கடவுள் வாழ்த்து - வளையாபதி
கடவுள் வாழ்த்து
கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
*முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
* 2,3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண்
திலகம் ஆய திறல றிவனடி
வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்
தொழுவல் தொல்வினை நீங்குக என்றுயான். 1 கடவுள் வாழ்த்து, வளையாபதி
(இச் செய்யுள் தொல்காப்பியத்திற்கு இளம்பூரண அடிகளார் வகுத்த உரையில் கண்டது)
பொருளுரை:
மூன்றுலகத்துள்ளும் வாழும் சான்றோரனைவரும் ஒருசேர வாழ்த்தி வணங்குதற்குக் காரணமான மாட்சிமையுடைய அருகக் கடவுளின் திருவடிகளை என் பழவினைகள் என்னைவிட்டு நீங்க வேண்டும் என்று விரும்பி, நான் காம முதலிய குற்றங்களில்லாத தூய நெஞ்சத்தோடிருந்து அதற்குக் காரணமான நோன்பினை நெறிமுறைப்படி செய்ய என் மனமொழி மெய்களாலே தொழுது வணங்குகின்றேன் .
விளக்கம்: இது அருக சரணம். மூன்றுலகம் என்பது மேலுலகும் நிலவுலகும் கீழுலகுமாம். இவற்றை ஒளியுலகம் நிலவுலகம் இருள் உலகம் என்பர்.
இருள் உலகத்தாரும் அருகனை வணங்குவார்களா என்றால் வணங்குவர். ஏனென்றால், நரகவுலகத்தில் வீழ்ந்து உழல்வோர்க்கும் அவனடிகளை யன்றி தப்பிக்க வேறில்லை யாகலின், அங்கும் நல்லறிவுபெற்று வணங்குவர்.
நரகத்துழலும் உயிர்கள் நல்லறிவு பெற்றுத் தம் தீவினைக் கிரங்கி அறமுதலியவற்றைச் செய்ய விரும்புவர்.
இவ்வாறு தம் தீவினைக்கு இரங்கும் நரகர் அதன் தீர்வு கருதி இறைவன் அடிகளை ஒருமனதாக ஏத்துவர்.
திலகம் - நெற்றிச்சுட்டி. அறிஞர் தம் நெற்றியிலிடுதற்கியன்ற திலகம் போன்ற அடிகள் எனப்படும்.
திறல் அறிவன் - முற்றறிவினை உடைய இறைவன்;
மூவுலகத்துமுள்ள உயிர் முதலிய பொருள்களின் முக்கால நிகழ்ச்சிகளையும் ஒரே சமயத்தில் ஒருங்கே அறியும் ஆற்றலுடைமையின் இறைவன் அறிவினைத் 'திறல் அறிவு' என்றார்.
உலகத்துச் சான்றோரால் வணங்கப்படுபவர் இன்னா செய்யாமையும், பொய் கூறாமையும், கள்ளாமையும், காமமில்லாமையும், பற்றின்மையும் முதலாகிய குணங்கள் உடையவராக இருத்தல் வேண்டும்.
இக்குணங்கள் முழுதும் உடையவன் அருகக்கடவுளேயன்றி வேறு சமயத்தார் கூறும் இறைவர்க்கெல்லாம் இக் குணங்களின்மையால் 'உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்தும் மாண் திலகம் ஆய திறல் அறிவன்' என்பது அருகக் கடவுளுக்கே பொருந்துவதாயிற்று எனப்படுகிறது.
இறைவன் அடிவணங்குவதன் குறிக்கோள், 'வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றலே' ஆதலின் அதனையே குறித்தார்.
'வழுவில் நெஞ்சம்' பெறுதற்கு இருள்சேர் இருவினையும் அகலுதல் இன்றியமையாதலால், 'தொல்வினை நீங்கவும்' என்றார்.