சதுரங்க வேட்டை
மேடை முழக்கம் காதையே பிளக்கும்
ஒலிபெருக்கி அதிர்வெல்லாம் அதிர்வலையாகுமா ?
கரம் கொடுக்குமா அவர்கள் விரல்கள்
காட்டிக் கொடுக்குமா நம் விரல்கள் ?
மையிட்ட விரல்கள் நியாயத்தின் பக்கமா
ஆயிரம் ரூபாய்க்கு அடகுவைக்கும் கூட்டமா ?
பதவியின் பகட்டுத்தனம் தான் மூலமா
பாமரனின் கூட்டமெல்லாம் வெற்று ஜடமா ?
மனிதன் மனிதனாய் பார்க்கப்படுவானா
எண்களின் குறியீடுகளில் தலை கவிழ்வானா ?
ஒரு விரல் புரட்சி தான் நடக்குமா
ஒரு நாள் கூத்தாகிப் போகுமா ?
மையின் வலிமை வென்று காட்டுமா
பொய்யின் வாய்கள் தூக்கு மாட்டுமா?
அலங்கார வார்த்தைகள் அலங்கோலமாகுமா
அகங்காரக் கூட்டங்கள் அழிந்து ஒழியுமா ?
சேவை மனப்பான்மை சேரி ஆனதே
தேவை மனப்பான்மை அதை தேடி ஓடுதே?
ஊமைகளின் உரத்த குரல்
செவிடர்கள் காதில் விழுமா ?
பணமென்ற பண்டமே அண்டமான பின்பு
நியாயத்தின் பிள்ளைகள் நடுத்தெருவில் நாதியற்று ?
ஒப்பனை முகங்கள் ஒய்யாரம் காட்ட
ஒப்பாரி முகங்கள் ஓரமாய் திரியுது?
வறுமை ஒழிக்குமா இந்த தலைமை
வரலாறு மாறுமா இந்த தடவை ?