மரத்தின் ஈரம்

**மரத்தின் ஈரம்**

ஒரு இடுகாட்டின்
ஓரம்
இருந்தது
அந்த மரம்

என்றோ ஓர் காகம்
தின்று போட்ட
எச்சதின் மிச்சத்தில்
முளைத்த மரம்

இறந்தோரின்
அடக்கத்தின்
போது
தூக்கி வீசப்படும்
மாலைகள் அதன் மீது
விழுவதுண்டு

விழுந்த மாலைகள்
உதிர்ந்து, உலர்ந்து
உரமாகின

மழைக்குப் பஞ்சமில்லை
செழிப்பான இடம் தான்

ஆனால்
நடமாடும் மனிதர்களை
கண்டால் தான்
பிடிப்பதில்லை

பாடையில் மேல்
கால்கள் கட்டப்பட்டு
வரும்போதுள்ள
அமைதி
அனுதினமும்
மனிதனிடத்தில்
இருந்தால்
நன்றாக
இருக்குமென்று
நினைப்பதுண்டு

தன் கண்முன்னே
உயர்ந்த இரண்டு மரங்கள்
வெட்டப்பட்டதால்
வந்திருக்கலாம்
இந்த வெறுப்பு

இல்லை
யாரோ
ஆடு விரட்ட
தன் கிளை
ஒடிக்கப்பட்டதால்
வந்திருக்கலாம்
இந்த வெறுப்பு

இல்லை
யாரோ ஒருவன்
தன் காதலியின் பெயரை
கல்லால் செதுக்கிய
போது ஏற்பட்ட வலியால்
வந்த வெறுப்பாக
இருக்கலாம்

எப்படி வந்தாலென்ன
வெறுப்பு வெறுப்புதானே

வெறுப்பு கொண்ட
அந்த மரம்
இறந்து வரும்
மனித உடல்களை
கண்ட போது
மட்டும்
மனம் வருந்திற்று
தன் கிளைகளை
அசைத்து அவர்கட்கு
விடை கொடுத்திற்று…

-சரண்

எழுதியவர் : சரண் (2-Jul-19, 8:30 pm)
சேர்த்தது : Saran
Tanglish : maratthin eeram
பார்வை : 305

மேலே