சித்திரை மழையே வாடி

சித்திரை மழையே வாடி...!

பனிக்குடம் உடைத்த உயிர்துளி வதனம்- உன்னால்
பனையில் வடித்த கள்ளாய் கிறக்கம்
சிறுதுண்டென நறுக்கிய நெற்றிப் பிறைமதி
கருவண்டமர்ந்த வெண்மலர் உணர்விழி

ஆர்ட்டிக் பனியில் நனைந்த அதரம்-பட்டு
ஹைட்ரோகார்பனாய் அழுத்தத்தில் என் உதிரம்
சுற்றி எரியும் சூரியனாய் என் தேகம்
பற்றியது இதயத்தில் இமயப்பனி நேசம்

கோடைபொழி ஆலங்கட்டி மேகம் -நீ
கொட்டித் தீர்த்தால் தணிந்திடும்யென் யாகம்
ஓடையில் ஓடி நழுவிடும் கெண்டையை
ஓரவிழியில் தழுவிடும் நாரையாய் நான்.....

பத்தியக் காரன் பார்வையில் பட்ட
உப்பில் ஊறிய பிஞ்சு மாவடு - உன்னால்
நித்திரை தொலைத்து துடிக்குது நாடி
சித்திரை மழையே எனை நனைத்திட வாடி

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (20-Apr-19, 3:09 pm)
பார்வை : 71

மேலே