செம்பவழ உதட்டின் சுவை
ஆண் :
கதிரோ முகிலோ கானகக் குயிலோ
கண்ணங்கருமைக் கொண்ட காவியச் சிலையோ
தேடுது மனமே உன்னை நாடுது தினமே
செம்பவழ உதட்டின் சுவை நான் அறியணுமே
பெண் :
செக்கு மாடாய் நீ தினம் சுற்றி வந்தாலும்
செண்டை மேளத்தோடே சேர்ந்து வந்தாலும்
நெட்டை உருவப்பையா நான் வர மாட்டேன் - நீ
நினைத்தப் படியெல்லாம் செயல்பட மாட்டேன்
ஆண் :
தத்தி தத்தி நடை பயலும் காட்டுக் கிளியே
தாவி தாவி ஓடி வந்து தந்திடு உனையே
தவிக்கின்ற என் உள்ளக் கூட்டின் தலைவியும் நீயே
தாரமாக வந்திட நீ சம்மதிப்பாயோ
பெண் :
நாணல் போன்ற உருவத்தோடே நகர்கின்றவனே
நண்டைக் கண்டால் ஓடி சென்று ஒளிந்து கொண்டாயே
பெண்ணின் மேலே ஆசை வந்தால் துணிவு வரணுமே
பெரிதாக உழைக்க உடலில் உறுதி கொள்ளணுமே
--- நன்னாடன்