அவளது காதல் -- பகுதி 2

ஆம்புலன்ஸ் மருத்துவமனையின் உள்ளே நுழைந்தது.

மருத்துவமனை உள்ளே அங்கேயும் இங்கேயுமாய் நின்றுகொண்டிருந்த மக்களுக்கு நடுவே பிரவீனின் உடல் எடுத்து செல்லப்பட்டு பிணவறையில் கிடத்த ஆயத்தம் செய்யப்பட்டது.

"இவரோட ரிலேட்டிவ்ஸ் யாராவது இருக்காங்களா..." நர்ஸ் ஒருவர் கேட்க, "நாங்க எல்லாரும் இவனோட பிரெண்ட்ஸ். என்ன போர்மாலிட்டீஸோ சொல்லுங்க. நான் கையெழுத்து போடறேன்" என்றான் முபாரக்.

"இல்ல சார், கண்டிப்பா ரிலேட்டிவ்ஸ் தான் போடணும். இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ணப்போறாங்க. அதுக்கான ப்ரொசீஜர்ஸ் சொல்லணும். அதான்," என்றாள் நர்ஸ். "மேடம், புரிஞ்சுக்கோங்க, அவனுக்குன்னு யாரும் இல்லை, அவன் ஒரு அனாதை. 2004 சுனாமில இதே ஆஸ்பத்திரில தான் இவனோட குடும்பத்துல அத்தனைபேரையும் பிணமா வாங்கிட்டு போனோம், இப்போ இவனாவது நல்லா இருப்பான்.... விரும்பின பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா குடும்பமா வாழ்வான் னு நெனச்சோம், எங்க நண்பன் மேடம்.....இன்னிக்கு யாரோ ஒருத்திக்காக உசுரைவிட்டுட்டு அனாதை பிணமா கெடக்குறான்," என்று அழுதபடியே சொல்லிக்கொண்டு ஸ்டெச்சரில் வைக்கப்பட்டிருந்த பிரவீனின் உடலை பார்த்து வருந்தினான் முபாரக்.

"சார், புரியுது சார், பட்....இருங்க, எதுக்கும் டாக்டர்கிட்ட என்ன ப்ரொசீஜர் ன்னு கேட்டுட்டு வரேன்" என்று கூறி நர்ஸ் செல்ல, பிரவீனின் நெற்றியில் தடவியவாறே பேயறைந்தாற்போல உறைந்து நின்றிருந்தாள் விஜி. "இப்போ சந்தோஷமா விஜி உனக்கு" என்றான் முபாரக்.

"அண்ணா...இந்த நேரத்துல ஏதும் வேணாம் அண்ணா. அப்புறம் பேசிக்கலாம். அவளோட நெலமை என்னன்னு நமக்கு தெரியாது. ஆகவேண்டித மொதல்ல பாக்கலாம்" என்றாள் காயத்ரி.
"என்ன காயத்ரி பாக்கசொல்ற. அனாதை பிணமா போக வெச்சுட்டா , இதுக்கு மேல என்ன பாக்கணும்.அவன் என்ன தப்பு பண்ணினான் னு எனக்கு தெரில, அவனுக்கு ஏன் இப்டி ஒரு தண்டனை னு தெரில....விஜி , இப்போ சந்தோஷம் தானே. ஈஸியா செத்துட்டான் னு இன்னும் கவலையா மா, வேணும்னா கத்தி எடுத்து தரேன், பாகம் பாகமா அறுத்துடு டா." என்றான் முபாரக்.

"அண்ணா....ப்ளீஸ், அப்படி எல்லாம் சொல்லாதீங்க, விஜி உங்க தங்கை போல அண்ணா. அவ ஏற்கனவே ரொம்ப நிதானம் இல்லாம நிக்கறா அண்ணா," என்றாள் காயத்ரி.

