ஆண்டவனாகிட அலைபவர்கள்
==================================
எதிர்வரும் தேர்தலை எண்ணிக் கொண்டு
எம்மிட மிருப்பதை ஏய்த்து வாங்கப்
புதிரென ஆடிடும் போலி ஆட்டம்
போட்டிடும் நாட்டவர் போக்கு காணீர்
சதிகளை இவர்களும் செய்து விட்டு
சத்திய சீலரின் சகாவைப் போன்று
விதிபல விட்டதன் வேரை நீக்கி
விட்டது தாமென வேறு சொல்வர்.
==
சண்டையை எழிலுறச் செய்ய விட்டுச்
சமரசம் செய்ததை சீர்ப்ப டுத்தி
மண்டையு டைந்தவர் மீது சற்று
மருந்தினை பூசியே மாறி மாறி
கண்கவர் புகைப்படக் காட்சிக் காக
கவலைமு கம்வர காட்டிக் கொண்டு
வண்டெனப் பறக்கிற வர்க்க மிங்கு
வருகிற நாள்வெகு தூர மில்லை.
=
இருக்கிற வளங்களை எல்லாம் விற்று
ஏப்பமும் விட்டவர் எம்மை விற்று
வருகிற வரவினை வாரிச் சுருட்டி
வாழ்க்கைத் தரமதை மேலும் கூட்டி
பெருகிடும் வசதியின் பேரால் மீண்டும்
பெறுமதி மிக்கதாய் பாரில் வாழும்
அருமையைப் பெற்றவ ராகி நாளும்
ஆண்டவ னாகிட அலைகி ராரே
==
மெய்யன் நடராஜ்