சிறு குழந்தைகளுக்குக் கற்பிக்க உதவும் மொழி
...............................................................................................................................................................
நம் மாநிலத்தில் பல பெற்றோர்களுக்கு ஆங்கில மோகம் உள்ளது. மழலையில் குழந்தை நான்கு வார்த்தை ஆங்கிலம் பேசினால் புளங்காகிதமடைந்து விடுகிறார்கள். இன்றைய ஆங்கில வழிக் கல்வி முறை குழந்தைகளின் வளர்ச்சிக்கு எந்தளவுக்கு பயன் படுகிறது என்று பார்ப்போம்.
ஒரு குழந்தையின் சிந்தனைத் திறன் மேம்படுவதற்கு பல காரணிகள் அவசியம். பெற்றோர்களின் பராமரிப்பு, ஊட்டச்சத்து, தூண்டுதல், பயிற்சி இவற்றோடு மொழி வளமும் அவசியம். சிறு குழந்தைகள் விளையாடும் போது பொம்மையோடு பேசிக் கொண்டிருக்கும். அந்த மொழி நடைமுறையிலிருக்கும் தாயின் மொழியாகத்தான் இருக்கும். இந்த மொழிதான் பிற்பாடு தன்னுள் பேசிக் கொள்ளும் உள்மொழியாக (Internal speech) ஆகி விடுகிறது.
உள் மொழியின் வளத்துக்கும் சிந்தனை ஓட்டத்துக்கும் முக்கிய பங்கு உண்டு. சிந்தனையை ஒழுங்குபடுத்திக் கொண்டு செல்ல ( logical thinking) மொழிவளம் முக்கியம். நல்ல சிந்தனை ஓட்டம் கற்பனை வளத்தையும் படைப்பாற்றலையும் தருகிறது.
புரிந்து கொள்ளவும் புரிந்தவற்றை எடுத்துச் சொல்லவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் மொழி தேவைப்படுகிறது.
தாயின் மொழி உள்மொழியாவதால் அந்த மொழியில் கற்றுக் கொள்வது எளிதாகிறது.
இது தவிர, கற்பிக்க எடுத்துக் கொள்ளும் மொழிக்கு சில அம்சங்கள் தேவைப்படுகின்றன. அவற்றுள் முக்கியமானது குழந்தைகளைக் குழப்பாமல் இருக்க வேண்டும்.
ஒரு குழந்தையின் தாய்மொழி தமிழாய் இருக்க, அது ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ளும்போது என்ன ஆகிறதென்று பார்ப்போம்.
ஒரு குழந்தை தன் மூன்றாம், நான்காம் வயதில் ஏ, பி சி டி கற்றுக் கொள்கிறது. இந்த வரி வடிவத்துக்கு இந்த சப்தம் என்று தெரிந்து கொள்கிறது..
இன்னொரு குழந்தை அதே வயதில் அ, ஆ, இ, ஈ கற்றுக் கொள்கிறது. எழுத்தின் இந்த வடிவத்துக்கு இந்த சப்தம் என்று தெரிந்து கொள்கிறது..
எழுத்து கற்றுக் கொண்டபின் சொல்லுக்கு வருகிறது முதல் குழந்தை. Apple என்று இருக்கிறது. அதை "ஏப்பிலெ" என்று கற்றுக் கொடுத்தால்தான் அதன் சிந்தனை ஓட்டம் தெளிவாக இருக்கும்.( தனியாக நிற்கும் எழுத்துக்கு என்ன உச்சரிப்போ சொல்லில் அந்த எழுத்து வரும்போதும் அதே உச்சரிப்பு இருக்க வேண்டும்.) நாம் அப்படியா கற்றுக் கொடுக்கிறோம்?
சில பள்ளிகள் ஒன்றாம் வகுப்பில் ஏ,பி சி டி-யை அ, பொ கொ, டொ என்று கற்றுக் கொடுக்கின்றன. இது நன்றாகப் பதிந்தபின்தான் சொல்லுக்குப் போகின்றன. அவர்கள் எழுத்தை முடித்து, சொல்லை முடித்து வாக்கியத்துக்குள் போகிறபோது குழந்தைக்கு ஒன்பது வயதாகி விடும். இவ்வளவு நிதானமாக கற்றுக் கொடுக்கும் பள்ளிகள் நம் தமிழகத்தில் அரிதாகவே இருக்கின்றன. அப்படிப்பட்ட பள்ளிகள் பெற்றோர்களின் அபிமானத்தைப் பெறுவதில்லை.
