சாது சரணம் - வளையாபதி 2

சாது சரணம்

வெண்டலை பயிலும் கலி விருத்தம்

துக்கந் துடைக்கும் துகளறு காட்சிய
நிக்கந்த வேடத்(து) இருடி கணங்களை
ஒக்க அடிவீழ்ந் துலகியல் செய்தபின்
அக்கதை யாழ்கொண்(டு) அமைவரப் பண்ணி. 2 வளையாபதி

பொருளுரை:

'பிறவிப் பெருந்துன்பத்தை முழுவதும் போக்குதற்குக் காரணமான குற்றமற்ற மெய்க்காட்சியையுடைய பதினேராங்குணத் தானத்து நிற்கு நிக்கந்த குல்லகர் என்னும் துறவோர் குழுவினை மன மொழி மெய்கள் ஒருசேரத் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி, உலகத்துச் சான்றோர் செய்யும் கடவுள் வாழ்த்து வகையினைச் செய்த பின்னர் யாழினைக் கையிலேந்தி, அதனை ஆராய்ந்து சுதி கூட்டிய பின்னர்' எனப் பொருள்படும்.

விளக்கம்:

துக்கம் - பிறவித்துயர். துகள் - அழுக்கு. அவை, காமம், வெகுளி, மயக்கம்.

காட்சி - மெய்காட்சி. இருடிகணம் - துறவோர் குழு. உலகியல் - உலகோர் செய்யும் முறைமை.

இச் செய்யுள் யாழிசைக்கும் ஒருத்தியின் செயலைக் கூறுகின்றது. இவள் வரலாறு தெரியவில்லை. அக்கதை என்று ஆசிரியர் சுட்டும் கதையும் இன்னதென்று தெரியவில்லை.

அமைவரப் பண்ணுதல் - சுதி கூட்டுதல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jun-19, 10:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

மேலே