சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்த சிறப்பு அமர்வு கலைப்பு உயர் நீதிமன்றம் உத்தரவு

காமதேனு

04 ஜூன் , 2019

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அமர்வு கலைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையை உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார்.

அமர்வு கலைக்கப்பட்டதை அடுத்து, சிலை கடத்தல் தொடர்பாக இனி வரும் வழக்குகளை தினசரி அமர்வே விசாரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழக கோயில்களில் உள்ள சிலைகள் கடத்தப்படுவது, நகைகள் திருடப்படுவது தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் ஆதிகேசவலு, மகாதேவன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது.

சிலை கடத்துதல், விற்றல் உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்க கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. தலைமை நீதிபதியாக அப்போது பதவி வகித்த இந்திரா பானர்ஜி இந்த அமர்வை ஏற்படுத்தினார். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் அதிகம் வந்ததாலும் கடத்தலை முழுமையாகத் தடுக்கவும் இந்த அமர்வு தனியாக உருவாக்கப்பட்டது. அறநிலையத் துறையின் மனுக்களும், ஜாமீன் தொடர்பான வழக்குகளும் நிலுவையில் நிற்பதைத் தடுப்பதற்காக இந்த யோசனை முன்னெடுக்கப்பட்டது.

ஒவ்வொரு நீதிமன்றத்திலும் தனித்தனியாக விசாரிப்பதற்குப் பதிலாக, சிறப்பு அமர்வு உருவாக்கப்பட்டது. இதன்படி மூத்த நீதிபதி மகாதேவன், மற்றொரு நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் இதில் அமர்த்தப்பட்டனர். 9 மாதங்களாக இந்த அமர்வே விசாரித்தது. இந்நிலையில் தேங்கி நின்ற வழக்குகளில் பெரும்பாலானவை முடிக்கப்பட்டு விட்டதாலும், குறைவான வழக்குகளே நிலுவையில் உள்ளதாலும் சிறப்பு அமர்வு நீடிக்கத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எழுதியவர் : காமதேனு (5-Jun-19, 4:03 am)
பார்வை : 15

மேலே