மழைக்கு ஒதுங்கினேன்

கூடார கிளை
விரித்திருக்கும்
ஓர் மரத்தின் அடியில்
ஒதுங்கினேன்
அடைமழை விடும் என்று...
ஓயாமல் பெய்த மழை
வெகுநேர கூச்சலுக்கு பிறகு
ஓரிரு நிமிடத்தில்
ஒவ்வொன்றாக குறைந்தது...
மழையின் மொழி
மரக்கிளை இலைகளில்
ஒட்டிக் கொண்டது....
காற்று வந்து ஓங்கி அறைய மழையின் சத்தம்
மண்ணை நனைத்தது....
மலர்களெல்லாம்
மழை அரும்புகளை தன்
அகன்று விரிந்த இதழ்களில்
சுமந்து கொண்டு
நிறைமாத கர்பினியை போல
தென்றலின் வேகத்திற்க்கு
ஈடு கொடுத்திட முடியாமல்
தள்ளாடிக் கொண்டிருந்தன....
க்ளக்க்...க்ளக்க்..என்று
நேற்று வரை ஊமையாய்
இருந்த தவளைகளும்
இன்று பேசத் தொடங்கிவிட்டன
குழந்தை அம்மா என்ற
சொல்லை மட்டும் அறிந்தது போல....
வீடுகளின் கூரைகளில்
மழை முத்துபோல்
மின்னியும் ...குளங்களில்
குண்டுமணி விழுவதை
போலவும்....தென்னங்கீற்றில்
சிந்தும் வெள்ளி போலவும்...
சிறுவர்கள் கையில்
சிதறும் சில்லரை போலவும்..
நெல்லுமணிக்கு நல்ல உரம் போலவும்...அடடா!
மழையே உனக்குத்தான்
எத்தனை எத்தனை
பரிணாமங்கள்...
நீ நின்று விட்ட பிறகும் கூட
உன் சுவடு தெரியும்
இடங்களில் எல்லாம்
பெரும் அழகு பதிந்து விடுகிறது...
மழை ...அதை அழை மனமே..!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Jun-19, 7:22 am)
பார்வை : 62

மேலே