தேவதையைப் பிடிக்கப் போய் நகைச்சுவைக் கதை

.................................................................................................................

அது என் கல்லூரிக் காலம். மாணவியர் விடுதியில் தங்கி, மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு வருடமும் ‘’ ஹாஸ்டல் டே’’ எனப்படும் வேடந்தாங்கல் விழா கொண்டாடப்படும். அதற்காகவே மூன்றாம் ஆண்டு மாணவிகளைக் கொண்ட ஒரு கமிட்டி தேர்வாகி பதவியேற்றுக் கொள்ளும்.

கலை நிகழ்ச்சியாக ஒரு தேவதை நாடகம் போடலாம் என்று முடிவு செய்தோம். ஒரு ஏழைக் கவிஞனின் பாடலைக் கேட்டு ஒரு தேவதை அவன் மேல் காதல் கொள்வாள். அந்தக் கவிஞனும் சிறுகச் சிறுக பணக்காரனாவான். மனைவியை மறந்து அவளுடனே பொழுதைக் களிப்பான். அவன் மனைவி கணவன் தன்னிடம் வர வேண்டுமென்று தலைமைத் தேவதையை வேண்டி விரதமிருப்பாள். தலைமைத் தேவதை இந்தத் தேவதைக்கு உரைக்கும்படி புத்திமதி சொல்லி, திரும்ப அழைத்துக் கொள்ளும். இதுதான் கதை.

இந்தக் கதை உதிக்கக் காரணமாக இருந்தவை இரண்டு விஷயங்கள்: ஒன்று நவ்ரங் இந்தித் திரைப்படம். இன்னொன்று, என் வகுப்புத் தோழி கீதா. கீதா கல்யாணமான ஒரு உதவிப் பேராசிரியரை மோகிக்கிறாள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் என்னிடம் கூறின. அவளிடம் நேரிடையாகக் கேட்க அத்தனை பேருக்கும் தயக்கம். கேளாமல் விட்டால் நட்புக்கு அழகல்ல. ஆகவே அவளுக்காகவே “ ஒருத்தி தின்று கொண்டிருக்கிற எச்சில் இலைப் பலகாரத்துக்கு ஆசைப்பட்டு ” என்றும் “ உன் வாழ்க்கைத் துணையை இன்னொருத்தி கவர்ந்தால் உனக்கு எப்படி வலிக்கும்? ” என்றும் “ நீ ஒரு தேவதையென்றால் அவள் நெற்றிக் குங்குமத்தின் மேல் உன் நிழல் கூட விழக் கூடாது” என்றும் சில பல கூரான வசனங்களை வைத்திருந்தேன்.

என் தோழிகள் வகுப்பு மாணவிகளுக்குப் படிக்கக் கொடுப்பது போல கீதாவுக்கும் நாடகக் கதையை வாசிக்கக் கொடுத்தார்கள். கதையை வாசித்த கீதா “ என்ன சீலி, ரொம்ப ஃபீலிங்கோட எழுதியிருக்க? அனுபவம்தானே? யாரு ஃபார்மகாலஜி சாரா?” என்றாளே பார்க்கலாம்.

இதைப் பாராட்டாக எடுத்துக் கொள்வதா இல்லை, பழிக்குப் பழி புளிக்குப் புளி என்னும் போக்கில் குதர்க்கமாக எடுத்துக் கொள்வதா?

நான் பற்களை நறநறவென்று கடித்தேன். தோழிகள் நமுட்டுச் சிரிப்பு சிரித்தனர்.

படிக்கப் படிக்க அவள் முகம் மாறியது.. முழுதும் கவனிப்பதற்குள் மற்ற ஏற்பாடுகளைப் பற்றி பேச வேண்டி வந்தது. கிடைத்த இடைவெளியில் அவள் ஓடி விட்டாள்.

நட்புக்கான முக்கிய கடமையை முடித்த திருப்தியில் நாடகத்தின் வசனங்களைக் குறைத்து சிறிதாக்க முடிவு செய்தோம். நவ்ரங் படப் பாடலான ஆதா ஹை சந்தமா பாடலை இணைத்தோம். ரெகார்ட் செய்த பாடலுக்கு நடன அசைவுகள் கடினமாக இருக்கும் என்பதால் யாரேனும் ஒருவர் திரைக்குப் பின்னால் வாத்தியங்களின்றி சோகமாக, இனிமையாகப் பாடினால் சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுத்தோம்.

