தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கவி

தமிழ் மகளுக்கு
இன்று பிறந்தநாள்
தமிழ் மக்களுக்கோ
அது சிறந்த நாள்

சித்திரை மகளே
உன் தமக்கை பங்குனி
உன் தங்கை வைகாசி

உனக்குப்
புண்ணியமாய்ப்
போகட்டும் ஏழை
ஊரிலும் வை காசி

சித்திரையே
நீ விலக்கிக் கொடு
எங்கள் கவலை எனும்
மா திரையை
இன்று முதல்
விளக்கிக் கொடு
மகிழ்ச்சி எனும்
மாத்திரையை

சித்திரையே
மின் விசிறி
இல்லாத குடிசைக்குள்
கொடு நித்திரையே

சித்திரையே
தமிழை
வளப்போர்க்குக் கொடு
முத்திரையே
வளைப்போர்க்கு எடு
முகத்திரையே

தை பிறந்தால்
வழி மட்டுமே பிறக்கும்
சித்திரையே உன்
பிறப்பால் தமிழ்
மொழியல்லவா பிறந்தது

உன் பிறப்பால்
தமிழர்களுக்கு
கிடைக்கட்டும்
அறப்பால்

உன் ஜனனம்
ஜனங்களின்
மகிழ்ச்சிக்கு ஆகட்டும்
ஜன கன மன

உன் தோற்றம்
கொடுக்கட்டும்
மக்களுக்கு ஏற்றம்
அழகிய தோற்றம்
அவர் வாழ்வில்
மாற்றம்

தமிழ் மகளே
புத்துத் துண்டைப்
போட்டு வரவேற்கிறேன்

புத்தாண்டாய்
வராமல்
இனிக்கும்
கற்கண்டாய் வா

சித்திரையே
உன்னால்
இன்பம் நீண்டிருக்கட்டும்
தமிழ் இவ்வுலகை
ஆண்டிருக்கட்டும்
அதற்குத் துணையாய்
இப்புத்தாண்டிருக்கட்டும்

அனைவருக்கும்
இனிய தமிழ்ப் புத்தாண்டு
வாழ்த்துக்கள்

எழுதியவர் : புதுவைக் குமார் (11-Apr-19, 11:33 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 56

மேலே