உயிரனைய கல்வி உடையார் உணர்விலர்பால் பேர்தல் பெரிதும் பிழை - புலவர் நிலை, தருமதீபிகை 225

நேரிசை வெண்பா

உயிரனைய கல்வி உடையார் உடலை
இயலளவில் ஓம்ப எளிதாய் - நயமுடைய
ஓர்தொழிலைப் பற்றி உயரா(து) உணர்விலர்பால்
பேர்தல் பெரிதும் பிழை. 225

- புலவர் நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உயிர்போன்ற அரிய கல்வி நலனையுடையவர் உரிய ஒரு தொழிலைச் செய்து தமது உடலைப் பேணாமல் பிறரிடம் ஒன்று பெறப்போதல் பெரிதும் பிழையாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பல கலைகளையும் பயின்று உணர்வுநலம் கனிந்த புலவர் உலகநிலையில் ஒழுக வேண்டிய நிலைமையை இஃது உணர்த்துகின்றது.

அரிய புலமையை உரிமையாகப் பேணி வருபவர் .பெரிய செல்வம் பெறுதல் அரிதாயினும், சிறிய வறுமை சேராமல் உரிய உபாயத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உடலை ஓம்ப என்றது கல்வி நலம் கனிந்த அந்தச் செல்ல உடலை நல்ல முறையில் மேன்மையாகப் பேணும் பான்மை தெரிய வந்தது. அறிவுமயமாய் என்றும் அழியாமல் நின்று நிலவும் அதன் நிலைமை கருதி கல்வியை உயிர் என்றது.

ஞான நலம் கனிந்த தானும் தன்னைச் சேர்ந்த மனைவி மக்களும் மானம் மரியாதைகளுடன் வாழும்படி ஆனதொரு தொழிலை ஆய்ந்து கைக்கொள்ளுதலே அறிவாண்மையாம்; அங்ஙனம் கொள்ளாமல் பிறரிடம் உதவியை நாடி அயலே செல்லல் மயலேயாம்; அப்புல்லிய செயலை ஒழிந்து நல்ல உயர்வினை நாடுக.

நயமுடைய தொழில் என்றது தன் தகுதிக்கு ஏற்ற இனிய முயற்சியை. கருதிய பொருள் வளங்களை இனிது சுரந்தருள்வது கருமமேயாம்; அதனை மருவினவன் இருமையும் பெருமை அடைவானாதலால் அதன் இயல்பு தெரிய உயர்வு வந்தது.

உரிமையான உறுதித் தொழிலைப் பற்றின் உயர்வாம்; சிறுமையான இரவுத் தொழிலை நாடின் இழிவாம்.

உணர்வு நலம் கனிந்த நீ உணவுக்காக உணர்வில்லாதாரிடம் போதல் ஞான சூனியமான ஒர் ஈனமேயாம்.

கல்வியருமை தெரிந்து ‘இவர் வரப்பெற்றோமே' என்று உவந்து உபசரித்து விழைந்து ஆதரிக்கும் உயர்ந்த உத்தமச் செல்வர்களிடம் போனால் அத்துணைப் பிழை நேராது; புலமை நலம் அறியாத புல்லிய செல்வரிடம் செல்லின் பொல்லாத் துயரமாமாதலால், ’உணர்விலர்பால் பேர்தல் பெரிதும் பிழை' என வந்தது. வழுவில் விழுவது வாழ்வாகாது.

தருமநெறி தழுவிப் பெருமித நிலையில் யாண்டும் பேராதிருக்க வேண்டிய நீ அருமையறியாரிடம் போய்ச் சிறுமை அடையலாமா? அந்த அவமான நிலைக்கு ஓர் உவமானம் உண்டா? உன் நிலைமையை உணர்ந்து உயிர் மாண்பைப் பேணுக எனப்பட்டது, தேக யாத்திரைக்கு வேண்டிய வசதிகளை நீயே முயன்று செய்துகொள்ள வேண்டுமென்றும், யாண்டும் யாரிடமும் யாசகத்தை வேண்டாதே என்றும் அறிவுறுத்துகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-May-19, 5:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே