்பிகையே அனைவர்க்கும் அருள்வாயே
********************************************************************************
தித்திக்கும் இன்சுவையே தெவிட்டாத தெள்ளமுதே
இத்திக்கு அத்திக்கு என்றுநீ நில்லாது
எத்திக்கும் கோலோச்சி அண்டிவரும் அன்பரின்
பத்திக்கு மனமிரங்கும் தாயவளே துர்க்கையம்மா -- எங்கள்
மகவுக்கோர் நன்மகவை மனமுவந்து அளிப்பாயே !
சுந்தரப் புன்னகையே சந்திர வதனமே
செந்தூர இதழிரண்டை தன்னகத்தே கொண்டவளே
கந்தத்தில் பொட்டிட்டு பூந்திரளால் அலங்கரித்து
மந்திரங்கள் போற்றியிட மனம்குளிரும் துர்க்கையம்மா -- எங்கள்
மகவுக்கோர் நன்மகவை மனமுவந்து அளிப்பாயே !
மாதவியே மாதவர்க்கு வரமருளும் மாதேவியே
மாதவனின் சோதரியே மாதேவன் இடப்பங்கே
ஆதவன் முதலான கோளரங்கின் தலைமைகளே
யாதுமாகி நிற்கும் அன்னையே துர்க்கையம்மா --எங்கள்
மகவுக்கோர் நன்மகவை மனமுவந்து அளிப்பாயே !
ஒருகரத்துச் சுழற்கரங்கும் மற்றொன்றில் ஒலிச்சங்கும்
கருவண்ண மாலனவன் பரிந்தே உனக்களிக்க
விரும்பியே அதையேற்று ஏகாந்த தோற்றமிடும்
கரும்பே கனியமுதே தாயவளே துர்க்கையம்மா --எங்கள்
மகவுக்கோர் நன்மகவை மனமுவந்து அளிப்பாயே !
குழம்பிய குட்டையாய் இவனிருந்த வேளையிலே
கிழக்கு முகமாய் நோக்கும் உன்தாளில் சரணடைய -இவ்
ஏழையும் கடைத்தேற அன்புமழை பொழிந்தவளே
அழகிய தோற்றத்து இனியவளே துர்க்கையம்மா - எங்கள்
மகவுக்கோர் நன்மகவை மனமுவந்து அளிப்பாயே !
கொடியிடையில் ஒட்டிதனை அணிந்தஉன் தோற்றத்தில்
கூடுவோர் அனைவர்க்கும் கோடியின்பம் தானுறுமே
கொடிமலரே கோமளமே கருணைமிகு துர்க்கையம்மா
மடிப்பிச்சை வேண்டினோம் படியிறங்கியே வந்து --எங்கள்
மகவுக்கோர் நன்மகவை மனமுவந்து அளிப்பாயே !
விதை ஊன்றி நீர்விடவே செடியொன்று தோன்றிடுமே
உதைபட்டு வாழ்ந்திடவோ பிறப்புற்றோம் இப்புவியில்
கதையாய்ப் போகாது காரணமாய் யாமிருக்க
உதைக்காது அருள்கூட்டு உலகாளும் துர்க்கையம்மா --எங்கள்
மகவுக்கோர் நன்மகவை மனமுவந்து அளிப்பாயே !
அற்புதப் பாவையே அறம்காக்கும் நாயகியே
வரம்வேண்டும் அன்பர்க்கு ஆதரவாய் மனமிரங்கும்
காரணியே பூரணியே நல்லவளே துர்க்கையம்மா --உன்
பொற்பாதம் பற்றினோம் கைவிடாது ஏற்றிடுவாய் --எங்கள்
மகவுக்கோர் நன்மகவை மனமுவந்து அளிப்பாயே !
கட்டளையாய் நீயிடும் பணிகளதை யாமேற்க--இவண்
யாமீட்ட சுமையனைத்தும் நீசுமக்க லாகாதோ
கிட்டும்வழி அதுவேண்டி சரணடைந்தோம் உன்னடியில்
தட்டாது ஒதுக்காது ஏற்பாயே துர்க்கையம்மா --எங்கள்
மகவுக்கோர் நன்மகவை மனமுவந்து அளிப்பாயே !
சுற்றமிகு சூழலிலே உற்றவழி ஒன்றுண்டோ
மற்றவழி யாமறியோம் மாற்றமது தெரிவதற்கு
சுற்றினோம் உன் தாளை ஏற்றவழி காண்பதற்கே -எமைச்
சுற்றாது அருள்கூட்டு எம்தாயே துர்க்கையம்மா --எங்கள்
மகவுக்கோர் நன்மகவை மனமுவந்து அளிப்பாயே !
**********************************
குறிப்பு = தோழமைகளுக்கு இக்குறை இருப்பின் " எங்களுக்கு ஓர் நன்மகவை மனமுவந்து
அளிப்பாயே " என பாராயணம் செய்யவும் .
தோழமைகளின் வாரிசுகளுக்கு இக்குறை இருப்பின் " எங்கள் மகவுக்கோர் நன்மகவை
மனமுவந்து அளிப்பாயே " என பாராயணம் செய்யவும் .
(அனைவரும் நலம்பெற்று இன்புறவே இப்பதிவு )