இப்படியும் இருக்கு… பேப்பர் பென்சில், பென்சிலுக்குள் ஒரு மரம்

நினைத்துப் பாருங்கள், மண்ணில் புதைத்து வைத்த ஒரு பென்சிலில் இருந்து ஒரு மரம் வளர்ந்தால் எப்படி இருக்கும் அல்லது முழுவதும் காகிதத்தால் ஒரு பென்சில் இருந்தால் எப்படி இருக்கும்.

இந்த இரு விஷயங்களையும் ஒன்றாக ஒரே பென்சிலுக்குள் அடக்கி ஒரு இளைஞர் புதுவிதமாக உருவாக்கி இருக்கிறார்.

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், நெலபட்லா கிராமத்தைச் சேர்ந்த ஜி. பிரமோத் குமார் என்ற இளைஞர்தான் இந்த புதுவித பென்சிலைத் தயாரித்துள்ளார்.

எம்.பி.ஏ. பட்டதாரியான பிரமோத் குமார் தான் தயாரிக்கும் பென்சில் இயற்கைக்கு கேடு விளைவிக்காத பென்சிலாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

இதையடுத்து பழைய காகிதம், பசை, காரியம் ஆகியவற்றின் மூலம் இந்த பென்சிலைத் தயாரித்தார். வழக்கமாக பென்சில் தயாரிக்க மரங்கள் அழிக்கப்படும், ஆனால், இந்த பென்சிலைத் உருவாக்க எந்த மரங்களும் வெட்டத்தேவையில்லை, மாறாக பென்சிலில் இருந்து மரம் உருவாகும். இயற்கையும் காக்கப்படும்.

இது குறித்து ஜி. பிரமோத் குமார் கூறியதாவது:

நான் எம்.பி.ஏ. படிப்பு முடித்தபின், சொந்தமாக தொழில் செய்ய முடிவு செய்தேன். இயற்கைக்கு கேடுவிளைவிக்காத பொருட்களை தயாரிக்க எண்ணினேன். அதன்படி வித்தியாசமாக பேப்பரில் பென்சில் தயாரிக்க முடிவு செய்தேன்.

இதன்படி எனது மாமாவிடம் இருந்து பணம் பெற்று மும்பையில் ஒரு எந்திரத்தை விலைக்கு வாங்கி எனது கிராமமான நெல்பட்லாவில் சமிஷ்கா என்டர்பிரைசஸ் என்ற பெயரில் சிறிய தொழிற்சாலையை தொடங்கினேன்.

இந்த பென்சில் தயாரிக்க கழிவுகாகிதம், பசை(கம்), காரீயம்(லீட்) ஆகியவை இருந்தால் போதுமானது. இதைவைத்து பென்சிலை உருவாக்கினேன். ஏறக்குறைய 12 கிலோ பழைய காகிதத்தைக் கொண்டு 7.5 இன்ஞ் நீளமுள்ள 2,500 பென்சிலை தயாரிக்க முடியும். இது ஒரு மரத்தை வெட்டி சாய்த்து அதில் பென்சில் தயாரிப்பதற்கு சமமாகும்.

இந்த பென்சில் ஒவ்வொன்றையும், அதன் தரம், வடிவமைப்புக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்துவருகிறேன்.

இதில் ,கறுப்புவெள்ளை பென்சில், வானவில் பென்சில், வெல்வெட் பென்சில், முளைக்கும் பென்சில் என பலவகைகளில் தயாரித்து விற்பனை செய்கிறேன்.

இந்த தொழிற்சாலை ரூ.15 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்டது. இப்போது, 8 பேர் இங்கு வேலை செய்கிறார்கள். ஏறக்குறைய 30 வினாடிகளில் 4 பென்சில்களை தயாரிக்க முடியும். ஒரு பென்சிலின் அடக்கவிலை வெறும் 60 காசுகளில் முடிந்துவிடும்.

சுயஉதவிக்குழுவில் உள்ள பெண்கள் இந்த எந்திரத்தை வைத்து பென்சில் தயாரித்தால், குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு ஒருவர் ரூ.9 ஆயிரம் சம்பாதிக்கலாம்.

எங்கள் நிறுவனம் மூலம் மாதம் ஒரு லட்சம் பென்சில் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். குறிப்பாக கோவை, குல்பர்கா, மஹாராஷ்டிராவுக்கு அதிகமாக அனுப்பி வருகிறோம். சமீபத்தில் எங்களின் புதிய கண்டுபிடிப்பு, கையால் தயாரிக்கப்பட்ட பேனா ஆகும். வழக்குமாக ஒரு பேனாவின்விலை 10 ரூபாய் இருக்கும் போது, இந்த பேனாவை நாங்கள் 4 ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளோம்

எங்கள் பென்சிலின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்று முளைக்கும் பென்சிலும். பென்சிலின் ரப்பர் வைக்கும் பின்பகுதியில், ரப்பருக்கு பதிலாக சிறிய குப்பியில் விதைகள் வைத்திருப்போம். பென்சில் எழுதிமுடித்து தீர்ந்தவுடன் அதை மண்ணில் புதைத்து வைத்தால், அது செடியாகவோ அல்லது மரமாகவோ வளரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எழுதியவர் : போத்திராஜ் (5-Jun-19, 4:14 am)
பார்வை : 45

மேலே