"பிரவீனை பாரு மா, இந்த உலகத்துல பொறந்ததுல இருந்து கஷ்டம் மட்டுமே தான் பட்டிருக்கான். அவனோட சிரிப்புக்கு பின்னாடி எவ்ளோ வலி இருக்கு யாருக்கும் புரியாது. இப்போ, ஒரு நல்ல விஷயம், இனிமே யாருக்கும் அவனை ஹர்ட் பண்ண முடியாது. ஆனா இவன் இல்லாதபோது தான் அவனோட பிரிவின் வலி என்ன என்ன னு பலபேருக்கு புரியும். அதைவிடு காயத்ரி, முடிஞ்சுபோச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல இவனோட உயிர் இல்லாதது போல இந்த உடலும் இல்லாம போய்டும். நீ அறுக்க வேணாம் விஜி. அவங்களே இருப்பாங்க. காய் வேற கால் வேற தனித்தனியா அறுத்து வெள்ளை மூட்டையா தருவாங்க. சந்தோஷமா போட்டோ எடுத்து வெச்சுக்கோ. போங்கடா, போய் ஆகவேண்டியதை பாருங்க. ஒரு விஷயம், என்னிக்காவது நாங்க உங்ககிட்ட மிஸ்பிஹேவ் பண்ணிருப்போமா. விஜியோட அப்பா அம்மாவை விட அவமேல உயிரை இருந்தான் இந்த பைத்தியக்காரன். அவளுக்காக என்னவெல்லாம் செஞ்சான் னு உனக்கு தெரியாதா காயத்ரி" என்றான் முபாரக்.

"புரியுது அண்ணா...ஆனா....."காயத்ரி முடிப்பதற்குள் "என்ன சொல்ல போற காயத்ரி, என்ன சொன்னாலும் போனவன் போனவன் தான். என்ன புரியவெக்க ட்ரை பண்ணற?" என்றான் விஜய்.

இவர்களுக்குள் நடக்கும் இந்த உரையாடலின் சாராம்சம் தெரியாமல் மற்ற அனைவரும் குழப்பத்தில் நின்றிருந்தனர்.

"இல்ல விஜய் அண்ணா..." மீண்டும் காயத்ரியை பேசவிடாமல் குறுக்கிட்டான் ரியாஸ் "போதும் காயத்ரி, நாங்க எல்லாரும் விஜியை எங்க குடும்பத்துல ஒருத்தியா தான் நெனச்சோம். எங்க சொந்த தங்கை போலதான் பழகினோம். அவனோட சேந்து விஜியோட சந்தோஷத்துக்காக நாங்க எல்லாருமே சப்போட் பண்ணிருக்கோம். இன்னிக்கு அனாதையா செத்து போய்ட்டானே இதுக்கு யாரு காரணம்?" கோபப்பட்டான் ரியாஸ்.

"அண்ணா...பிரவீன் இறந்ததற்கு விஜி என்ன பண்ணுவாள். அவள் என்ன பண்ணினாள் அவனோட மரணத்திற்கு" என்றாள் காயத்ரி.

"என்ன பண்ணினாளா....உனக்கு எப்படி சொல்லி புரிய வெக்கிறது.....பொண்ணுங்கன்னா சந்தர்ப்பவாதிகள் னு லெனின் அடிக்கடி சொல்லுவான். பிரவீன்க்கிட்ட இருந்த டாலேண்ட், பணம், எல்லாத்தயும் யூஸ் பண்ணிக்கிட்டு அவனை ஒரு குப்பை போல தூக்கி போட்டுட்டா இந்த விஜி" என்றான் வெற்றி.

"இப்போ அதெல்லாம் பேசி என்ன ஆகப்போகுது....எங்க பிரவீன் போய்ட்டான். நீ சந்தோஷமா இரு விஜி...." என்றான் கதிர்.

காயத்ரி என்னவென்று புரியாமல் திகைத்தாள்.

"ஏய்...விஜி, போதும் நடிப்பு, பிரவீனை கொன்னுட்டு இப்போ கவலை படரப்போல நடிக்கிறியா னு இவங்க கேக்கறாங்க டி, பாரு, கேக்கறாங்க இல்ல, வாயத்தொற டி . ஏண்டி இப்டி இருக்க. என்ன தான் உன்னோட பிரச்சனை. விஜி, உன்னைப்பத்தி எனக்கு தெரியும். கண்டிப்பா ஏதோ பிரச்சனை இருக்கு, இவங்ககிட்ட எல்லாம் ஏன் கெட்ட பேர் எடுக்கணும். என்ன னு சொல்லு டி." என்றபடி சிந்தனையற்று உறைந்து பிரவீனின் நெற்றியை தொட்டபடியே நின்றிருந்த விஜியை உலுக்கினாள் காயத்ரி.

"காயத்ரி....ப்ளீஸ் நீ இவளை கூட்டிட்டு போய்டு. அவன் சொன்னப்போவே நான் விஜி ஆபீஸ்க்கு போகலாம் னு சொன்னேன், விஜிக்கு புடிக்காதத செய்யவேண்டாம் னு என்னை இவன்தான் தடுத்தான். ஆனா இவன் இப்டி....வார்த்தைகள் வரவில்லை முபாரக்கிற்கு.

