எண்ணம் தளராமல் எண்ணியன திண்ணமுடன் எய்தும் திறலோன் - ஆண்மை, தருமதீபிகை 290

நேரிசை வெண்பா

எண்ணம் தளராமல் எண்ணியன யாவுமே
திண்ணமுடன் எய்தும் திறலோனை - மண்ணவள்தான்
ஈன்ற குலமகனென்(று) எண்ணி உளமகிழ்வள்
ஆன்ற தலைவன் அவன். 290

- ஆண்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

யாண்டும் நெஞ்சம் தளராமல் கருதியன எல்லாம் உறுதியுடன் பெறுகின்ற ஆண்மையாளனைப் பூமிதேவி தான் பெற்ற குலமகன் என்று உவந்து கொள்வாள்; அவனே எவர்க்கும் சிறந்த தலைவன் என்கிறார் கவிராஜ பண்டிதர். திறல் - தைரியம்.

மனிதனது உயர்வும் தாழ்வும் அவனுடைய எண்ணங்களைப் பொறுத்துள்ளன; மன நிலைக்குத் தக்க அளவே மேலோனாகவும் கீழோனாகவும் அவன் மேவி இருக்கிறான்.

தன் கருத்தை உயர்ந்த குறிக்கோளில் செலுத்தி வருபவன் உன்னத நிலையை அடைந்து உலகம் போற்ற விளங்குகின்றான்.

இத்தகைய உயர்ச்சியும் புகழ்ச்சியும் உள்ளத் திண்மையால் உளவாகின்றனவாதலால் அந்த மனத்திட்பத்தின் மகிமையை இது உணர்த்துகின்றது.

கருதித் தொடங்கிய வினைகளில் இடர்கள் எதிர்ந்தால் அவற்றைக் கண்டு கலங்காமல் துணிந்து முயலுதலை ’எண்ணம் தளராமல்’ என்றது. இங்ஙனம் அயராது முயல்பவன் உயர்வினை அடைந்து கருதிய பலன்கள் கைவரப் பெறுகின்றான்.

உள்ளம் தளராமல் ஊக்கி முயலும் உறுதியாளன் எல்லாச் செல்வங்களையும் எளிதின் எய்துதலால் அவன் அரிய வலியுடையனாய்ப் பெரிய மதிப்பை அடைகின்றான்.

அரியன செய்யும் ஆண்மை அதிசய வென்றியாய் வருகின்றதால், அவன் துதி செய்யப் பெறுகின்றான். மனித வாழ்க்கையில் அப்பேறு அவனுக்குப் பேரின்பம் ஆகின்றது.

The great pleasure in life is doing what people say you cannot do. - Bagehot

’செய்ய முடியாத அருமையுடையது என்று உலகம் சொல்வதைச் செய்வதே ஒருவனுக்குப் பெரிய இன்பமாம்' என வால்டர் பேஜாட் என்பவர் இங்ஙனம் கூறியிருக்கிறார்.

செயலினாலேதான் ஒருவனது இயல்பும் உயர்வும் தெரிகின்றன. எண்ணியதை எண்ணியபடியே எய்தும் திண்ணியனை மண்ணவள் மகிழ்வாள் என்றது; கரும வீரனாய்ச் சிறந்து நிற்கும் அந்த ஆண்மையாளன் தான் பிறந்த நாட்டிற்கு உயர்ந்த மேன்மையை விளைத்தலால் அவனைத் தனது குலமகன் என நிலமகள் உளம் உவந்து கொள்ளும் உரிமையை உணர்த்தியது.

பிறந்த குடிக்குப் பெருமையை விளைக்கும் பிள்ளையைப் பெற்றவள் மகிழ்ந்து போற்றுதல் போல் வெற்றி வினையாளனை உற்ற நாடும் மற்றவரும் உவந்து கொண்டாடுகின்றனர்.

உயர்ந்தோர் எல்லாரும் அவனது உறவினை நயந்து உரிமை புரிந்து வருகின்றனர்.

நேரிசை ஆசிரியப்பா

விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்
வல்சி கொண்டளை மல்க வைக்கும்
எலிமுயன் றனையர் ஆகி உள்ளதம்
வளன்வலி யுறுக்கும் உளமி லாளரொடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ
கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்றவன் உண்ணா தாகி வழிநாட்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்(து)
இருங்களிற்(று) ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்(து)
உரனுடை யாளர் கேண்மையொ(டு)
இயைந்த வைகல் உளவா கியரோ. 190 புறநானூறு

இது சோழன் கல்லுருத்திரன் என்னும் வீரன் கூறியது. சிறு தானியத்தை வளையுள் பதுக்கி வைக்கும் எலி போலும் அற்பர் உறவு அணுகாது ஒழிக, என்றும் தளரா ஊக்கத்துடன் பெரிய யானை வேட்டையாடும் புலிபோல் யாண்டும் அரிய வினைகளை மூண்டு முடிக்கும் ஆண் தகைமையாளர் கேண்மை எனக்கு நாளும் உளவாக என அவன் விழைந்து வேண்டியிருக்கும் நிலை நினைந்து சிந்திக்கத் தக்கது.

உள்ளம் தளராத உரனுடையாளரை யாவரும் உவந்து கொள்ளுகின்றார். நாட்டுக்கும் மனித சமுதாயத்திற்கும் அவர் ஓர் எடுத்துக் காட்டாய் இலங்கி நிற்கின்றார்.

உள்ளத் திண்மையும் உணர்வும் வாய்ந்த நல்ல ஆண்மையாளரால் ஒரு தேயம் மேன்மை அடைதலால் அவர் உலகிற்குத் தலை மக்களாய் நிலவுகின்றார்.

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே. – 187 புறநானூறு

'ஓ நிலமே! நீ நாடு ஆயினும், காடு ஆயினும், பள்ளமாயிருந்தாலும், மேடாயிருந்தாலும் எங்கு நல்ல ஆண்மக்கள் உளரோ அங்கே நீ நல்லவளாயிருக்கின்றாய் எனப் பூமிதேவியை நோக்கி ஒளவையார் இவ்வாறு கூறியிருக்கிறார், அவல் – பள்ளம், மிசை - மேடு. நிலத்திற்கு மதிப்பெல்லாம் அதில் உள்ள ஆண்மையாளர்களைப் பொறுத்திருக்கின்றன என்பது கருத்து.

That country is the fairest which is inhabited by the noblest minds. - Heroism

பெருந்தகையாளர் நிறைந்துள்ள நாடு சிறந்த அழகுடையதாய் உயர்ந்து விளங்குகின்றது' என்னும் இது ஈண்டு எண்ணக்கக்கது.

ஆன்ம ஒளியை அவியாது பேணுக
மேன்மை விளையும் மிகுந்து.

வீட்டுக்குத் தூண்கள் போல நாட்டுக்கு நல்ல ஆண்கள் உறுதி புரிந்துள்ளனர். ஆள் என வந்துள்ள .நீ அப்பெயரியல்புக்குத் தக்கபடி உயர் நிலையில் ஓங்கி நில். உள்ளத்தின் அளவே உயர்வாதலின் எண்ணங்களை உயர்த்துக; இடர்களுக்கு அஞ்சற்க; இத நலங்களை இயற்றுக, யாண்டும் உண்மையும் திண்மையும் உடையனாய் உயர் மேன்மை அடைக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jun-19, 9:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 89

சிறந்த கட்டுரைகள்

மேலே