பருவம் தெரிந்து பயனுணர்ந்து செய்யும் கரும நிலை இன்பம் பயக்கும் – கரும நலன், தருமதீபிகை 235
நேரிசை வெண்பா
பருவம் தெரிந்து பயனுணர்ந்து செய்யும்
கரும நிலையின் கதியால் - இருமையும்
இன்பம் பயக்கும்; இனிய வினைசெய்வார்
என்பயன் எய்தார் இவண். 235
- கரும நலன், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
பருவ காலம் தெரிந்து பயன் உணர்ந்து செய்யும் கரும நலனால் இருமையும் இன்பம் விளையும்; உறுதியுடன் நன்மை பயக்கும் இனிய செயல்களைச் செய்வார்க்கு இவ்வுலகில் எல்லா நலங்களும் பெறுவார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
காரியம் இனிது முடிதற்குரிய காலம் அறிந்து இடம் கண்டு இதமாக ஓர்ந்து செய்தல் பருவம் தெரிந்து செய்தலாகும்.
உரிய பருவம் உணரா துறினோ
பெரிய வலியும் பிழையாம்.
ஆதலால் கருமம் செய்பவர் அதற்கு உரிமையான பருவ நிலைகளை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
பயன் உணர்தலாவது தான் செய்கின்ற தொழில் நிலையையும் அதற்குச் செலவாகும் உழைப்பையும், பொருளையும், அதனால் உளவாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து தெளிதலாகும்.
தொழில் வகைகள் பல துறைகளையும் முறைகளையும் உடையன; அந்நிலைகளையெல்லாம் நுணுகி உணர்ந்து வினை புரிந்தபோதுதான் அவை இனிது முடிந்து பெரிய பயன்கள் சுரந்தருளுகின்றன.
பருவம் தெரியாமலும், பயன் உணராமலும் கண்மூடித் தனமாய்ச் செய்யும் கருமம் வீண் உழைப்பாய் விரிந்துபடுமேயன்றி மேன்மையான பலனை விளைத்தருளாது ஆதலால் தெரிந்து உணர்ந்து செய்க எனக் கரும நிலையை வரைந்து காட்ட நேர்ந்தது.
இனிய வினை செய்வார் என்பயன் எய்தார்? என்றது அரிய பெரிய பயன்கள் யாவும் வினையாளர்பால் எளிது வந்து அடையும் என்பது தெரிய வந்தது.
உழப்பின் வாரா உறுதிகள் உளவோ?
கழப்பின் வாராக் கையறவு உளவோ?
எனப் பட்டினத்து அடிகள் வினாவகையில் சுட்டி உரைத்துள்ள இவ்வாக்கியங்கள் உய்த்து நோக்கி உணரத் தக்கன.
கழப்புதல் - வேலை செய்யாமல் வீணே காலம் கழித்தல்.
உழைப்பாளி பிழைப்பாளி ஆகின்றான்; கழப்பன் இழப்பனாய் இழிந்து படுகின்றான். ஈனமாய் இழிவில் விழாதே; ஞானமாய் உயர்வில் ஓங்குக என உறுதி நலனை இது உணர்த்துகிறது.
முயற்சி எல்லாச் செல்வங்களையும் அள்ளிக் கொடுத்து மனிதனைப் பெருமைப் படுத்தி மாட்சி மிகச் செய்கின்றது; சோம்பல் சிறுமை பல தந்து சீரழிக்கின்றது.
இருமையும் இன்பம் பயக்கின்ற கரும நலனை உரிமையாகச் செய்பவர் மனித சமூகத்துள் அருமையாளராய்ப் பெருமை மிகப் பெறுகின்றார். அப்பேற்றை ஏற்றமாகப் போற்றிக் கொள்ளுக என அறிவுறுத்தப்படுகிறது.