திருவேடகம் - பாடல் 4

கலிவிருத்தம்
(விளம் விளம் விளம் விளம்)

ஏலமார் தருகுழ லேழையோ டெழில்பெறும்
கோலமார் தருவிடைக் குழகனா ருறைவிடம்
சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகம்
சீலமா ரேடகஞ் சேர்தலாஞ் செல்வமே. 4

- 032 திருவேடகம், மூன்றாம் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்

பதவுரை:

ஏலம் -. வாசனைக் கலவைப் பூச்சு,
எழில் பெறும் - அழகு பொங்கும்,
கோலம் ஆர் – தோற்றப் பொலிவோடு,
சாலம் - ஆலமரம்,
சேர்தலாம் செல்வம் – செல்வம் பெருகுமாம்.

பொருளுரை:

வாசனைக் கலவைப் பூச்சு தடவிய கூந்தலையுடைய, எளிமையான உமாதேவியோடு, அழகு பொங்கும் தோற்றப் பொலிவோடு அழகிய இடபவாகனத்தில் ஏறி வரும் அழகன் சிவபெருமான் உறையும் இடம், ஆல், மாதவி, சந்தனம், செண்பகம் முதலியன சிறந்து விளங்கும் திருஏடகம்.

அங்கு சென்றால், சென்று அழகன் சிவபெருமானை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது உறுதி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jun-19, 12:43 pm)
பார்வை : 31

சிறந்த கட்டுரைகள்

மேலே