ஒரு அனாதை நன்றி கூறுகிறான்
அது ஒரு மழை நாள் மாலை. நான் எனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகாபலிபுரத்தில் இருந்து சென்னைக்கு எனது காரில் திரும்பிக் கொண்டிருந்தோம். நேரம் மாலை சுமார் 5 மணி இருக்கும். மழையை கொண்டாட சில புதிய தின்பண்டங்கள் சாப்பிட வேண்டும் என்று ஆவல் கொண்டோம். பிரதான சாலையை ஒட்டி ஒரு சிறிய சைவ உணவகம் இருப்பதைக் கண்டோம். கனத்த மழையிலிருந்து தப்பிக்க காரை நிறுத்திவிட்டு விரைந்தோம்.
நான்கு நாற்காலிகள் கொண்ட ஒரு மேசையில் நாங்கள் அமர்ந்ததும் வெயிட்டர் பையன் ஒருவர் எங்களை புன்னகையுடன் வரவேற்றார். நாங்கள் சில சிற்றுண்டி பொருட்களை ஆர்டர் செய்து, சூடாக பரிமாறப்பட்ட தின்பண்டங்களை ரசித்தோம். கொண்டாட்டத்திற்கு சிகரமாக அருமையான சூடான பில்டர் காபி அமைந்தது. மஹாபலிபுரம் கடற்கரைக்கு நாங்கள் சென்றது குறித்து, இடையிடையே வெயிட்டர் பையன் ஆர்வத்துடன் விசாரித்துக் கொண்டிருந்தான்.
உணவகத்தை விட்டு வெளியேறும் நேரம் வந்தது. வெயிட்டர் பையனிடம் பில்லைக் கொண்டு வரச் சொன்னேன். பணம் கொடுக்கையில் தட்டில் ஒரு இருநூறு ரூபாய் நோட்டை டிப்ஸாக வைத்தேன். பின்னர் நாங்கள் புறப்பட்டோம். மழையும் நின்றுவிட்டது.
நாங்கள் எங்கள் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். காரின் கதவைத் திறக்கும் முன், வெயிட்டர் பையன் நளினமாக என்னை பார்த்து சிரித்தான். "காரில் ஒரு ரவுண்டு சுற்றிவரலாமா" என்று நான் கேட்டேன். என்னால் அவனுக்கு ஒரு சிறு உதவியை செய்யமுடியுமா என்று பணிவுடன் கேட்டான். முடிந்தால் நிச்சயம் செய்கிறேன் என்று உறுதியளித்தேன். அவன் தனது சட்டைப் பையில் இருந்து ரூ.300/-ஐ எடுத்து என்னிடம் கொடுத்து, "சென்னை செல்லும் வழியில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் கொடுக்கமுடியுமா" என்று கேட்டான். நாங்கள் அனைவரும் ஒரு கணம் திகைத்துப் போனோம்.
இது மனிதாபிமானத்தின் ஒரு தூய்மையான சேவை என்று நான் அவனிடம் சொன்னேன். நான் "அந்த தொகையை ஏன் குறிப்பிட்ட ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு கொடுக்கிறாய்" என்று விசாரித்தேன். அவன் சொன்ன பதில் எங்களை உணர்ச்சிவசப்பட வைத்தது. தான் ஒரு அனாதை என்றும், அதே அனாதை இல்லத்தில் வளர்ந்தவன் என்றும் கூறினான். 10 ஆம் வகுப்பு படிக்கும் வரை அந்த காப்பகத்தில் இருந்ததாகவும், 16 வயதை எட்டியதும், இந்த ஹோட்டலில் வேலை கிடைத்து அனாதை காப்பகத்திலிருந்து வெளியே வந்து விட்டதகவும் கூறினான். என்னைப்போல சிலர் அவனிடமிருந்து தொகையை பெற்று அனாதை இல்லத்தில் கொடுத்துவருவதாகவும், எவரும் அமையவில்லை என்றால், கொஞ்சம் தொலைவில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று எம் ஓ செய்வதாகவும் கூறினான்.
அடிப்படைக் கல்வி மற்றும் தனக்கு உணவு, உடை, தங்குமிடம் கொடுத்த அனாதை இல்லத்துக்கு தன்னால் முடிந்ததை தரவேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தான். அவனுக்கு டிப்ஸ் தரும் என்னைப் போன்றவர்களுக்கு நன்றி தெரிவித்தான். கண்களில் பொங்கிய கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. என் மனைவியும் குழந்தைகளும் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர். நான் அவனிடம் "நீ கொடுத்த தொகையை அனாதை இல்லத்தில் கொடுத்துவிடுகிறேன். நானும் என்னால் முடிந்த தொகையை கொடுக்கிறேன்" என்று சொன்னதை கேட்டு அவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.
அவன் மிகவும் நன்றியுள்ளவனாக தெரிந்தான். மேலும் எங்கள் நலனை விசாரிக்க எப்போதாவது என்னை அழைப்பதாகக் கூறி எனது செல்போன் எண்ணை குறித்துக்கொண்டான்.
நாங்கள் அவன் குறிப்பிட்ட அனாதை இல்லத்திற்கு சென்று மணவாளன் ( வெயிட்டர் பாயின் பெயர்) கொடுத்த தொகையை கொடுத்தோம். அங்குள்ளவர்கள் அவனை பற்றி அப்படி ஒரு நற்சான்றிதழ் அளித்தனர். அந்த அனாதை இல்லம் (பெயர்: இறைவனின் பிள்ளைகள்) நிர்வாகம் செய்யும் சேவைகள் பற்றியும் தெரிந்து கொண்டோம். நானும் ஆயிரம் ரூபாயை அனாதை இல்லத்திற்கு வழங்கினேன்.
சில வருடங்களில் மணவாளன் அறிவியல் பட்டதாரியாகி, ஒரு அரசாங்க வேலையில் சேர்ந்தான். மாதம் ஒருமுறை அனாதை இல்லத்திற்குச் சென்று தனது சிறிய பணத்தினாலும் உடல் உதவியினாலும் முடிந்த சேவையை செய்துவருவதாக சொன்னான்.
அனாதைகள் யாவரும் உலகில் மிகவும் மோசமான உயிரினங்கள்
அவர்கள் இவ்வுலகில் வாழ்வதற்கு நமது பங்களிப்பை வழங்குவோம்.