அ, ஆ, இ, ஈ படிக்கிற இன்னொரு குழந்தைக்கு இந்தத் தொல்லை இல்லை. அதற்கு உச்சரிப்பு முரண்பாடு வருவதில்லை. அது மட்டுமல்ல "அ" எங்கிருந்தாலும் "அ" தான். "உ" எங்கிருந்தாலும் "உ" தான். ஆங்கிலத்தைப் போல இது குழப்புவதில்லை. ஆங்கிலத்தில் "U "என்ற எழுத்து சில இடங்களில் "உ" உச்சரிப்பையும் சில இடங்களில் "அ" உச்சரிப்பையும் கொடுக்கிறது. "C "என்ற எழுத்து "க" உச்சரிப்பையும் "ச" உச்சரிப்பையும் கொடுக்கிறது. இப்படி வரி வடிவமும், உச்சரிப்பும் மாறி மாறி வரும்போது சிறு குழந்தைகள் குழம்பி விடுகின்றன. அவர்களின் உள்மொழி வரிவடிவமாக மாறாமல் சப்தத்தோடு நின்று விடுகிறது. இது தெளிவான சிந்தனை ஓட்டத்தைத் தருவதில்லை.
பெற்றோர்களுக்கு ஆங்கிலம் தெரியாத பட்சத்தில் அவர்களிடம் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதும் இயலாது போகிறது. போதிய அவகாசம் கிடைக்காத பட்சத்தில் குழந்தைகள் சிந்தனை செய்வதை விடுத்து மனனம் செய்யும் முறைக்கோ, ஆசிரியர்கள் பேசுவதைக் காப்பியடித்துப் பேசும் முறைக்கோ தாவி விடுகின்றன. ஆசிரியர்கள் கற்பித்தால் ஒழிய சுயமாகக் கற்றுக் கொள்வது தடைப்பட்டுப் போகிறது.
இரண்டாவது குழந்தை ஆறு ஏழு வயதிற்குள் வாக்கியத்துக்கு வந்து விடுகிறது. அதற்குப் பள்ளி மொழியும் வீட்டு மொழியும் ஒன்றாக இருப்பதால் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது. உள்மொழி செழுமையாக இருப்பதால் எண்ணவோட்டம் நன்றாக இருக்கிறது. இப்போது இது ஆங்கிலம் கற்றுக் கொள்ளத் தயாராகிறது. ஆம்.. ஏழு வயதுக்குப் பிறகுதான் ஆங்கிலம் வர வேண்டும். ( இங்கிலாந்தில் கூட குழந்தைக்கு ஆங்கிலத்தில் வாக்கிய அமைப்பு வருவதற்கு ஒன்பது வயதாக வேண்டும்.. ஆங்கிலத்தின் மொழியமைப்பு அப்படி...! )
அது A B C D எழுத்துக்களை ஏ,பி, சி, டி என்று மனதில் பதித்துக் கற்றுக் கொள்கிறது. "ஏப்பிலெ ன்னு எழுதணும் ஆப்பிள்னு படிக்கணும்.." என்று தனக்குள் பேசிக் கொள்கிறது. உச்சரிப்பு முரண்பாடுகளால் அது குழம்புவதில்லை. முரண்பாடுகளைக் கிண்டல் செய்கிறது. எதைப் புரிந்து கொள்ள வேண்டும், எதை மனனம் செய்ய வேண்டுமென்று அது தெரிந்து கொள்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் ஆசிரியர்கள் இல்லாமல் சுயமாகக் கற்றுக் கொள்வதும், தேடித்தேடி கற்றுக் கொள்வதும், வினா எழுப்பி விடை காணப் புறப்படுவதும் அதற்குச் சாத்தியமாகிறது.
சிறு குழந்தைகளுக்குக் கற்பிக்க ஆங்கிலம் ஒரு சரியான மொழியல்ல என்பது என் கருத்து. அதைப் பெற்றோர் என்ற முறையில் நான் உணர்ந்திருக்கிறேன்.. என்னைப் போலவே ஏனைய பெற்றோரும் உணர்ந்து என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள். என் மகள் படிப்பில் சுணங்கியபோது முதலில் ட்யூஷன் அனுப்பி வைத்தேன். முன்னேற்றமில்லை. அவள் உள்மொழியை வளப்படுத்த வேண்டுமென்பதற்காக தமிழை நன்கு கற்பித்தேன். தமிழ் மூலம் மற்ற பாடங்களைக் கற்பித்துக் கொண்டு வருகிறேன். முன்னேற்றம் தெரிகிறது. என் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக தளத்துக்கு வந்தேன். நான் சொல்கிறேன் என்பதற்காக நீங்கள் இதை ஏற்க வேண்டாம். குழந்தையின் நிலைமையில் உங்களை வைத்துப் பாருங்கள்... நீங்களே தெரிந்து கொள்வீர்கள்..
நன்றி.