கடனென்னும் பொல்லான் குடியுட் புகின் – கடன், தருமதீபிகை 258
நேரிசை வெண்பா
பிடிமானம் போக்கும்; பிழைகள் பெருக்கும்;
குடிமானம் நீக்கிக் குலைக்கும்; – கெடுமாறே
எல்லாம் கடிதின் இயற்றும் கடனென்னும்
பொல்லான் குடியுட் புகின். 258
-கடன், தருமதீபிகை
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
கடன் என்னும் பொல்லாதவன் குடும்பத்தில் புகுந்தால், குடும்பத்தில் உள்ள ஒட்டுதலையும், பிடிப்பையும் போக்கும்;
பிழைகளான செயல்கள் பெருகும்; குடும்பத்தின் நற்பெயர் கெட்டு குலவாழ்வும் குலையும்;
எல்லாமே கெட்டுப் போகும் வகையில் விரைந்து அழிவை உண்டாக்கும்.
எல்லாத் தீங்குகளையும் விளைக்கின்ற கடனை அதன் தீமை கருதிப் 'பொல்லான்' எனப்பட்டது.
கடன் உயர்ந்த நல்ல குடியையும் இழிந்ததாக்கி விரைந்து அழித்துவிடும்.
உடல் வருத்தி உழைத்து ஈட்டினவனுக்கு பொருளின் அருமை தெரிந்து அதனை வீணாகச் செலவு செய்ய மாட்டான். தக்க வழிகளில் கவனமாகப் பயன்படுத்துவான்,
கடன் வாங்குகிறவன் சிந்தித்து உணரும் தெளிவின்மையால் பொருளை வீணாகக் கண்டபடி செலவு செய்கிறான்.
Borrowers are nearly always ill-spenders – Ruskin;
கடன் வாங்குபவர் பெரும்பாலும் தீய வழிகளில் செலவழிக்கின்றனர் என ரஸ்கின் என்ற ஆங்கில ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.
நெறிமுறையே கவனமாய்ச் செட்டாகச் செலவு செய்பவர் மானம் மரியாதையில் நெடிது நிலைத்து நிற்கிறார். (பிடிமானம் – செட்டு). செட்டு இல்லையாயின், அது சீரற்ற குடிவாழ்க்கையாய் அழிய நேர்கிறது.
கடையில் பொருள் வாங்குபவர் உடனே பணம் கொடுத்து வாங்கினால், தம் கையிருப்பிற்குத் தக்கபடி அவசியமானதை வாங்கி மகிழ்கிறார்;
கடையில் கணக்கெழுதி கடனுக்கு வாங்கினால் தம் பேரையும், சீரையும் கடைப்படுத்தி வருகின்றார்.
வறுமை, பொய், அச்சம், இளிவு முதலிய பிழைகள் எல்லாம் கடனால் விளைகின்றன.
செட்டென்னும் சீர்மையைச் சீரழித்துத் தீங்குபல
கட்டி வளர்க்கும் கடன்.
என்பதை உணர்ந்து, கடன் வாங்கி வாழ்வது துன்பம் விளைக்கும் என்பதையும் அறிந்து, கடன் வாங்காது மானத்தோடு வாழ வேண்டும்.