ஒருவன் மேன்மை வெளியே விரியுமால் நல்லார் பெறுவர் நயந்து - மேன்மை, தருமதீபிகை 300
நேரிசை வெண்பா
பான்மை உயரப் படியில் ஒருவன்தன்
மேன்மை வெளியே விரியுமால் - ஆன்மவொளி
எல்லா ரிடமும் இனிதமைந் துள்ளததை
நல்லார் பெறுவர் நயந்து. 300
- மேன்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உள்ளப் பண்பு உயரவே ஒருவன் மேலோன் என உலகில் உயர்ந்து விளங்குகின்றான்; ஆன்ம சோதி எல்லாரிடமும் நன்கு அமைந்துள்ளது; ஆயினும் நல்ல குணசீலர்களே அதனை உரிமையாகப் பெற்றுப் பெருமையுறுகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர், இப்பாடல் பான்மை அளவே மேன்மை என்கின்றது.
மனிதர் எல்லாரும் உருவ நிலையில் ஒருமையுற்றிருந்தாலும் குண நலங்களின் அமைதிக்குத் தக்கபடியே உயர்வு தாழ்வுகள் உளவாகின்றன. பான்மை - தன்மை, குணம்; படி - பூமி, உலகம்;
மேன்மை – நன்கு மதிப்பு; எல்லாரும் மேலாக எண்ணித் துதிக்கும் நிலை மேன்மை என வந்தது.
மனம் மொழி மெய்கள் இனிய நீரராய் யாண்டும் இதம் புரிந்து ஒழுகும் புனிதமுடையவர் மனித சமூகத்தில் உயர்ந்த மேன்மையாளராய்ச் சிறந்து திகழ்கின்றார். அந்நிலைமையாளரை உலகம் உவந்து வழிபட நேர்கின்றது.
சொல்லும் செயலும் இழிந்தனவாயின் அவர் இழிநிலையாளராய்க் கழிந்துபடுகின்றனர்.
உருவத் தோற்றத்தில் மனிதராயினும் இயல்பு குன்றவே உயர்வு பொன்றுகின்றது.
நாய் குரைக்கும், கழுதை கத்தும், பன்றி உறுமும் என்பது போல் சிலர் வாய் திறந்தால் தீமை, பழி, வசை, புன்மை முதலிய இழி மொழிகளே வெளி வருகின்றன. அவ்வரவால் அவரது இருப்பும் பிறப்பும் தெளிவாகின்றன.
நல்ல குலமக்கள் தீய மொழிகளை மறந்தும் பேசாராதலால் அங்ஙனம் பேசுபவரை அப் பேச்சே இன்னார் என்று வெளியே காட்டி விடுகின்றது.
செயல் இயல்களைக் கொண்டே மனிதரது நிலைமைகள் மதிக்கப்படுகின்றன. திருந்திய பண்பும் செவ்விய பயிற்சியுமுடையவன் ஒத்த மனிதருள் உத்தமனாய் ஒளிர்கின்றான்.
One person primarily differs from another by fineness of nature, and, secondarily, by fineness of training. - Ruskin
"இனிய இயல்பும் நல்ல பழக்கமும் ஒரு மனிதனைப் பிறரினின்றும் வேறு பிரித்துத் தனிநிலையில் உயர்த்துகின்றன’’ என ரஸ்கின் என்பவர் இங்ஙனம் கூறியிருக்கிறார்.
பிறப்பினால் மட்டும் மனிதன் பெரியவன் ஆக மாட்டான்; சிறப்பான குணநலங்கள் படிந்த பொழுதுதான் அவன் சீர்த்தி மிகப் பெறுகின்றான்.
’ஆன்ம ஒளி எல்லாரிடமும் இனிது உள்ளது’ என்றது மனிதரது இயல்பான புனித நிலைமையை நினைவுறுத்தியது. அந்த அரிய பொருளைப் பழுதுபடுத்தாமல் இனிது பேணி இன்பம் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.