பாவலரென்றால் அவரைச் சீராளும் தெய்வமெனத் தேர்ந்துகொண்டார் - தமிழ், தருமதீபிகை 186

நேரிசை வெண்பா

பாராளும் வேந்தரெலாம் பாவலரென் றாலவரைச்
சீராளும் தெய்வமெனத் தேர்ந்துகொண்டார் - ஓராளும்
அந்த இருநிலையில் யாண்டுமே இல்லையே
எந்தநாள் எய்தும் இவண். 186

- தமிழ், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உலகம் ஆண்டுவந்த அரசர் எல்லாரும், புலவரைத் தமக்கு மகிமை தரவந்த தெய்வம் என மதித்துப் போற்றி வந்தார்; அந்த இருவகை நிலையிலும் ஒர் ஆளும் இந்நாள் ஈண்டு இல்லையே என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் புவி அாசுக்கும் கவி அரசுக்கும் உள்ள உரிமை கூறுகின்றது. பழமையின் கிழமை நினைந்து பரிவு கூர்ந்தபடியிது.

செல்வ அரசுக்குக் கல்வியறிவு உடம்புக்குக் கண்போல் ஒளி சிறந்து உறுதி புரிந்து உரிமை சுரந்துள்ளமையால் காவலர் பாவலரை ஆவலுடன் ஆதரித்து வந்தனர்.

’சீர் ஆளும் தெய்வம் எனத் தேர்ந்த கொண்டார்’ என்றது புகழ் புண்ணியங்களை விளைத்துக் கண்ணியங்களை வளர்த்து எவ்வழியும் தம்மைச் செவ்விய நிலையில் உயர்த்தும் திவ்விய நிலையினர் எனப் புலவரை வேந்தர் போற்றி வந்திருக்கும் அந்த ஏற்றம் தெரிய வந்தது.

மூவேந்தரும் தனித்தனியே தக்க புலவர்களைத் தமக்கு ஒக்கலாக உவந்து பக்கம் வைத்துப் பாராட்டி வந்தனர். பிசிராந்தையாரையும், பொய்கையாரையும் கோப்பெருஞ்சோழன் உயிரினும் கண்ணினும் உவந்து நின்றான்.

அறிவுடை நம்பி என்னும் பாண்டிய மன்னன் பிசிராந்தையாருடன் ஒருநாள் உரையாடிக் கொண்டிருந்தான். குடிகளிடம் மிகுதியாக வரி வாங்கவேண்டுமென்று அரசன் கருதியுள்ளதைப் புலவர் குறிப்பால் அறிந்தார். திறை பெறும் முறை குறித்து ஒர் உறுதி நலனைப் பாடலாகக் கீழ்வருமாறு உரைத்தார்.

நேரிசை ஆசிரியப்பா

காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினுந் தமித்துப்புக்(கு) உணினே
வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும்
5 அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின்
10 யானை புக்க புலம்போலத்
தானு முண்ணா னுலகமுங் கெடுமே. 184 புறநானூறு

ஒரு காணியினும் குறைந்த நிலமாயிருந்தாலும் மதயானைக்கு நெடுநாள் உணவுக்கு உரிய நெல்லை விளைத்தருளும். அதுவே புகுந்து மேயத் தொடங்கின், நூறு வேலியாயினும் காலில் மிதி பட்டு விளைவு பாழ்படும்; வேந்தன் குடிகளை வருத்தாமல் முறையறிந்து இதமாக வரி பெறின், பெரும் பொருள் சேரும்; குடிகளும் சுகமாக வளம் பெற்று வாழ்வர்; அரசும் நெடிது நின்று நிலவும் ; புல்லியரைக் கூடி அறிவு மெல்லியனாய் அரசன் வலிந்து திறைபெற நேரின், நாட்டுக்கும் அரசுக்கும் ஒருங்கே கேடாம் எனப் புலவர் உணர்த்திய இந்த உறுதிமொழியைக் கேட்டு மன்னன் பெரிதும் மகிழ்ந்தான். அவரது அறிவுரையின் படியே நெறி முறை ஒழுகினான்.

நெடுஞ்செழியன் என்னும் வேந்தன் குடபுலவியனார் என்னும் புலவரைத் தனக்கு உரிமைத் துணையாக உவந்து பேணி வந்தான். புலவர் பலவகையிலும் அரசை ஆதரித்து அறிவு நலங்களை அருளி உறுதி புரிந்து வந்தார்.

நாட்டில் நீர் நிலைகளை உளவாக்கி நிலங்களை வளம்படுத்த வேண்டும் என்று ஒரு முறை அ்ரசனுக்கு அவர் உரிமையுடன் போதித்தார். அவ்வுணர்வுரை அதிசயமுடையது.

நேரிசை ஆசிரியப்பா

மல்லன்மூதூர் வயவேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ யாகல் வேண்டினுஞ் சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேளினி மிகுதி யாள;
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோரீண்(டு)
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே!
வித்திவான் நோக்கும் புன்புலங் கண்ணகன்
வைப்பிற் றாயினு நண்ணி யாளும்
இறைவன் தாட்குத வாதே யதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
தட்டோர் அம்மவிவண் தட்டோரே
தள்ளா தோரிவண் தள்ளா தோரே. 18 புறநானூறு

இதில் அடங்கியுள்ள பொருள் நலங்களை ஊன்றி உணர்ந்து கொள்ளவேண்டும்.

தட்டோர் - நிலத்தில் நீரைப் பெருக்கித் தளைத்தவர். நீரைத் தளைத்தவரே தம் பேரையும் சீரையும் நிலை நிறுத்தினவர்; அல்லாதார் இவ்வுலகில் அவை இல்லாதவரே என்பார், தள்ளாதோர் இவண் தள்ளாதோரே' என்றார்.

இங்ஙனம் நாட்டுக்கு உரிய உறுதி நலங்கள் பல அரசுக்கு அவர் உரிமையுடன் இனிமையாக உரைத்திருக்கிறார்.

மன்னர்க்கு இன்னவாறு நன்னயமான நீதி நலங்களைப் புலவர்கள் உடனிருத்து உணர்த்தி வந்துள்ளனர். வேந்தர்களும் இம்மதிமான்களை மந்திரிகளினும் மேன்மையாக மதித்துப் போற்றி மாண்பு செய்து வந்தனர்.

அந்த நிலையில் இப்பொழுது அரசு எங்கே உள்ளது? புலவர் தாம் யாண்டு உள்ளனர்?

ஒர் ஆளும் அந்த இருநிலையில் யாண்டுமே இல்லையே! என்றது அரசரும், கவிஞரும் பண்டு தழுவியிருந்த அருமை பெருமைகளையும் இன்றுள்ள வறுமை நிலையையும் எண்ணி இரங்கிய வாறாம். செங்கோலும் செந்தமிழும் தங்கோலம் காட்டிப் பொங்கொளி வீசிப் பழமைபோல் இங்கு இனிது நிலவும் நாளை இறைவன் அருள வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Apr-19, 12:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே