கனவு

*******
சொற்களு மற்றது சூரிய னொத்தது
சுத்தமு முற்றது சோதனை யற்றது
சொப்பன வற்புத சோதியி லுற்றிரு சுகமோடே
*
சுத்திக ரிப்பது சோகமு மற்றது
சுற்றமு மற்றது சூசக வித்தது
சொத்துசு கத்தினை சூடம றுப்பது சுயமோடே
*
கற்களை முற்களை காணம றுப்பது
கற்சிலை பொற்சிலை போலவி ருப்பது
கற்பனை யற்றத னாலது நித்தமு மழகாமே!
*
கற்றவ ருக்கென வேயிலை யிப்புவி
யிற்பிற ருக்கென வாகவி ழித்திரை
கற்பித மிக்கன வாவது நித்திரை தருமாமே!
*
நெற்கதி ரிற்றுமி போலவு மற்புத
முற்றிட வைப்பது வேயிதை கற்றிடு
நிற்பத னைத்திலு மேவரு மிக்கன வதுவாமே!
*
நிச்சம மற்றது வாயினு மிக்கன
வுத்திரை தொட்டிட லானது மக்கென
நெற்றினொ டொட்டிய தேவிதை யொப்பது முளையாதோ
*
மற்றவ ருக்கென வேயிதை விட்டிடு
மக்கறை யுற்றெவ ராயினு மித்தரை
மட்டிலு மெட்டிட வேயிலை யிக்கண மறிவீரே
*
மக்குவ தற்குள தேசில குப்பையு(ம்)
மத்தகு விட்டிட வேயுள வற்றொடு
மக்குவ தற்கிலை யேமன மெட்டிய கனவாமே!
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (4-May-24, 1:42 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 127

மேலே