திருப்பம் நிகழ்ந்தது அங்குதான்.

எங்கள் சீனியர் மாணவி உமா பார்வதி பாடல் பாடுவதாக வலிய வந்து ஒப்புக் கொண்டார். “ ஏளா..! எனக்கு இந்தி தெரியும்.. அந்தப் பாட்டை நாம் பாடலாமில்லா” என்று அவர் கூறியபோதே நான் சுதாரித்திருக்க வேண்டும்..! அவர் வீரம் விளைந்த திருநெல்வேலி மகள் என்று..! மண்டையிலுள்ள கிட்னி கவனிக்கவில்லை.. ஏனென்றால் எம்பிபிஎஸ் படிப்பு என்பது பொறாமை பிடித்த புருசன் போல.. கொஞ்சம் மனதைப் பிற விஷயங்களில் செலுத்தினால் உர்ரென்று போய்விடும்.. அழகுணர்ச்சி, ரசனை, கற்பனாதிறன் எல்லாமே மழுங்கி, கண்ணைப் பார்த்தால் காடராக்ட், கழுத்தைப் பார்த்தால் காய்ட்டர்...... ( அந்த அழகான நெக்லஸ் கண்ணுக்குத் தெரியாது) நிலைமைக்குப் போய் விடுவோம். எங்கள் வகுப்பு யாமினிக்குப் பால் வண்ண மேனி.. ரோட்டில் நடந்தால் அவனவன் ஜொள்ளு விடுவான்.. அவள் பக்கத்தில் உட்காரும் பாக்கியம் கிடைத்த வகுப்புத் தோழன் யூசுப், “ஏய் யாமினி, உனக்கு அனீமியாவா? இப்படி வெளுத்திருக்க? ” என்று சந்தேகப் பார்வை பார்ப்பான்..

இதனால் எங்கள் இயல் திறமை கேஸ் ஷீட் எழுதுவதிலும், இசைத் திறமை குளியலறையிலும், நலமிலிகளைத் தூங்க வைப்பதிலும் நாடகத் திறமை தாமதமாக சீஃப் ரவுண்ட்ஸூக்கு வந்து, கூட்டத்தோடு கூட்டமாக ஜோதியில் கலந்து, ஆரம்ப முதலே அங்கிருப்பது போலக் காட்டிக் கொள்வதிலும் கழிந்து கொண்டிருந்தது.. இந்நிலையில் உமா பார்வதி என்கிற ஒரு சேலை கட்டிய செம்மறியாடு, தானே கத்திக்கு கழுத்தை நீட்டினால் இன்ப அதிர்ச்சியில் கிட்னி முடங்காதா என்ன?

இரண்டு மூன்று நாட்களில் எங்கள் பங்கு ஒத்திகையை நாங்கள் முடித்து விட்டோம். உமா பார்வதி அன்றுதான் வந்து பாடுகிறார். சற்றுக் கட்டைக் குரலில் “ஆதா ஹை ஜந்த்ரமா.. ராது ஆத்தே.. ரெஹனகட்டை தேரே மேரே பாத்து ஆத்தே.. மொலாகாத்து ஆத்தே.. ” என்ற ரீதியில் பாடிக் கொண்டே போனார்.. நான் மயக்கம் போட்டு விழுந்தேன்.

குரல் கொஞ்சம் கட்டை என்பது மட்டுமல்ல.. வீர பாண்டிய கட்டபொம்மன் ( நான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கற்பனை செய்து கொண்டேன்.) பிரிட்டிஷாரை குதிரையில் குதித்துக் குதித்துத் துரத்துவது போல வார்த்தைகள் அழுத்தம் திருத்தமாக விழுந்தன. அவர் ஆத்தே ஆத்தே என்கிறபோது யாராவது வயதான அம்மாள் கூப்புட்டியா குழந்தே என்று மேடைக்கு வந்து விடுகிற வாய்ப்புத் தெரிந்தது. இதில் துடைப்பகட்டை ரேஞ்சுக்கு ரெஹனகட்டை வேற..!