விஜியின் காதுகளில் இவர்கள் பேசுவது எட்டுவதாக தோன்றவில்லை. பிரம்மை பிடித்ததை போல் நின்றிருந்தாள்.

"வாப்பா...." என்று தொடங்கி தனது தந்தையிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு அனைத்தையும் கூறி முடித்தான் முபாரக்.

"டேய்....போஸ்ட் மார்ட்டம் பண்ணாம பாடிய தர மாட்டாங்க. நீ போய் என்ன போர்மாலிட்டீஸ் னு கேளு. " கதிருக்கு கூறினான் விஜய்.

"டேய்...நீங்க எல்லாரும் பிரவீன் வீட்டுக்கு போயிட்டு வெயிட் பண்ணுங்க." ரகு லெனின், ஹரி, கார்த்திக் மற்றும் ஷாகுலுக்கு தெரிவித்தான்.

"டேய்....நீ கிளப் கு போய் கோச்க்கிட்ட சொல்லிட்டு அவரை கூட்டிட்டு வா." வெற்றியிடம் கூறினான் ரியாஸ்.

"ரகு, நீ போய் மாலை, அது இது னு இவங்க முறைப்படி என்ன பண்ணணுமோ அதுக்கான ஏற்பாடு பண்ணு. இவங்க வழக்கத்துல எரிப்பாங்க டா. சுடுகாடு எல்லாத்துக்கும் சொல்லிட்டு சுடுகாட்டுக்கு டைம் சொல்லிட்டு வா. போஸ்ட் மார்ட்டம் பண்ணின பாடி ரெண்டு மணி நேரம் மேல தாங்காது. சோ....சீக்கிரம் இன்பாம் பண்ணிடு." என்றான் விஜய்.

சற்று நேரத்தில் முபாரக்கின் குடும்பம் அங்கு வந்தது. "என்ன ஆச்சு மாமா" என்றபடி முபாரக்கின் மனைவி நர்கீஸ் பதற்றத்துடன் கேட்க, "பிரவீன்..." என்றபடி இறந்த உடலை காட்டினான் முபாரக்.

"டேய்....இப்டி சின்ன புள்ள போல மென்னு முழுங்கிட்டு நிக்காத...அடுத்து ஆகவேண்டியதை பாரு" என்றார் முபாரக்கின் தந்தை.

"டேய்...முதல்ல எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்கு போன் பண்ணி இன்னிக்கு நைட்க்கு வரமுடியாதுன்னு சொல்லிடுங்க." என்று வெளியே சென்ற அனைவருக்கும் அறிவுரை கூறி கால் செய்தான் விஜய்.

அனைவரும் தன்மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்று அவைவரும் காட்டிக்கொண்டிருக்க அதை உணர முடியாத சதை போர்த்திய கூடாய் உயிரற்று படுத்துக்கிடந்த பிரவீனின் உடல் போஸ்ட் மோர்டெம் செய்ய எடுத்துச்செல்லப்பட்டது....

வெளியே முபாரக்...

"சரி...நர்கீஸ், விஜியையும் காயத்ரியையும் ரொம்ப திட்டிட்டோம், அவங்கள கூட்டிட்டு போய் ஏதும் சாப்பிட குடு. எல்லாம் பார்மாலிட்டீஸ முடிச்சுட்டு நாங்க கால் பண்றோம், அப்போ நீங்க வீட்ல இருந்த கிளம்பி பிரவீன் வீட்டுக்கு நேர வந்துருங்க." என்று கூறி நர்கீஸுடன் காயத்ரியையும் விஜியையும் போகுமாறு கூறினான் முபாரக்.

"இல்ல அண்ணா, நாங்க இருக்கோம்" என்றாள் காயத்ரி.

"இல்லடா, நாங்களே ரொம்ப பதட்டமா இருக்கோம், நீ போ, விஜி எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியாது, முடிஞ்சவரை அவளுக்கு சாப்பிட ஏதாவது குடுக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. ரொம்ப திட்டிட்டோம், எங்களை மன்னிச்சுடு, விஜி, நீயும் மன்னிச்சுடு டா, அப்டி நான் திட்டினது ரொம்ப பெரிய தப்புனு சொன்னா தண்டிச்சிரு" என்றான் முபாரக்,

"அண்ணா, அப்டி எல்லாம் சொல்லாதீங்க, சரி, நான் விஜி கூட உங்க வீட்டுக்கு போறேன்" என்றபடி விஜியை அழைத்துக்கொண்டு நர்கீஸிடம் வந்தாள் காயத்ரி.

