நேயம் புரிந்து புரப்போனைத் தெய்வம் புரக்கும் பரிந்து - வாழ்க்கை நிலை, தருமதீபிகை 248
நேரிசை வெண்பா
தீய வழியில் சிறிதும் செலவின்றித்
துாய வழியே தொடர்ந்தருளி - நேயம்
புரிந்து குடியைப் புரப்போனைத் தெய்வம்
பரிந்து புரக்கும் பயந்து. 248
- வாழ்க்கை நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
தீமையான வழிகளில் சிறிதும் செல்லாமல் என்றும் நன்மையான நெறிகளிலே நடந்து யாண்டும் அன்பு புரிந்து குடியைப் பண்புடன் பேணி வருபவனைத் தெய்வம் நண்பு புரிந்து நலம் பல சுரந்து நயந்து காக்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
குடி, சூது முதலிய கொடிய பழக்கங்களைத் தீயவழி என்றது. உலகில் நெடிது பரவியிருக்கும் நிலைமை கருதி இத்தீமைகளை முதலில் குறித்தது. இழிந்த வழிகளில் யாதும் இறங்காமல் உயர்ந்த நெறிகளில் உள்ளம் பழகி வருதல் யாண்டும் நல்லதாம்.
பழக்கத்தின்படியே மனிதர் உருவாகி வருதலால் அதன் நலம், தீங்குகளை முதலிலேயே நாடியறிந்து நன்மைகளில் தோய்ந்து கொள்ள வேண்டும்.
சத்தியம், கருணை முதலிய உத்தம நீர்மைகள் இங்கே தூயவழி என வந்தன. மனிதனைப் புனிதப் படுத்தி எல்லா இன்பநலங்களையும் இம்மையில் ஊட்டி, அம்மையில் முத்தி நிலையையும் நல்கி அருளுதலால் சித்தத்தின் தூய்மையை எவரும் புகழ்ந்து போற்றி வருகின்றார்.
சந்தக் கலி விருத்தம்
(காய் காய் காய் மா)
வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கியுள வாழ்க்கையது வேபோல்
தீயவினை நோக்குமியல் சிந்தனையு மில்லாத்
தூயவனை நோக்கியுள துப்புரவு மெல்லாம். 3 - குண்டலகேசி
தோணி காற்றையும், உடல் ஆயுளையும் எதிர்நோக்கி இயங்குகின்றன; அது போல் இன்ப நலங்கள் தூயவனை விழைந்து நோக்கி வருகின்றன என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது.
யாவர் மாட்டும் அன்பு செய்து வருவதை நேயம் புரிந்து என்றது. நேயம்- அன்பு, இரக்கம்.
மனத்தைப் புனிதப்படுத்தி, இனத்தைப் பேணி, எவ்வுயிர்க்கும் இதம் புரிந்து வருவதே ஒருவன் தனது வாழ்க்கையை இனிது நடத்திய படியாம்.
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
நீக்கரும் அவா வறுக்க,
..நிலையாமை முழுதும் காண்க,
வாக்கினை வருந்திக் காக்க,
..மன்னுயிர்க்(கு) இதமே செய்க,
தாக்கிய தனக்கின் னாத
..தான்பிறர்க்(கு) ஒழிக, என்றும்
ஆக்கமும் அறிவும் சேரும்
..அழகுறும் நெறியீ தன்றே. - தத்துவ தரிசனம்
நேரிசை வெண்பா
வணங்கி, வழிஒழுகி, மாண்டார்சொல் கொண்டு,
நுணங்கியநூல் நோக்கி, நுழையா - இணங்கிய
பால்நோக்கி வாழ்வான் பழிஇல்லா மன்னனாய்,
நூல்நோக்கி வாழ்வான் நுனித்து. 59 ஏலாதி
தன் வாழ்வை மனிதன் நெறி முறைகளில் செலுத்தி நிறை பேறுகள் எய்தும்படி இவ்வாறு வழிகள் பல கூறப்பட்டது.
புனித நெஞ்சனாய் இனிது வாழ்ந்து வருபவன் புண்ணிய சீலனாய்ப் பொலிந்து விளங்கி எண்ணிய நலங்கள் யாவும் எய்தி மகிழ்கின்றான். சித்த சுத்தி தெய்வ சித்தியாகின்றது.
'தெய்வம் பரிந்து புரக்கும் பயந்து' என்றது திருந்திய தூய வாழ்க்கையாளனிடம் தெய்வ கிருபை சுரந்து நிற்கும் திறம் தெரிய வந்தது. பயந்து - அஞ்சி அருளி,
கடமையைக் கருதிச் செய்பவனுக்கு எல்லா நலங்களையும் இனிது உதவி தரும தேவதை அவனை உவந்து காத்தருளுகின்றது.