தாயின் மடிதான் உலகம்
ஆறு மாத பிள்ளையாய்
அவள் வயிற்றில் நான் விளையாட…
செல்லமாய் வயிற்றில்
எட்டி மிதிக்க…
வலியையும் சுகமாய் அனுபவித்தவள்
தன் கண்ணீரையும்
ஆனந்த கண்ணீராய் மாற்றியவள் என் தாய்…
என் கண்கள் இவ்வுலகை பார்க்க
அவள் தன் கண்களை மூடுகிறாள்…
நான் மூச்சிக் காற்றை வெளியே விட
அவள் தன் மூச்சை அடக்குகிறாள்…
வெளியே வந்த எனக்கு தொடங்குகிறது முதல் ஆயுள்…
என்னை பெற்ற அவளுக்கோ இது இரண்டாம் ஆயுள்…
முதல் காதல் பிரிந்து விடும் என்பார்கள்…
ஆம்…
பிரிந்தோம்…
நானும் என் தாயின் தொப்புள் கொடியும்…
மொழி தெரியாத எனக்கு என் மழழை நாவில்
வந்த முதல் வார்த்தை
அம்மா…
ஆயிரம் கைகள் என்னை தொட்டாலும்
என் தாயின் கை வாசம் மட்டும்
மழை துளி பட்ட மண் வாசனையாய்
உணர்கிறேன்…
பறக்க முயற்ச்சிக்கும் பறவை குஞ்சாக
நான் நடக்க பழகி இடரும் வேளையில்
பலம் தாங்காமல் விழும் திருமண பந்தலுக்கு
கொடுத்த பந்த கால் முட்டு போல
தூக்கி பிடிக்கிறாள்…
அடம் பிடித்து கண்ணீர் சிந்திய பின்
பாலும் சோறும் கலந்து…
என் வாய் திறந்து அவள் பொற் கைகளால்
ஊட்டி விட…
என் கண்ணீர் கலந்த பால்
உப்பு கரிக்க…
உப்பு கரித்த பால் அவள் கைகளால் தேனாக இனிக்கும்…
விவரம் தெரிந்த வயதில் அவள் அறிவுறைகள் கசக்க…
கோபம் தலைக்கேறி நான் பேசாமல் போக…
நள்ளிரவில் வீடு திரும்பும் போது
இருள் பரவிய வீட்டில்
அவள் கண்களின் கண்ணீர் மட்டும் விடி விளக்கில்
மின் மினி பூச்சியாய் மின்ன…
கூழாங்கள் சிக்கிய தண்ணீர் குழாய்
ஏக்கத்துடன் தண்ணீரை வெளிக்கொணர்வது போல்…
அடி தொண்டையிலிருந்து கண்ணீருடன் பொங்கிய வார்த்தைகள்
என்னை பார்த்து கேட்டது
சாப்பிட்டியா..?
புராணங்களில் சொன்ன வார்த்தைகள்
கடவுள் எளிதாக மன்னிக்க கூடியவர்…
புராணங்களை எழுதியவர் யாரை கடவுள் என
குறிப்பிடுகிறார் என்று புரிந்தது இப்போது…
ஏழை பணக்காரன்
கருப்பு வெள்ளை
என பிரிவினைகள் காட்டி
படைத்த கடவுளின் மத்தியில்
தனது இரு குழந்தைகளையும்
பிரிவினைகள் பார்க்காமல் வளர்க்கும்
உண்மை கடவுள் நீ...
என் திருமண வாழ்வில்
துனைவியுடன் நான் பிண்ணி பினைக்க
தாயின் பாசத்தை உதரி விட…
துனைவியுடன் ஏற்ப்பட்ட கோபத்தில்
உண்ணாமல் தூங்க…
அழைக்கிறாள் மீண்டும் அதே குறளில்
என் தாய்…
சாப்பிட்டியா…?
ஒரு தாயின் சாப்பிட்டியா என்ற கேள்வி
இரு தருணங்களில் கண்ணீர் வர வைக்கும்…
சண்டையிட்டு பேசாத சிறு வயதில்…
துணைவி வெறுக்கும் திருமண வயதில்…
பேரு கால வயிற்றில்
சாப்பாடு முகம் சுழிக்க…
உலகமே தலை கீழாக சுற்ற…
என் தாய் அடைந்த வேதனைகள்
இப்பொழுது தெரிகின்றது…
என் துணைவியும் தாயாகும் போது…
எத்துணை ஆயுள்கள் சென்றாலும்
உன்னை விட மாட்டேன்…
விட்டு கொடுக்கவும் மாட்டேன்…
என்னை செதுக்கி பாதுகாத்த தாயே…
என்றும் தாயின் மடிதான் உலகம்…