"விஜி, கஷ்டமா தான் இருக்கும், உனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு எனக்கு தெரியல. நீ நம்ம வீட்டுக்கு வா. முதல்ல வீட்டுக்கு போய் சாப்பாடு சாப்பிடுங்க. காயத்ரி நீ விஜி வீட்டுக்கும் உங்க வீட்டுக்கும் கால் பண்ணி இன்னிக்கு முபாரக் பாய் வீட்ல நர்கீஸ் அக்காவோட இருக்கோம் னு சொல்லி விஷயத்தையும் சொல்லு" என்றாள் நர்கீஸ்.

"இல்லக்கா, வேணாம்....நானும் விஜியும் நைட் தான் வரோம் னு சொல்லிட்டு வந்திருக்கோம். எல்லாம் முடிஞ்சதும் கெளம்பி போயிடறோம்" என்றாள் காயத்ரி.

"சரி....இந்தாங்க கார் சாவி, 3158 வைட் ஸ்விப்ட் டிசையர். போய் வெயிட் பண்ணுங்க. நான் வந்துடறேன்." என்று கூறி அவர்களை அனுப்பி விட்டு இப்போது கண் கலங்கினாள் நர்கீஸ்.

"மாமா, எப்படி மாமா நடந்துச்சு? பிரவீன் கு என்ன ஆச்சு" என்றாள் நர்கீஸ்.

"இப்போ பேசற விஷயம் இல்ல நர்கீஸ், நீ கெளம்பு, விஜி கொஞ்சம் அனீஸியா இருக்கா. கொஞ்சம் ஆறுதல் சொல்லு' என்று கூறி அனுப்பி வைத்தான் முபாரக்.

அந்த நேரம் பிரவீனின் உடல் பல கூறுகளாக அறுக்கப்பட்டிருந்தது போஸ்ட் மார்ட்டத்திற்காக...
உயிரிருந்தும் பிணமாய் காயத்ரியோடு நடந்தாள் விஜி.

கார் நேராக கடலூர் முதுநகரில் இருந்த முபாரக்கின் வீட்டிற்குள் நுழைந்தது.

"நீங்க இந்த ரூம் ல வெயிட் பண்ணுங்க.. நான் பாத்திமாக்கும் அப்துல்லாக்கும் ஸ்கூலுக்கு போய் லஞ்ச் பாக்ஸ் குடுத்துட்டு வந்துடறேன்." என்று கூறிவிட்டு கிளம்பினாள் நர்கீஸ்.

"விஜி....இப்போ சந்தோஷமா விஜி உனக்கு, அவன் மரணம் தான் உன்னை அவன் படுத்தக்கூடிய கஷ்டம் னு சொன்னான் னு சொன்னியே... ஒரு உயிரை குடிச்சுட்டியே டி....எல்லாரும் சொல்ராங்க. பிரவீன் உன்னை லவ் பண்ணினான் னு. எல்லாரும் நான் நெனச்ச மாதிரி தப்பா இன்டர்ப்ரைட் பண்ணிருக்காங்களா? உண்மையை சொல்லு. உன்னை உயிருக்கு உயிரா....ஏன் உயிரைவிட மேலா நெனச்ச ப்ரவீனுக்கு என்ன ஒரு பரிசு குடுத்துட்ட, சொல்லித்தொலை டி, என்னாலேயே ஏத்துக்க முடில, பதறுது, சாகர வயசா அவனுக்கு, சொல்லு, கண்டிப்பா இதுக்கு பின்னாடி ஏதோ இருக்கு விஜி, மறைக்காம சொல்லு" என்றாள் காயத்ரி.

விஜியின் மௌனம் கலையவே இல்லை.. அவள் கண்களும் கண்ணீர் சிந்துவதை நிறுத்தவில்லை.

"பேசு டி...மேட்ச் நடக்குறப்போ அப்படி பேசினியே...வாயத்தொற..."என்றாள் காயத்ரி.

"என் பிரவீனை நானே கொன்னுட்டேன் காயத்ரி.....ஐயோ...என்னோட பிரவீன் இனிமே எங்க பாப்பேன்....என்னை உயிரா நெனச்சானே...எவ்ளோ நாள் என்னோட தனிமைல இருந்தாலும் அவனோட கண்ணியம்.....என்னை இப்படி தவிக்க விட்டுட்டு போய்ட்டானே....இப்படி அவன் பலவீனமானவன் னு தெரிஞ்சிருந்தா அவன் உயிரையே போகவிட்டிருக்க மாட்டேன். நானே என் வார்த்தையால அவனை கொன்னுட்டேனே...."பிதற்றினாள் விஜி.