என் தோழிகள் “ சீலி..! சமாளி ” என்று சொல்லிவிட்டு கல்லடி விழுந்த காக்கைகளாய்ப் பறந்து விட்டார்கள்.

சீனீயர் என்பதால் அவரை நீக்கவும் முடியவில்லை.. பாட விட்டால்...? வள்ளலார் நகரில் அழுகிய முட்டை தக்காளி எல்லாம் மொத்த விற்பனைக்குக் கிடைக்கும்...

தர்ம சங்கடம்.. சோதனை.. மயக்கம் கலக்கம்.. மனதிலே குழப்பம்.. வாழ்க்கையில் நடுக்கம்..!

பத்மாவதிதான் யோசனை சொன்னாள்.. “ தேவதைக் கதையை மாத்தி காமெடிக் கதையாக்கிடு.. அதுவும் திருநெல்வேலி வட்டாரத் தமிழ்ல..! ”

சொல்லுதல் யார்க்கும் எளிய..! அடுத்த நாள் பதாலஜி என்கிற நோய்க் குறியியல் பாடத்தில் உள்முகத் தேர்வு.. ( Internal assessment ).

நான் பாடத்தில் ஒரு கேள்வி.. பாத்திரத்துக்கு ஒரு வசனம் என்று மாற்றி மாற்றி செய்தேன். இது கதாநாயகன் சொல்வது, கருப்பை கான்சரின் நிலைகள்.., கதாநாயகி வசனம்- குறைப் பிரசவ குழந்தை.. எந்திரிச்சி வாங்கறேன்.. எலும்பு மஜ்ஜையில் தொற்று.. மேடையில் பேப்பர் வைத்து பரீட்சை எழுதுகிறேன்.. கதாநாயகன் டெல் மீ த ஃபாட்டி காஸஸ் ஆஃப் போர்டல் ஹைபர்டென்சன் என்கிறான்.... கொர்.. கொர்...

அடுத்தடுத்த நாட்களில் புது நாடகத்துக்கான எங்கள் ஒத்திகை எப்போதும் போல் நடந்தது. உமா பார்வதியை அழைத்தோம். அவர் பாடல்தான் நாடகத்துக்கு முத்தாய்ப்பே..!

உமா பார்வதி வர இயலாது என்று கூறி விட்டார். அவர் யூனிட் மாற்றிக் கொண்டாராம்.. டாக்டர் ஜெய முருகன் சார் யூனிட்டாம். அவர் இருட்டிய பிறகும் வகுப்பு எடுப்பார்.. மாணவர்கள் தூக்கக் கலக்கத்தில் இருந்தால் தேநீர் வாங்கிக் கொடுத்து வகுப்பு எடுக்கிறவர்..!

“ ஐயையோ.. அப்ப குதிச்சி குதிச்சி யார் குதுர ஓட்றது? ”

வேடந்தாங்கல் விழாவுக்குச் சில நாட்களே இருந்தன. “ பாட்டை மாத்திடு” என்றாள் பத்மாவதி. “ ரெகார்ட் ப்ளேயர் வச்சிக்குவோம்..! ”

முத்துக் குளிக்க வாரியளா பாட்டைத் தேர்ந்தெடுத்தோம். அதற்கான மனோரமா, நாகேஸ் நடன அசைவுகளை பத்மாவதியும் தீபிகாவும் பார்த்துக் கொண்டனர்.

மேடையில் நாடகத்தைப் போட்டுவிட்டு அழுகிய தக்காளி வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்த மும்முரத்தில் சீனுக்கு சீன் கைத்தட்டல் கிடைத்ததை கவனிக்கவில்லை..

“ கதை வசனம் டைரக்சன் யாரு? மேடைக்கு வரச் சொல்லுங்க.. ” என்று குரல் எழும்ப, பத்மாவதி என்னைத் தரதரவென்று இழுத்து மேடையில் விட்டாள்.

சுபம்..

அடுத்த ஜென்மம் வரைக்கும் நாடகம் போட மாட்டேம்ப்பா..!.....................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (25-Jun-19, 2:17 pm)
பார்வை : 304

மேலே