காமமும் கம்பனும்- ----ஒரு காலைநேரம்-------------------------------------
கம்பராமாயணம் போன்ற பெருநூல்களை தொடர்ந்து படிப்பது இயலாது. பழங்காலத்தில்கூட ஒரு ஆசிரியரிடமிருந்து நாள்தோறும் சில பாடல்கள் என பாடம் கேட்பதையே செய்துவந்திருக்கிறார்கள். இன்றைய சூழலில் அது இயல்வதல்ல. நடைமுறையில் ஒன்று செய்யலாம். கம்பராமாயண நூலை எப்போதும் வாசிப்புமேஜையருகே வைத்திருக்கலாம். கண்திரும்பும்போதெல்லாம் பார்வையில் படும்படி. என் மேஜையருகே நாலாயிர திவ்ய பிரபந்தமும் இருக்கும். சிலகாலம் சீவக சிந்தாமணி இருந்தது. ஒருநாளில் அதிகம்போனால் ஐந்து பாடல்கள் வீதம் படிப்பதே சிறந்தது.
ஆனால் படிப்பதைப்போலவே யாரிடமாவது சொல்லிச் சொல்லி பரவசமடைவதும் முக்கியமானது. என் முதல்இலக்கு நாஞ்சில்நாடன். நள்ளிரவில்கூட அவரைக் கூப்பிட்டிருக்கிறேன். அவர் கம்பராமாயணப்பாடலை குறுஞ்செய்தியாகவே அனுப்புவார். சமீபத்தில் தூக்கி வளர்த்த தம்பி இறந்து நிலைகுலைந்திருக்கும்போதே ஒரு கம்பராமாயணப்பாடலையே அனுப்பியிருந்தார்.
‘..பட்டது பரிபவம் பரந்தது எங்கணும்
இட்ட இவ்வரியணை இருந்தது என் உடல்..”
என்ற அக்கவிதைவரி தம்பியை இழந்த ராவணனின் அகக்கதறல்.
வாசகனுக்கு வாழ்க்கை முழுக்க எல்லா தருணங்களுக்கும் கூடவே வருவது கம்பராமாயணம். அதன் நுண்ணிய சொல்லாட்சிகள், உக்கிரமான நாடக முகூர்த்தங்கள். ஆயினும் அது அடிப்படையில் உச்சநிலைகளின் இலக்கியம். கொண்டாட்டங்களும் சரி வீழ்ச்சிகளும் சரி அதில் சிகரங்களிலேயே காலூன்றி நிற்கின்றன. தமிழ்ப் பண்பாடு கண்ட மாபெரும் கனவு இக்காவியம்.
கம்பராமாயணத்தில் ஏனோ நான் நகர வர்ணனைகளையே அடிகக்டிப் படிக்கிறேன். அவற்றில் உள்ள செழிப்பும் அழகும் போகக் களியாட்டமும் விசித்திரமான ஒரு மனநிறைவுக்குக் கொண்டு சென்று அன்றாடவாழ்க்கையின் எளிய சுழற்சியை சகித்துக் கொள்ளச் செய்கின்றன.
இன்று வாசித்தவை.
முளைப்பன முறுவல்! அம்முறுவல் வெந்துயர்
விளைப்பன! அன்றியும், மெலிந்து நாள்தோறும்
இளைப்பன நுண் இடை !இளைப்ப, மென்முலை
திளைப்பன, முத்தொடு செம்பொன் ஆரமே!
முளைக்கும் மென் முறுவல். அவை உருவாக்கும் காதலின் வெந்துயர். நெளிந்து நெளிந்து நாள்தோறும் இளைக்கும் மெல்லிடைகள். அவை இளைக்க இளைக்க மென்முலைகள் மேல் திளைத்தன செம்பொன் ஆரங்கள். திளைத்தல் என்ற சொல்லாட்சியில் நிலை கொண்டது என் மனம்.
இன்று ஆரங்களை அணியும் பெண்கள் குறைவு. என் பதின்வயதில் சரப்பொளி ஆரம், மாங்காய் ஆரம், புளியிலை ஆரம், காசு ஆரம் போன்ற கனத்த பொன் நகைகளை அணிந்து விழாக்களுக்கு வரும் பெண்களை நிறையவே கண்டிருக்கிறேன். ஆரங்கள் தனித்தனி சில்லுகளாக ஒன்று மீதொன்று படிந்து அசைவில் நெளியும் தன்மை கொண்டவை. திரண்ட தோள்களும் ததும்பும் நிறைமார்புகளும் கோண்ட பெண்களுக்குரியவை. அவர்களின் அசைவில் அவை பொன்னிறப்பாம்பு போல நெளியும். பொன்னிறமான அருவிபோல இழியும். பொன்னிறப் பறவையின் இறகுபோல மெல்ல மறுஅடுக்குகொள்ளும்.
