குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பாளர்- பிராமன்
மலையாளக் கவிஞர்களில் முதன்மையானவராக கருதப்படும் பி.ராமன் தன் இளம்வயதிலேயே குற்றாலத்தில் [1998] நடந்த தமிழ் – மலையாளம் கவிதையரங்கில் கலந்துகொண்டவர். தொடர்ந்து ஊட்டி குருகுலத்தில் நடந்த குருநித்யா கவிதையரங்குகள் அனைத்திலும் பங்குகொண்டவர். தமிழ்க்கவிதையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர்.
1972ல் பாலக்காட்டில் பட்டாம்பியில் பிறந்தார்.கனம், துரும்பு என இரு தொகுதிகளாக கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. பாஷையும் குஞ்ஞும் என்னும் தலைப்பில் கவிதைபற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.மலையாளம் முதுகலை பட்டம்பெற்றவர். ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
பி.ராமன் கவிதைகள்
1. வீட்டைப்பற்றி
கட்டவிருக்கும்
வீட்டைப்பற்றி
பேசிப்பேசி
ஒரு காலனியையே
நாம் உருவாக்கிக்கொண்டோம்
வார்த்தைகளால் ஆனது என்றோ
கனவுகளால் ஆனது என்றோ
வீடுகளால் ஆனது என்றோ
தெளிவாகச் சொல்லமுடியாத
ஒரு காலனி
அங்கே செல்வதற்கான வழி
ஒரு தார்ச்சாலைபோல தெரிகிறது
நாம் உறங்குவதற்கு முன்பிருக்கும்
இரவுக்கீற்றுகள்
ஒழுகி ஒழுகிச் சென்று படிந்து உருவானது
நாம் உறங்குவதற்கு முன்புள்ள
சொற்களால்
தெளிந்து கேட்கக்கூடியது.
2. பாறையைப்பற்றி
குன்றின் மேலிருந்து
ஒழுகிவந்த பாறை
வயல்வெளியின் சேற்றுக்குள்
முக்குளியிட்டு வந்து
காலனியிலிருந்த கிணற்றில் எழுந்தது
இரண்டுகோல் அளவுக்கு நீர் இருந்த கிணற்றில்
நேற்று விழுந்தவள் இறந்தது
நீரில் மூழ்கியல்ல
முகம் சிதைந்து
புதைக்கும்பொருட்டு தோண்டியபோது
முதல் வெட்டு
பாறையில் பட்டு
அனலெழுந்தது
மீண்டும் தோண்ட முடியவில்லை என்பதனால்
விறகு வாங்கி
எரியூட்டினார்கள்
3. முதல்சொற்கள்
திண்ணையிலேயே
புதிய ஒரு வார்த்தையுடன் நீ விளையாடிக்கொண்டிருக்கிறாய்
நான் வாரந்தோறும் வருகையில்
அம்மினா.. பெற்றி.. குப்பி… மழை..கோழி.. அச்சுகுடும்…
உனது கரையில்
தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் மட்டும்
இருந்து விளையாடுகின்றன
எத்தனை கவனித்தாலும் பிடிகிடைக்கவில்லை
எந்த சல்லடையால் நீ சலித்தெடுக்கிறாய்?
முதலில் தேர்ந்தெடுத்த சொற்கள் உனது கரையில்
அழிவில்லாமல் இருக்கின்றன என்றால்
அழிவின்மையை நினைவுறுத்தியேனும்
இருக்கின்றன என்றால்
கோடிக்கணக்கான சொற்கள்
குழம்பிக்கலைந்து கிடக்கும் வெளியில் இருந்து
அவற்றை அடையாளம் கண்டு எடுக்க
நாளை உன்னால் இயலாது போகுமோ
என எண்ணி
நீ முதலில் சொன்ன சொற்களை
குறித்து வைக்கிறேன்
அம்மினா.. பெற்றி.. குப்பி… மழை..கோழி.. அச்சுகுடும்…