அணிலோடும் அமிர்தத்தைப் பற்றிய உரையாடல்
என் வீட்டு கொய்யா மரத்தில்,
கும்மாளமிடும் அணிலை ஆனந்தத்தோடு ரசித்தேன்,
அணிலின் ஆனந்தத்தின் ரகசியம், பக்கத்தில்
கொய்யாயுண்ணும் அவன் காதலியென உணர்ந்தேன்;
இருவரின் கண்ணிலும்,காதல் பெருவெள்ளத்தில்
மூழ்கும் மோட்சலோகம் கண்டேன்.
மெதுவாய் அவன் காதலி நகர,
இவன் என்னை நோக்கினான்,
கிளியோடு,குயிலோடு,கோழியோடு,
குட்டி நாயோடு,கன்றுக் குட்டியோடு,
உரையாடும் நான்,இன்றிவன் வர,
என்னவளைப் பற்றி சொல்லத் தொடங்கினேன்.
விழியில் விழுந்து வேங்கையானதையும்,
சிரிப்பில் சரிந்து சிறுத்தையானதையும்,
அரசனானதையும்,அடிமையானதையும்,
அறிவாளியானதையும்,முட்டாளனதையும்,
கவிதையையும்,ஓவியத்தையும்,
சிரிப்பையும்,கண்ணீரையும்,
ஆனந்தத்தையும்,ஆதங்கத்தையும்,
வாழ்ந்ததையும்,வாழப் போவதையும்,
என்னவளாளே எல்லாமென்பதையும்,
என்னவளின்றி ஏதுமில்லையென்பதையும்,
இலக்கியமாய் கொட்டினேன்-அவன்
என்னிலும் பைத்தியம் போல என்பதைப் போல நகர்ந்தான்.
அவன் நகரும் நொடியில்,
என் இதயம் சொன்னது,
தம்பி புரிந்ததா,புவியில்
மட்டுமல்ல, எங்குமியங்க முடியாது,
அவளின்றி உன்னால்,
புரிந்து கொள் என்றது.