திளைத்தல் என்றால் தமிழில் நீந்தித்துழாவுதல் என்று பொருள். அது உருவாக்கும் அகச் சித்திரமே அற்புதமானது. தொல்தமிழிலும் மலையாளத்திலும் திளைத்தல் என்றால் கொப்புளங்கள் எழ கொதித்தல் என்று பொருள். முலைகளின் மேல் நடையின் அசைவில் ஆரம் கொள்ளும் அசைவுக்கு அச்சொல்லைத் தெரிவுசெய்தது கம்பனின் ஆறாத பெருங்காமம் அன்றி வேறென்ன?
நடையின் அசைவையே அடுத்துவரும் பாடல்களிலும் கண்டேன். கம்பனின் கவிதைக்கு மட்டுமே அசைவும் கொந்தளிப்பும் சுழிகளும் உண்டு என்று படுகிறது. தெரு நிறைத்து முன்னும் பின்னும் செல்லும் பெண்களின் அசைவுகள் அலைகள் ஒளிரும் ஒரு நதியோட்டம்போல நிறைந்த அயோத்தி நகர். பதின்பருவத்து இளைஞனின் கண்கள்போல பசியடங்காது தொட்டுத் தொட்டுத் தாவிச்செல்லும் கவிஞனின் சொற்கள். எங்கும் நிற்காத அவற்றின் பதற்றமும் தவிப்பும்.
இடையிடை எங்கணும் களி அறாதன
நடை இள அன்னங்கள், நளின நீர்க்கயல்!
பெடை இள வண்டுகள்! பிரசம் மாந்திடும்
கடகரி !அல்லன, மகளிர் கண்களே
இடையிடையே எங்கு நோக்கினாலும் மகிழ்ச்சி குன்றாத்து நடக்கும் இள அன்னங்கள். நளினமான மீன்கள். கன்னியிள வண்டுகள். தேன்குடித்த மதயானைகள். அத்துடன் பெண்களின் கண்கள்! பொருளுரையில் இவை நகரில் தென்பட்ட தனிக்காட்சிகள் மட்டுமே. கவிதையின் கண்களுக்கு இவை எல்லாமே பெண்கள் அல்லவா? நடையிள அன்னங்கள் நளினநீர்க்கயல்கள்! சொல்லும்தோறும் லயம். நடை இள அன்னங்கள், நளின நீர்க்கயல்!
‘கஜ ராஜ விராஜித மந்தகதி’ என்று பெண்ணின் நடையை காலிதாஸன் சொல்கிறான். மதயானை போல் நடக்கும் மெல்லிய நடை. இங்கே கம்பன் தேனுண்ட மதயானை என்கிறான்.
தழல்விழி ஆளியும் துணையும் தாழ்வரை
முழைவிழை, கிரிநிகர் களிற்றின் மும்மத
மழைவிழும் ,விழும்தொறும் மண்ணும் கீழுற
குழைவிழும் , அதில் விழும் கொடித்திண்தேர்களே!
தீவிழி கொண்ட சிம்மமும் துணையும் மலைக்குகைகளைத் தேடும். களிற்றுயானையின் மதநீர் விழுந்து மண் நனைந்து குழிவிழும். அதில் கொடித்தேர்கள் வழுக்கிப்புதையும். ஒரு தெருச்சித்தரிப்புதான். ஆனால் கொந்தளிக்கும் காமத்தினூடாகச்செல்லும் உக்கிரமான சித்திரங்களை வாசகன் இவ்வரிகள் வழியாக வாசித்தெடுக்க முடியும்.
எங்கோ மலைக்குகைகளில் காமம் கொண்ட மிருகங்கள் புணர்கின்ற நேரம். ஆற்றாப்பெருங்காமநீர் விழுந்து விழுந்து குழைந்த மண். அதில் வழுக்கித்தடுமாறி நின்றுவிடுகிறது கொடித்தேர்.
தமிழின் எந்தப் புதுக்கவிதையில் இத்தனை நுண்ணிய ஆழ்பிரதி நிகழ்ந்திருக்கிறது? இவ்வரிகளினூடாகச் செல்லும்தோறும் தமிழில் எழுதபப்ட்ட மிக உச்சமான காமச்சித்தரிப்பு இது என்ற எண்ணம் ஏற்படுகிறது. மறைக்கும்தோறும் தீவிரம் கொள்வது காமம். பொதிந்து சொல்லும்தோறும் விரிந்தெழுவது காமத்தின் கவிதை.
Save
Share