மேலான எண்ணங்கள் மேவி வந்துள நூல்கள் கொள்க மாண்புணர்ந்து - நூல், தருமதீபிகை 196

நேரிசை வெண்பா

மேலான எண்ணங்கள் மேவி வெளியுலகின்
பாலாகி நீதி படிந்துமே - நூலாகி
வந்துள அந்த வகைதெரிந்து மாண்புணர்ந்து
முந்துளங் கொள்க முனைந்து. 196

- நூல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உயர்ந்த மேதைகளுடைய சிறந்த எண்ணங்களே நூல்கள் என உருவாகி உலகில் வெளிவந்துள்ளன; அவ்வுண்மையை உணர்ந்து உறுதி நலங்களை ஓர்ந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

நூல்கள் என்பன மேலோர்களுடைய சரித்திரங்கள், தெய்வத் துதிகள், நீதிமுறைகள், உலக நிலைமைகள், தத்துவ நியமங்கள் எனப் பல வகைகளாய்ப் பரந்து விரிந்துள்ளன.

இதிகாசம், புராணம், காவியம் முதலியன யாவும் உன்னதமான உறுதி நலங்களை நன்னயமாக உணர்த்திமனித இனத்தைப் புனிதப்படுத்தி இனிது உயர்த்துவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன.

தம்மையுடையாரை மேலான நிலைமையில் உயர்த்தி மேன்மை புரியும் தன்மைகளை ‘மேலான எண்ணங்கள்’ என்றது.

அத்தகைய நல்ல தகைமைகளே சொல்லுருவில் அமைந்து, பாவினங்களில் படிந்து காவியங்களாய்க் கலித்திருத்தலால் பூவுலகில் தேவியல்பாய் அவை சிறந்து நிற்கின்றன.

அந்த நிலைமையை உணர்ந்து நூல்களைப் பயின்று தலைமையான தன்மையை அடைய வேண்டும்.

இளமையிலேயே நூல்களை விழைந்து பழகிக் கொள்க என்றும், முந்து உளம் கொள்க முனைந்து என்றும் சொல்கிறார் இப்பாடலாசிரியர்.

ஏட்டில் எழுத்து வடிவாய் ஏதேதோ உள்ளது என உன் பாட்டில் உழன்று ஒழியாதே என்றும், புத்தகங்கள் புத்துயிர் அளிக்கும் புத்தமுகங்கள் எனத் தெளிந்து உய்த்துணர்வுடன் ஊன்றி ஓதி உயர்ந்து கொள்க என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Apr-19, 1:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

மேலே