"என்ன டி சொல்ற.....விஜி....சரியா பேசு....என்ன சொல்ற....எதையோ மறைக்கற விஜி என்கிட்டே இருந்து....." என்றாள் காயத்ரி.

"என் பிரவீனை நான் தான் கொன்னுட்டேன். இது என் சுயநலமா....என் குடும்ப வேலியா.....என்ன இருந்தாலும் என் பிரவீன்....அவனுக்கு ஒண்ணும் தெரியாது....என்னை அவன் உலகமாவே நெனச்சான். என்னை காதலிச்சத தவற அவன் வேற எந்த தப்பும் பண்ணல. என்னை காதலிச்ச பாவம்....அவன் உயிரை நானே என் வார்த்தையால பரிச்சுட்டேனே.....அவன் இன்னிக்கு சாகல.....அவனை பத்து நாளைக்கு முன்னாடியே கொன்னுட்டேன் காயத்ரி....." பெரிய குரலில் காயத்ரியை கட்டிக்கொண்டு கதற ஆரம்பித்தாள் விஜி.

"விஜி.....விஜி......என்ன டி சொல்ற....புரியரபோல சொல்லு" காயத்ரி பதற்றமானாள்.

அந்த நிமிடம் விஜியின் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.....:டேவிட் காலிங்"

காயத்ரி எடுத்து பேசினாள்..

"விஜி.......என்ன ஆச்சு அந்த கடலூர் பயலுக்கு....அவனுக்காக நீ எதுக்கு ஓடிப்போய் அழுதுட்டு அவனோட ஆம்புலன்ஸ் ல போன. அவனை தான் பாத்தாலே ஏதோ நெருப்புல கைவெக்கிற மாதிரி இருக்குன்னு சொன்ன....அவனை சைக்கோ னு சொன்ன.....இப்போ எங்க இருக்க" என்று கேட்டான் டேவிட்.

"ஹலோ டேவிட், நான் காயத்ரி, உங்க காதலியோட பிரண்ட். இருங்க....விஜி கிட்ட குடுக்கறேன்." என்றபடி போனை விஜய்யிடம் நீட்டி "உங்க புதிய காதலன் மேடம்" என்றாள் காயத்ரி.

செய்வதறியாது வாங்கி "சொல்லு டேவிட்" என்றாள் விஜி.

எதிர்முனையில் அவன் என்ன பேசினான் என்று தெரியவில்லை.

தேம்பி தேம்பி அழுத விஜி "டேவிட்.....ப்ளீஸ் இனிமே எனக்கு கால் பண்ணாதீங்க...."என்று கூறி போனை கட் செய்தாள்.

அடுத்த நொடியே அவள் கன்னத்தில் ஒரு அறை அறைந்தாள் காயத்ரி. "இவ்ளோ நேரமா நாங்க எல்லாரும் லூசு மாதிரி காத்திட்டு இருக்கோம், ஒரு உயிரை எடுத்துட்டு, காதலா டி உனக்கு. அதுவும் யாரை, ச்சீ....நெனச்சாலே அருவருப்பா இருக்கு டி. பணத்துமேல ஆசையா டி. இல்லனா நீ ஆம்பளைங்க மேல வீக்கா...ச்சீ, கேவலப்படுத்திட்டியே டி" என்றபடி இன்னொரு அறை விட்டாள் காயத்ரி.

அந்த நேரம் நர்கீஸும் வந்துவிடவே "ஏய்....எதுக்கு விஜியை அடிக்கிற காயத்ரி..." என்று கத்தினாள் நர்கீஸ்.

"அக்கா....சும்மா இருங்க....இவளை கொன்னாலும் தப்பில்லை. பிரவீன் லவ் பண்ணுறான் னு தெரிஞ்சும் வேற ஒரு பையன லவ் பண்ணிருக்கா இந்த நாய்" என்றாள் காயத்ரி.

அதிர்ந்துபோனாள் நர்கீஸ். மெல்ல விஜியின் அருகில் உட்கார்ந்து என்ன நடந்தது என்று விஜியை தனது மடியில் சாய்த்துக்கொண்டு தலையை தடவிக்கொடுத்துக்கொண்டே கேட்டாள்.

விஜி மெல்ல பேச தொடங்கினாள்.....

பகுதி 2 முடிந்தது.

தொடரும்...

எழுதியவர் : பிரவீன் (2-Jun-19, 5:54 pm)
சேர்த்தது : பிரவீன்
பார்வை : 261

மேலே