செல்போன் போனால் போகட்டும் நட்பு மலரட்டும்

மாதவ் அழகிய நீர்வீழ்ச்சிகளைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். அந்த நிகழ்வை மறக்கமுடியாததாக மாற்றுவதற்காக, அருவிகளுக்கு எதிரே கட்டப்பட்டிருந்த வலுவான இரும்பு வேலிக்கு அருகில் நின்றுகொண்டு, தனது செல்போன் மூலம் மலையின் குன்றின் மேல் இருந்து அருமையாக விழும் நீர் வீழ்ச்சியை அவன் வீடியோவாக எடுக்கத்தொடங்கினான்.
ஐந்து நிமிடங்கள் மாதவன் அந்த இயற்கையான காட்சிகளை அருமையாக படம் பிடித்தான். அடுத்த நொடியில் மாதவின் ஒரு கண அலட்சியத்தால் அவனது கைகளுக்கு வெவ்வே சொல்லிவிட்டு செல்போன் நழுவி நீர்வீழ்ச்சிக்கு கீழே உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் பாய்ந்து குதித்து தண்ணீரில் மாயமாக மறைந்தது.
மாதவ் கிட்டத்தட்ட பள்ளத்தாக்கில் குதிக்காத குறைதான். செல்போன் திடீரென காணாமல் போனதில் அதிர்ச்சியும் விரக்தியும் அடைந்த அவன் அங்குமிங்கும் பரிதாபமாகப் பார்த்தான். பள்ளத்தாக்கு மிகவும் செங்குத்தாக இருந்தது. மேலும் மாதவ்க்கு நீச்சல் தெரியாது. அதற்கு மேலாக அவன் நின்றிருந்த பாலத்தின் அடியில் செல்ல வழியில்லாமல், வழுக்கும் பாறை, மழுங்கிய கற்கள், அடர்ந்த மரங்கள், புதர்கள் என எங்கும் இருந்தது. நீரின் ஓட்டமும் மிகவும் தீவிரமாகவும் வேகமாகவும் இருந்தது, அவன் ஒரு வேளை பள்ளத்தாக்கில் இறங்கினாலும், தண்ணீரில் இறங்கி அதை மீட்டெடுக்க வாய்ப்பே இல்லை.
"உருப்படியின் விலை அதிகம் என்றால் அதனுடன் நெருக்கமும் அதிகம்" எனும் பொருளாதார விதிக்கு உண்மையாக அவன் விலை உயர்ந்த செல்போனை பறிகொடுத்ததில் மாளாத்துயரில் மூழ்கினான்.
சில மாதங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளில் தனது அன்பான காதலியால் வழங்கப்பட்ட விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் என்பதால், மாதவ் அடைந்த மனத்துயரத்திற்கு அளவே இல்லை. மீண்டும் செல்போன் விழுந்த இடத்தைப் பார்த்தவன், அருவியின் அழகை பார்க்க மறந்தான், நிம்மதியை இழந்தான். என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியின்றி அந்த இடத்தைச் சுற்றி சுற்றி வந்தான்.
அப்போது நீர்வீழ்ச்சியை பார்க்கவந்த யாதவ் என்ற மற்றொரு இளைஞன், துக்கமான முகத்துடன் இலக்கின்றி அங்கும் இங்கும் நடமாடும் மாதவ்வை கண்டான். மாதவின் அருகில் சென்று விசாரித்தான், “உங்களை பார்த்தல் கவலையுடன் இருக்கிறாய் போல் தெரிகிறது. எல்லாம் சரியாக உள்ளதா?" அதற்கு மாதவ் தனது வேதனையை கொட்டினான் "நான் என் விலைமதிப்பற்ற செல்போனை நீர்வீழ்ச்சியில் தொலைத்துவிட்டேன்". யாதவ் அவனிடம் “அதை எப்படி இழந்தாய் என்பதை கூறுவீர்களா?” என்று கேட்டான். மாதவ் விவரத்தை சொன்னான். "தயவுசெய்து அதை மீட்டெடுக்க எனக்கு உதவ முடியுமா?" என்று கேட்டான்.
யாதவ் மாதவனுடன் இதேபோன்ற சுவாரஸ்யமான தனது கதையைப் பகிர்ந்து கொண்டான், சில மாதங்களுக்கு முன்பு நீர்வீழ்ச்சியில் அதே இடத்தில தனது ஸ்மார்ட் செல்போனை இழந்ததாகக் கூறினான். அவன் மாதவனிடம் “செல்போனை மறந்துவிடு. பள்ளத்தில் இறங்கி தேடுவது இயலாத காரியம். உங்களது அடுத்த பிறந்தநாளுக்கு உங்கள் காதலி ஸ்மார்ட்போன் இல்லையென்றாலும் சாதா போனாவது வாங்கித்தருவாள். இப்போது நீங்கள் வருந்துவதால் ஒரு உபயோகமும் இல்லை. இந்த மாதிரி இடத்திற்கு வரும்போது நாம் தூரத்திலிருந்துதான் படம் எடுக்கவேண்டும். வாருங்கள் சூடாக ஒரு காபி குடிக்கலாம்” என்று சொன்னவுடன் மாதவ் சிறிது தெளிவு அடைந்தான்.
மாதவ் நிகழ்வுபோல் அல்லாமல், யாதவ் தனது முதல் வேலையில் சேர்ந்ததும் முதல் சம்பளத்தில் ஓர் நல்ல செல்போனை வாங்கினான், அதற்கு அடுத்த வாரமே அதை இதே நீர்வீழ்ச்சியில் கோட்டை விட்டுவிட்டான். தற்செயலான இந்த முரண்பாட்டையும் சாயலையும் கண்டு மாதவ் ஆச்சரியமடைந்தான். ஒரே வயதுடைய இளைஞர்கள் ஒரே மாதிரியான எண்ண அலைநீளங்களைக் கொண்டவர்களாக இருந்ததால், அடுத்த அரை மணி நேரத்தில் அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டனர். யாதவ் மாதவனை ஆறுதல்படுத்தி, தன்னம்பிக்கையான ஆலோசனையால் அவனை கொஞ்சம் உற்சாகப்படுத்தினான். இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அன்று முதல் அவர்களின் நட்பு வளர்ந்து பிரகாசிக்கத் தொடங்கியது. காலப்போக்கில் அவர்கள் ஆத்மார்த்தமான நண்பர்களாகிவிட்டனர்.
யாதவ் மாதவின் தங்கையை நேசித்தான், அவளது பிறந்தநாளன்று ஸ்மார்ட்போன் பரிசளித்தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
செல்போன்கள் மக்களை ஒருங்கிணைக்கும் அதே நேரத்தின் இருவரை பிரிக்கவும் செய்யும். நாம் முடிந்தவரை அதை ஒன்றிணைக்கப் பயன்படுத்துவது நல்லது. இரண்டு செல்போன்கள் தொலைந்துவிட்டன, ஆனால் வலுவாக பிணைக்கப்பட்ட ஒரு செல் பின்னப்பட்ட நட்பு வெற்றிகரமாக வெளிப்பட்டது.
சரி, இப்போது சொல்லுங்கள், நீங்கள் நீர்வீழ்ச்சிகளுக்குச் சென்றால் நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்போனை எடுத்துச் செல்வீர்களா?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (4-May-24, 11:06 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 33

மேலே