விவசாயியும் கவிஞனும்

அவன்
விதைப்பது விதை
இவன்
விதைப்பது கவிதை

அவன்
படைப்பிற்கு மகசூல்
இல்லை
இவன் படைப்பிற்கு
வசூல் இல்லை

அவன்
நெல்லை அறுவடை
செய்பவன்
இவன்
சொல்லை அறுவடை
செய்பவன்

இருவருமே
அறுவடை செய்து
நல்ல விலையின்றி
வாடுபவர்கள்

அவனுக்குத் தேவை
எருது
இவனுக்குத் தேவை
விருது

அவன்
பூக்களைப் படைப்பவன்
இவன்
பாக்களைப் படைப்பவன்

அவன்
உழுதுண்டு வாழ்பவன்
இவன்
எழுதியுண்டு வாழ்பவன்

அவன்
களை எடுப்பவன்
இவன்
கலை வடிப்பவன்

அவனுக்கும்
வரிவிலக்கு இல்லை
இவனுக்கும்
வரி விலக்கு இல்லை

அவன்
தன்னைப் பேணாமையைப்
பேசுகிறான்
இவன்
தன் பேனா
மையால் பேசுகிறான்

அவன்
இந்தியாவின்
முதுகெலும்பு
இவன்
புதிய இந்தியா
உருவாக்க எழுதும்
புது எலும்பு

அவன்
வெறுங்கை
அடுப்பில் பூனை
கொண்டவன்
இவன்
எதுகை
எடுப்பாய் மோனை
கொண்டவன்

பனித்துளியைக்
குடித்து
வளரும் புள் அவன்
இவன்
மைத் துளியை
வடித்து
வளரும் புலவன்

அவன்
உரத்தைப் போட்டு
உயரத்தை நடுபவன்
இவன்
புது மை ஊற்றி
புதுமை நாடுபவன்

இறைவன்
இருவரையும்
தாண்ட விடுவதில்லை
வருமைக் கோட்டை

என்று இவர்களுக்காக
பேசப் போகிறது கோட்டை

எழுதியவர் : புதுவைக் குமார் (6-Apr-19, 8:56 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 105

மேலே